Saturday, December 4, 2010

தாத்தா சாமி!

                                             தாத்தா சாமி!



      கண நேரமும் வீணாக்காமல்
      காசு காசென்று
      காலமெல்லாம் அலைந்தேன்:
      காலத்தின் நுனியில்
      கற்பனையின் சுகமென்ன வென்று
      கற்கண்டுச்சொல் பேரன் சொன்னான்;
      சொன்னவன்“ரிஷி”யென்றால்
      நான் பெற்றுது ஞானாபோதேச மன்றோ!
     ஞாலத்தில் தகப்பன் சாமி மட்டுமா உண்டு?
      தாத்தா சாமியும் உண்டு தானே?


        


      விடுமுறைக்கு என் வீட்டிற்கு வந்திருந்த அந்த சுட்டிப்பையனின் கண்கள் ஒரு நாள் புத்தக அலமாரியில் எப்போதோ நான் வாங்கி வைத்திருந்த ஒரு பழைய தண்ணீர் வண்ணப்பெட்டியின் (water colour box) மேல் தாவின. வண்ணப்பெட்டியை கையில் பிடித்தபடி என் மனைவியிடம் ,“பாட்டி ,குடிக்க தண்ணீர்!” என்றான். கொஞ்சம் குடித்துவிட்டு தம்ளரும் கையுமாக என்னிடம் வந்து ஒரு பேப்பர் வாங்கிக் கொண்டு போனான். வேறு எதோ வேலையில் மூழ்கிப் போயிருந்த நான் அவனைக் கவனிக்க வில்லை! வேலை முடிந்ததும் அவனைப் பார்த்தேன். ஐயா வெகு மும்முரமாக நான் கொடுத்த வெள்ளைத்தாளில் எதையோ “கிறுக்கிக்” கொண்டிருந்தார். ஒரு பதினைந்து மணித்துளிகள் கழிந்திருக்கும், “தாத்தா,பாட்டி,அம்மா, அப்பா எல்லோரும் இங்கே வாங்க!“ என்று அழைத்தான்.கையிலிருந்த ஓவியத்தை எங்களிடம் காட்டி, “இது என்ன?” என்றான். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பொடியன் இது,“ ரெயின்போவும் டைனாஸரும்!“ என்றான். அடுத்த கணம் அவன் கன்னத்தில் முத்த மழை பொழிந்தது!

கற்பனை அழகு!
குழந்தையின் கற்பனை கொள்ளை அழகு!!

     என் அருமைப் பேரன் ரிஷி இந்த ஓவியத்தை வரைந்த போது அவனுக்கு மூன்று வயது;இப்போது அவனுக்கு வயது ஏழு! எங்கள் வீட்டு வரவேற்பறைச் சுவற்றை இன்னமும் அலங்கரிதுக் கொண்டிருக்கிறது ரிஷியின் இந்த அற்புத ஓவியம்!

    உங்கள் வீட்டிலும் குட்டீஸ் இருக்கலாமே! அவர்கள் வரைந்த ஓவியங்களை உங்கள் வீட்டு வரவேற்பறைச் சுவற்றில் ஓட்டி வையுங்கள்!!


   வரவேற்பறைச் சுவர்களெல்லாம்
   வண்ணம் பூசிக்கொள்வது
   குட்டிப் பசங்களின்
   வண்ண ஓவியங்களைத்
   தாங்கிக் கொள்வதற்காகவன்றி
   வேறு எதற்காக?



  அன்புடனும் மகிழ்ச்சியுடனும்,

  லினிரா.


Sunday, October 31, 2010

தீபாவளிச் சட்டை

தீபாவளிச் சட்டை

கடைகடையாய்
ஏறி இறங்கி,
கலர் பார்த்து,
கட்டம் பார்த்து,
கடைக்கு வந்த பெண்களையும்
அவ்வப்போது பார்த்து,
கடைசியில் ஒரு சட்டை வாங்கினேன்,
தீபாவளிக்கு!


வீட்டுக்கு வந்து,
புதுச் சட்டையை வைக்க
அலமாரியைத் திறந்தேன்;
இரண்டு மாதங்களுக்கு முன்
பிறந்த நாளுக்கென
வாங்கிய சட்டை என்னைப் பார்த்து சிரித்தது;
(அதே கலர் ,அதே கட்டம்!)

Monday, October 25, 2010

                                                நாற்றுக்கும் உண்டோ நாணம்?


                                                              மேகக் காதலனின்
                                                              முத்த மழையில்
                                                              நாணிக் கிடக்கும்
                                                              நாற்றுகள்!

                                                                                   -லினிரா

                                                            

Sunday, September 5, 2010

கட்டப்பை வாழ்த்து



வலைப்பூ படி(றி)க்கும் போது,

கையில் காயம் படலாம்:

கழுத்தறு பட்டு,

இரத்தம் சொட்டலாமோ?

வசன-கவிதை-வார்த்தை விளையாட்டு

இனி இல்லை!

ஆயினும் அவ்வப்போது,

குறுங் கவிதை

ஒன்றிரண்டு கிளம்பி வரும்

குழந்தை நடைபோல்!! குற்றம் பொறுத்து,

குறுஞ் சிரிப்பு சிந்திடுவீர்!!!



“ஆஹா, தென்புறச் சுவரும்

மனைவியின் ஒப்பனை மேடையும்

கைகுலுக்கும் சந்திப்பில்,

ஒருக்களித்துச் சாய்ந்து

ஒய்யாராமாய் ஒருமாதிரி

நின்றிருந்தது அது

நிறைமாத கர்ப்பிணி போல்!!”

என்று சொன்னேன் அல்லவா? அது வேறொன்றுமில்லை, ஒரு கட்டப்பைதான்!!



கட்டப்பை பற்றி என்றேனும் நீங்கள் கருத்தோட்டம் செய்ததுண்டா?

இப்போதுசெய்யலாம். (அதாவது, மனைவியின் துணிமணிகளை மடித்து வைப்பது,

சமைக்கும் போது வெங்காயம் நறுக்கிக் கொடுப்பது போன்ற வேறு “தலை” போகிற வேலை எதுவும் இல்லாத பட்சத்தில்-மனைவியைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்/ல்வதாக, பாசக்கார, மீசைக்கார மைத்துனரிடம் போன சென்மங்களிலேயே சத்தியம் செய்து கொடுத்து ,அதை இனி வரும் சென்மங்களிலும் கடைபிடிக்கப் போகிறவர்கள் அல்லவா நீங்களும், நானும்! (பத்தினிவான்கள் நாம் இருப்பதாலன்றோ வருடம் தவறாமல் அக்னி நட்சத்திரம் வருகிறது !!)





இனி, விஷயத்திற்கு:



கட்டப்பை கடவுள் தந்த பை அல்ல! அது மனிதனின் மகத்தான கண்டுபிடிப்புகளுள் ஒன்று! கையில் வைத்துக்கொண்டு அலையும் அலைபேசிக்கும், மடியில் வைத்துக் கொஞ்சிவிளையாடும் மடிக் கணிணிக்கும் சற்றும் குறைந்ததல்ல அதன் மகத்துவம்! க.பையைக் கண்டு பிடித்ததும், மனிதன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்:“இனி எல்லாம் சுகமே!!”



காற்று புகாத இடமில்லை!

கட்டப்பை போகாத பயணமில்லை!!

கட்டை வண்டிப் பயணமானாலும், கப்பல் பயணமானாலும், கார் பயணமானாலும், புகைவண்டிப்பயணமானாலும், பேருந்து பயணமானாலும், கட்டாயம் நம்முடன் கட்டப்பை இருக்கும் கர்ணனின் கவச குண்டலங்களை போல்!! இவ்வளவு ஏன், விமானப் பயணங்களிலும் கூட அது நம்மை விட்டுப் பிரிவதில்லை!!



புதிதாய் திருமணமான பெண் புகுந்த வீடு புறப்படும்போது, உற்ற தோழியாய் உடன் வருவது கட்டப்பை!



புகுந்த வீட்டிலிருந்து அவள் கண்ணைக் கசக்கிகொண்டு பிறந்த வீடு திரும்பும்போதும் அவள் கூட வருவது கட்டப்பை!! பெண் சொல்லும் கண்ணீர்க் கதைகள் கொஞ்சம் ; கட்டப்பை சொல்லாமல் சொல்லும் கதைகள் ஏராளம்!!



சூட்கேசில் பொருள்களை வைக்கிறோம்! கைப்பையில் பொருள்களை வைக்கிறோம்! ஆனால் கட்டப்பையில் யாரும் பொருள்களை வைப்பதில்லை:

அதில் பொருள்களை திணிக்கிறோம். அதுவும் எப்படி? வேறு எதிலும் வைக்க முடியாத பொருள்களை அல்லவா அதில் திணிக்கிறோம் !



பிரயாணம் கிளம்பும் போது, உங்களுடைய மடிப்புக் கலையாத சட்டைகள், கால் சராய்கள் ,உள்ளாடைகள், குழந்தைகளின் பொம்மைகள், பால் பவுடர் டப்பா, பீடிங் பாட்டில், பையனுடைய கிரிக்கெட் பந்து, பயணத்தின் போது உங்கள் மனைவி படிக்க பத்திரிக்கைகள், தண்ணீர் பாட்டில்கள், நொறுக்குத்தீணி சமாச்சாரங்கள், சாப்பாடு தூக்குகள் பழங்கள்- இப்படி பல பொருட்களை அதில் கொட்டுகிறோம்! இப்படி கர்மமே கண்ணாக இருக்கும்போது, சமையல் அறையிலிருந்து மன(ண)ம் கொண்ட/ற மகாராணியின் கட்டளை காற்றில் பறந்து வருகிறது :“ஏங்க! என் பாத்ரூம் சப்பலையும் ஒரு பேப்பரில் சுருட்டி அந்த கட்டப்பையில் போடுங்கள்!” கூடவே “இதெல்லாம் கூட சொல்லணும், என்ன ஜென்மமோ, எனக்கென்னு வந்துவாய்சிருக்கே, எல்லாம் எங்கப்பனைச் சொல்லணும்!! என்று தலையில் அடித்துக்கொள்வதும் கேட்கிறது! (தமிழ் மாட்ரிமோனி.காம் பெண்மணியைப் போல)!!



பாவம், உங்களால் என்ன செய்யமுடியும்- கட்டப்பையை கட்டிப்பிடிதுக் கொண்டு,‘படைத்தானே உன்னையும் என்னையும் படைத்தானே’ என்று மெளன ராகம் இசைத்து, இரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்துவதைத் தவிர? சத்தம் போட்டு சலித்துக் கொள்ள முடியுமா ? - உங்கள் பயணச் சீட்டு எப்போதும் கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டதுதானே?



குரங்கு ஏற்றுக் கொள்ளாத கொம்பும் உண்டோ ?

கட்டப்பை இல்லாத வீடும் உண்டோ?

குடிசை யானாலும், கோடீஸ்வரன் கூட கோபுரமானாலும்,

கடை நிலை ஊழியரானலும் கவர்னர் மாளிகையானாலும்

எல்லோர் வீடுகளிளும் கட்டப்பை கண்டிப்பாக இருக்கும்!

இந்த விஷயத்தில் க.பை ஒரு

சமதர்ம, ஜனநாயக, சமத்துவ, சோஸலிச,கம்யூனிச

இன்னும் மிச்சமீதி இருக்கும் சொச்ச இஸ வாதி!

மாறி மாறி எடுக்கும் தோற்றத்தில் அது ஒரு இரசவாதி!!



எனக்கொரு சந்தேகம் : இருபத்தி நான்கு மாடிகளுடன் வீடு கட்டும் அம்பானி வீட்டிலும், தங்கத்தால் இழைக்கப்பட்ட குளியலறை கொண்ட ஷாருக்கான் வீட்டிலும் இருக்கும் க.பையின் கட்டைகள் ஒரு வேளை தங்கத்தால் செய்யப்பட்டு, வைரத்தால் இழைக்கப்பட்டிருக்குமோ?



மனித ஜாதியில் இரண்டின்றி வேறில்லை என்றான் பாரதி.

கட்டப்பையிலும் இரண்டு ஜாதிதான்:

ஒன்று, மூங்கில் குச்சி உள்ளது;

இன்னொன்று பிளாஸ்டிக் குழல் கொண்டது.

தனக்கு சேவகனாக வந்த கண்ணணைப் பற்றி பாரதி பாடுகிறான்:

“எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்!

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!!”

கட்டப்பையும் இடைச்சாதிதான்! ஆம்! மஞ்சள் பைக்கும் சாக்குப்பைக்கும்

இடைப்பட்ட ஜாதி அது! சாக்குப்பை போல அதில் பொருட்களை அடக்கலாம்!

மஞ்சள் பைபோல் அதை சுலபமாக எங்கும் எடுத்துப் போகலாம்!! சுருட்டியும்

எடுத்துப் போகலாம் வெகு ஸ்டைலாக! சுருட்டாமல் விரித்தும் எடுத்துப் போகலாம் கர்நாடகமாக!! வெயில் காலங்களில் தலைக்கு மேலே போட்டுக் கொள்ளலாம்! மழைக் காலங்களில் குடையாகவும் பயன்படுத்தலாம்!!

இவ்வளவு அற்புதமான கட்டப்பையை யாரும் காசு கொடுத்து வாங்குவதில்லை! அது , இயற்கையின் கொடையான மழையைப் போல, காற்றைப் போல நமக்கு இலவசமாகக் கிடைகிறது-துணிக்கடைகளில்!! கட்டப்பையை இப்படி இலவசமாகக் கொடுக்கலாம் என்று கண்டுபிடித்த புண்ணியவான் யாரோ? அவர் யாராயிருந்தாலும் கதிரவன் உதிப்பது நிற்கும் வரை கடல் நீர் வற்றாதவரை, வாழ்க வாழ்க !!!



இலவசமாக கிடைக்கும் எதையும் நாம் மதிப்பதில்லை. கட்டப்பை மட்டும் விதிவிலக்கா என்ன? அதையும் ஒரு பொருளாக மதிக்காமல் அதற்குள் என்னென்ன பொருட்களைத் போட்டு வைக்கிறோம்! எப்படியெல்லாம் பயன் படுத்துகிறோம்!! நண்டு, சிண்டுகளின் நானாவிதப் பொருட்கள், தட்டு முட்டு சாமான்கள, பழங்காலத்து “அருங்காட்சியகப் பொருட்கள், மனைவியின் செளவுரி , கிழிந்த வேஷ்டி, சட்டை, இன்னபிற துணிமணிகள், பழைய புத்தகங்கள், புகைப்படங்கள், இப்படி அதில் போட்டு வைக்கப்படும் பொருட்கள்தான் எத்தனை எத்தனை!!



சலவைக்கு அழுக்குதுணிகள் எடுத்துச்செல்ல,சலவை செய்யப்பட்ட மனைவியின் பட்டுச் சேலைகள் எடுத்துவர, காய்கறி வாங்க, ஆட்டுக்கறி, மீன், கோழி (உயிருடனோ,உயிர் இல்லாமலோ) வாங்கி வர, பேருந்தில், புகை வண்டியில், இடம் பிடிக்க, இவற்றில் பயணம் செய்யும் போது செருப்புகள் இப்படி அப்படி நகராமல் இருக்க, சமயத்தில் தலைவைத்துப் படுக்க, இப்படி கட்டப்பையை நாம் பயன் படுத்தும் விதம் கணக்கிலடங்காது!



கட்டப்பையை நீங்கள் வீட்டிலும், பயணத்தின்போதும் எங்கும் வைக்க லாம், எப்படியும் வைக்கலாம்! அதை செங்குத்தாக வைக்கலாம்; படுக்க வைக்கலாம்; சாய்த்தும் வைக்கலாம்! எப்படி வைத்தாலும் அது தன் சம நிலையை இழப்பதில்லை! தப்பித்தவறி, அதிகமாக அது “ போட்டு ” க்கொண்டு மட்டையனாலும், அது வாந்தி எடுப்பதில்லை!



கட்டபையில் நீங்கள் பொருட்களை போட்டுக் கொண்டே போகலாம்!

ஒரு போதும், அது போதும் என்று சொல்வதில்லை! எல்லாம் போட்டபிறகு,

ஒரு சின்ன சணல் கயிற்றால் அதன் குச்சிகளைக் கட்டிவிட்டால், எதுவும் கீழே விழாது! எப்படி கட்டிய பின்னும் அதன் இண்டு இடுக்களில் இன்னும் பலப்பல“சங்கதிகளை”ச் சொருகலாம்!



ஆயிரக்கணக்கில் பணம் போட்டு வாங்கிய சூட்கேசில் இஷ்டத்துக்கு பொருட்களைத் திணித்து விட்டு, ஜிப் போடமுடியாமல், குட்டீஸ்களை அதன் மேல் உட்காரச்சொல்லி, பி.பி. எகிற, ஒருவாறு மூடி எடுத்துக்கொண்டு போனால், பேருந்திலோ புகை வண்டியிலோ ஏறும்போது, அது “ஆஹா”

என்று வாய் பிளந்து கொள்ளு(ல்லு)ம் அவஸ்தயை எத்தனை முறை அனுபவித்திருக்கிறோம்! அதை விடக் கொடுமை,அந்தச் சமயத்தில் மனைவி பார்க்கும் கொலைப் பார்வை!! ஐயோ....................



மனைவி திருவாரூர் தேர் போலஆடி,அசைந்து முன்னே செல்ல,

அவள் பின்னே கணவன் தோளில் ஒன்றும், கையில் ஒன்றுமாக கட்டப்பை

களைச் சுமந்து செல்லும் பெரும் பேறு பெற்ற அரிய பிறவியை நீங்கள் எப்போதேனும் பார்திருக்கிறீர்களா? இல்லையெனில் உங்கள் வீட்டுக்கண்ணாடி

முன்பு கொஞ்சம் போய் நில்லுங்கள்!!



வீட்டில் எத்தனை க.பைகள் இருந்தாலும், துணிக்கடையில் புதிய

கட்டப்பை தரும் போது வேண்டாம் என்று சொல்ல, எந்தப் பெண்மணிக்கும்

மனசு வருவதில்லை! வெறும் 258.50 ரூபாய்க்கு மூன்று ப்ளவுஸ் பிட்டு வாங்கி விட்டு ஒரு மணி நேரம் பெண்கள் சண்டை போடுவதும், அந்தச் சாக்கில் அவர்களிடம் கடைப் பையன்கள் கடலை போடுவதும் கொள்ளையழகு!!



கடவுள்களில் பிள்ளையார் மட்டும் விதம் விதமாக அவதாரம் எடுக்கிறார் – பாற்கடலில் படுத்திருக்கும் பிள்ளையார், படிக்கும் பிள்ளையார்,

குடைபிடித்த பிள்ளையார், நடனமாடும் பிள்ளையார், நடக்கும் பிள்ளையார்,

அரச இலைப் பிள்ளையார், ஹஸ்த முத்திரையில் பிள்ளையார்-இப்படி விதம் விதமாக!! யார் கண்டது இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் கட்டபையுடன் உங்கள் வீட்டுக் கதவை தட்டினாலும் தட்டலாம்! அவர் கட்டப்பையில் பரிசுகள் பல இருக்கலாம்-கிருஸ்துமஸ் தாத்தா பையைப்போல!!எதற்கும்பொறிகடலை,எள்உருண்டை,கொழக்கட்டைகளுடன்(இனிப்பு மற்றும் காரம்) தயாராக இருங்கள் அவரை வரவேற்க!!!



இவ்வளவு சிறப்பு வாய்ந்த கட்டப்பைக்கு, இதோ என் கவிதாஞ்சலி:

(எச்சரிக்கை:எதற்கும் முதலுதவி பெட்டி அருகில் இருக்கட்டும்! கவிதை படிகும்போது கழுத்தில் குருதி பெருக்கெடுக்கலாம்!!)



கட்டப்பைக்கு ஒரு கவிதாஞ்சலி



ஏர் பேக் அழகென்பர், சூட் கேஸ் அழகென்பர் ;

கட்டப்பைதம் அழகு காணாதவர்.



சுருட்டி வைத்திருந்தால் கட்டப்பையழகு; அதனினும் அழகு

அதில் கண்டபடி பொருள்கள் திணிக்கப் பெறின்.





எப்பொருள் யார்யார் கொடுத்தாலும் அப்பொருள்

அனைத்தும் அப்படியே கொள்ளும் கட்டபை!



கட்டப்பை இலார் எல்லாம் தமக்குரியர்-கட்டப்பை உடையாரெ

என்பும் உரியர் பிறர்க்கு!



கட்டப்பையை காணல் இன்பம்; அதற்கின்பம்

கண்டபடி அதில் பொருட்களைத் திணித்தல்!



அகர முதல எழுத்தெல்லாம் கட்டப்பை

முதற்றே மற்ற பை.



எல்லாப்பபையும் பையல்ல; காசினியில்

கட்டப் பையே பை!



எல்லா தையலரும்(டைலர்) தையரல்ல

கட்டப்பை தைப்பவரே தையலர்.



வையத்துள் மனைவி சொல்கேட்டு க.பை சுமப்பவரே

வானுயரும் தெய்வத்துள் வைக்கப்படும்!



கைப்பை யென்ப கட்டப் பையென்ப இவ்விரண்டும்

கணவரென வாழும் உயிர்க்கு.



கல்யாணம் நடத்த ஐயர் எடுத்து வருவதும் கட்டபை!

கருமாதி சடங்கு செய்ய அவர் எடுத்து வருவதும் கட்டபை!!

,

வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

இது கவியரசிரின் கவலை!



கவியரசரே கவலையற்க! கடைசிவரை கட்டபை கூட வரும்!!

ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது அது! இறந்துபோன என் தந்தையின் அஸ்திக்கலசத்தை ஒரு கட்டப்பையில் வைத்துத்தான் பவானி ஆற்றில் கரைக்க எடுத்துப்போனோம்! அஸ்தியை கரைத்தோம்,ஆற்றில் கலசத்தை விட்டோம், கூடவே அதை எடுத்து வந்த கட்டப்பையையும்!

அன்புடன்,

லினிரா.

Sunday, August 22, 2010

வலைப்பூ வந்த கதை




அவன்,

எப்போதாவது வருவான்,

எங்கிருந்தாவது வருவான்,

ஏதாவது பேசிக்கொண்டிருப்போம்!

ஏதும் சொல்லாமலெ,

சட்டென்று மறைந்துபோவான்

செப்பிடு வித்தைக்காரன் போல!!



ஒரு நாள் அவன் வந்தான்

வாட்டமுற்று அமர்ந்திருந்தேன்

“வருத்தம் என்ன?” என்றான்.

“வலைப்பூ ஒன்று வேண்டும் !” என்றேன்.

“வண்ணப்பூ எது வேண்டும் சொல்,

வானிலிருந்தாவது பறித்து வருவேன்;

வலைப்பூ என்கிறாயே ,

வாழ்நாளிள் கேள்விப்பட்டதில்லையே!” என்றான்.

“வலைப்பூ என்றால் எண்ணங்களை

வலைத்தலமெனும்

இணையத்தில் சொல்லும் வழி!“என்றேன்.

அவன் சொன்னான்:

“எங்கள் ஊரில்

காசுமில்லை, கணிணியுமில்லை,

இதயங்களில்லை, இணையுமுமில்லை

எழுத்தும் இல்லை, எண்ணங்களுமில்லை

என் செய்வேன்?“.

கண்கள் கலங்க,

“கருத்துச் சொல்லும்

வலைப்பூவிற்கு, நண்பா,

வழியொன்று சொல் “ என்றேன்.

கண்கள் மூடி நின்றான் கண நேரம்;

கை பற்றி, கனிவுடன் சொன்னான்:

“சிங்கப்பூர் சென்று சிவனருள் பெற்றால்

சித்திக்கும் உன் சித்திரக்கனவு! ‘

”குடியிருக்கும் குக்கிராமத்திலிருந்து

குவலயம் போற்றும் சிங்கப்பூருக்கா? எப்படி?” என்றேன்.

“சேதி வரும் மகளிடமிருந்து, பொறுத்திரு!”

சொல்லிவிட்டு சடுதியில் மறைந்தான்.





அவன் சொல்லிப் போய்

ஆயிற்று ஆறு மாத காலம்!

சிங்கப்பூரில் வாழும்

சிந்தனைச் செல்வி அழைத்தாள் ஒரு நாள்:

(மகள் ஓர் ஆராய்ச்சி மாணவி)

“அப்பா என் வீட்டுதோட்டத்தில்

அழகாய் இன்னுமொரு பூ!

வந்து பாரேன்! வாழ்த்துச் சொல்லேன்!!” என்றாள்.

அகமெலாம் மலரச் சொன்னேன்:

“அவசியம் வருகிறேன் கண்ணே!!



சிங்கப்பூரென்ன ,

சிங்காரச் சென்னையா? இல்லை,

செம்மொழிக் கோவையா?

சிந்தையில் நினைத்தவுடன்

சிட்டாய் பறந்து போக?

அதற்கு,

பணம் புரட்ட வேண்டும் ,

பலதும் வாங்க வேண்டும்,

கடவுச் சீட்டு , நுழைவுச்சீட்டு வேண்டும்,

கவனிப்போர் அழைப்பும் வேண்டுமே!

இவையெல்லாம் பெற

இமைப்பொழுதென பறந்தன

இரண்டு மாத காலம்!



கடைசியில், ஒரு நள்ளிரவில்,

கடல் கடந்து பறந்து போனோம்!

நானும்,

என் கண்ணில் நீர் வழிந்தால்

எப்போதும் சிரிக்கும் என் மனைவியும்!!

மகள் பெற்ற மழலையைக் கண்டோம்,

மறைந்து போயின அலுப்பும் சலிப்பும்!



அடுத்த நாள் முதல்

அழகு நகர் சுற்றிப் பார்த்தோம்:

வானுயர் கட்டிடங்கள்,

வாமன மனிதர்கள்,

கறுப்புக் காஞ்சிப் பட்டுபோல்

கார்கள் வழுக்கிச் செல்லும் சாலைகள்,

சிரிக்க மட்டுமே தெரிந்த சிங்காரிகள்;

சிங்காரிகள் இடுப்பில்,தோளில்,முதுகில்,

அழத்தெரியா அழகுப் பாப்பாக்கள்,

சலிக்காமல் பார்த்தோம்!

சன்மம் எடுத்த பயன் பெற்றோம்!!



ஒரு நாள் முன்னிரவு,

முழு நிலா காய்ந்தது வானில்!

வண்ண விளக்குகள் ஓளிர்ந்தன நகரில்!

வான்நிலா அழகா, வண்ண ஊர் அழகா?:

விவாதித்துக் கொண்டிருந்தோம்

சிவா மாப்பிள்ளையும், நானும்.

சட்டென்று மனதில் மின்னலடித்தது,

“பட்” டென்று நண்பன் சொன்னது நினைவிற்கு வந்தது;

சற்றே தயங்கி, பைய, பைய,

மாப்பிள்ளையிடம் கேட்டேன்:

“மாப்பிள்ளை! எனக்கொரு வலைப்பூ வேண்டும்!”

“அதென்ன வலைப்பூ?” என்று அவர் கேட்க,

அதான் “பிளாக்” என்றேன்.

“பூ, இவ்வளவு தானா” வென,

புன்னகை பூத்தபடியே,

மடிக்கணியைத் தட்டினார் மாப்பிள்ளை!

அங்கே,

மலர்ந்ததொரு வலைப்பூ, எனக்கே எனக்காக!!

மாப்பிள்ளை சொன்னார்:

“மாமா! இதோ உங்கள் வலைப்பூ!

உண்மையில் இது பூவல்ல, பூக்கூடை!

உங்கள் எண்ணப் பூக்களை

கொட்டுங்கள் இதில் இனி!!”

மட்டற்ற மகிழ்ச்சியுடன்,

சாவிப் பலகையில் தட்டமுடியா நிறைவுடன்’

நன்றி சொன்னேன் அவருக்கு!



மெது,மெதுவாய் எண்ணங்களை

போட முயன்றேன் “பூக்கூடை” யில்,

போட்டது எதுவும் ஒட்டவில்லை அதில்;

கடைசியில் ஒட்டாய் கவிழ்த்தும் பார்த்தேன்

“கிழே” போன எண்ணங்களெல்லாம்

“மேலே பறந்து வந்து மீண்டும்

மனப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டது!

( நியூட்டனின் நான்காம் விதியோ?)



என்ன பிரச்சனை?

எனக்கும் புரியவில்லை பல நாள்!

அறிவு தெளிந்த நாள் முதல்

ஆத்ம நண்பனாய் பழகியவனை

அழைத்து அழைத்துப் பார்த்தேன்

அவன் வரவேயில்லை!

எங்கிருந்து அழைத்தாலும் வருவேன்,

எப்போது அழைத்தாலும் வருவேன்,

என்றானே,

“ஏனிப்படிச் செய்கிறான்?”

எண்ணி எண்ணி மருகினேன்!

மனம் தளர்ந்தேன்!!



அயலூரானால் விருந்து மூன்று நாள்,

அயல் நாடானால் அதுவே முப்பது நாளன்றோ?

புழுதி இல்லா சாலைகளும்,

சாக்கடை வாசமில்லாக் காற்றும்,

மின்வெட்டில்லா நாட்களும்,

இரைச்சல் இல்லா மனிதர்களும்,

சில நாட்களில் போரடித்துப் போனது!

முப்பதாம் நாள் முன்னிரவில்,

மீண்டும் பெற்ற மண்ணை மிதித்தோம்!





முப்பது நாள் கழித்து,

ஊர்ப்புழுதி உடம்பில் பட்டதும்

சிலிர்த்தது மேனி;

நாற்றம் நுழைந்தது

நாசி விடைத்தது:

இரைச்சல் கேட்டதும்

இரண்டு காதும் குளிர்ந்தன;

கட்டிங் அடித்துவிட்டு,

நடு நிசியில், தெருவில்

கட்டிப் புரண்டு கொண்டிருந்த

“நடுநிசிநாய்“ களைக் கண்டதும்

“பாரு”க்குள்ளே நல்ல நாடொன்றோ

நம் நாடெனெ மனம் கூத்தாடியது!!!



ஊர் வந்து சேர்ந்த உற்சாகம்

மெல்ல மெல்ல வடிந்தது;

நாட்கள் நகர, நகர,

“வலைப்பூ” என்னை வாட்டியது;

இடையிடையே நான் பெற்ற செல்வம்

சிங்கப்பூரிலிருந்து செல்லில் உசாவினாள்:

“அப்பா! வலைப்பூ இன்னும் பூக்கவில்லையா?”

(அமமாவிடம் பேச விஷயம்

ஆயிரம் இருந்தன அவளுக்கு;

ஆனால் என்னிடம் பேச

இதுமட்டுந்தான் விஷயம் அவளுக்கு!)

அருமை மகள் கேட்ட போதெல்லாம் சொன்னேன்:

“வலைப்பூ இன்னும் வாடவில்லை,

பொறுத்தார் வலைப்பூ ப(றி)டிப்பார் மகளே!”

சங்கடத்துடன் கழிந்தன பல நாள்,

சட்டென்று புரிந்தது ஒரு நாள்:

“வலைப்பூ தலைப்பூ வசமாகவில்லை!”

(வலைப்பூ அமைத்தவுடன் மாப்பிள்ளை கேட்டார்:

“மாமா, வலைப்பூ பெயர்?”

ஊரையே வெள்ளையடிக்கும் கித்தாப்பில் சொன்னேன்:

“பசுமை வானம்!”)

“பூ” கேட்டது வேறு,

“கொட்ட” நான் நினைத்து வேறு;

சொல்ல நினைத்த சேதிகளுக்கும்

தட்டி வைத்திருந்த தலைப்புக்கும்,

பொறுத்தமில்லை சற்றும்;

இடுப்பளவு முடியிருக்கும் சாமியாரை,

“இந்தா! மொட்டைச்சாமி!!”என்று அழைப்பது போல்!

கொட்ட வேண்டிய சேதிகள்

‘வேரில் பழுத்த பலா போல்’

கொட்டிக் கிடந்தன மனத்துள்!

வேண்டியது பொறுத்தமான பெயரொன்றே!

சிக்கல் புரிந்ததும் சிந்தையில் உற்சாகம்!

ஆனால்,

அறிவு வலையை,

ஆழ்கடலில் பல முறை வீசியும்

அகப்படவில்லை எந்த மீனும்;

வாரம் பல காத்திருந்தும்

வலைப்பூ தலைப்பூ சிக்கவில்லை!

கடைசியில், ஒரு நாள் பிற்பகல்,

கட்டிலில் பாதிக்கண் மூடிப் படுத்திருந்தேன்,

(தனியாக, அட, தனியாககத்தான், நம்புங்கள்!)

ஏ.சி.யின் சுகமான மென் குளிர் காற்றில்,

இதய ஓசையே இன்னிசையாக,

இன்பமானதொரு மயக்கத்தினிடையே,

இதயத்தின் உள்ளிருந்து ஒரு குரல்:

“முட்டாள்! படுக்கையறையைச் சுற்றிப் பார்,

முகிழ்த்திடும் தலைப்பூ”என்றது.

கண் விழித்தேன்,

கனவா? நனவா? முழித்தேன் சற்று நேரம்;



எதற்கும் முயன்று பார்ப்போமென

என் கண்களைச் சுழல விட்டேன்;

அறையைச் சுற்றிச்சுற்றி வந்தும்

அறிகிலேன் எதையும்!

கனவேதான் என முடிவு செய்து,

கண்களை மீண்டும் மூடினேன்.

“மடையா மீண்டும் பார்”

முழங்கியது அந்தக் குரல்!

“யார் நீ?” என்றேன்

“நண்பா! என்னையும் மறந்தனையோ?”

என்று கேட்டடான்; மறைந்தான்.





வாகான இரை தேடி

வானில் வட்டமிடும்

வல்லூறு போல்

என் கண்களைச் சுழற்றினேன் மீண்டும்

அங்குலம் அங்குலமாக;

எதிரே தெரிந்தது என் கணிணி மேஜை,

தகரமும் மரமும் கலந்து செய்த

வினோதக் கலவை அது!

எதன் மீது வைக்கலாம்

என யோசித்து,

அதன் மீது வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள்

ஐம்பது, அறுபது தேறும்!

சாவிப்பலகையில் சாவியை துழாவுவர் பலர்!

சாவிப்பலகையையே துழாவுபவன் நான்!!



என் கணிணி மேஜை,

எங்கள் வீட்டு அங்காடித் தெரு!!

அன்பு மனையாளின் அளவற்ற கிளிப்புகள்’

ஒட்டும் மற்றும் ஒட்டாத பொட்டுகள்-

இப்படி அவளின் அளவற்ற பொருட்களுக்கு

எப்போதும் இடமுண்டு அதன் மீது!

என் மழிப்பானுக்கும்,

அவர்தம் உற்றார் உறவினர்க்கும்

அவ்வப்போது அதன் மீது இடமுண்டு!!



க. மேஜைக்கு அடுத்தபடி,

கண்ணாடிக் கதவு,

கதவருகே நின்றால்

கண் முன்னே விரியும்

கண்கொள்ளாப் பச்சை வயல் காட்சி!

ஐந்தடி தூரத்தில் இரண்டு தென்னை மரங்கள்

அதில் ஓடி விளையாடும் ஜோடி அணில்கள்!

அவ்வப்போது சிந்து பாடும்

ஐந்தாறு தவிட்டுக் குருவிகள்!

கண்ணாடிக் கதவையொட்டி,

வலப்புறம் நகர்ந்தால்,

மனைவியின் ஒப்பனை“அரங்கம்”,

அப்புறம்,

வான் கடவுளர் வீற்றிருக்கும்

பூஜை அலமாரி

கடவுளர்க்கு கீழ் அடுக்கில்,

காலநேரம் பார்க்காமல் என்னுடன்

கதைத்திருக்கும் கணக்கற்ற புத்தகங்கள்;

அலமாரியை ஒட்டி இடப்புறம்,

கதைகள் பல சொல்லும் கட்டில்கள்;

கட்டிலுக்கு அப்பால்,

கடப்பக்கல் மேஜை!

ஆஹா! என்ன் இல்லை அதன் மீது?

மருந்து டப்பாக்கள்,

மாய்ந்து போன வானொலி,

எலி மருந்து, எறும்பு மருந்து,

சில்லறைப் பெட்டி,

சின்ன கணக்கு நோட்டு,

நாட்டு நடப்புச் சொல்லும்

நாளிதழ் ஒன்றிரண்டு,

நல்ல படம் போட்ட

வார இதழ் ஐந்தாறு,

பல்குச்சி டப்பா,

சொல் வடிக்கும் பேனா,

கைவிரல் பயிற்சிக்கு,

கையளவு கைப்பந்து,

( நன்றி:“சிக்குன் குனியா!”)

கைவிளக்கு, கசங்கிய காகிதங்கள்,

கோடாலித் தைலக்குப்பி,

களிம்புகள் சில,

இந்தக் குப்பைக்கு நடுவே,

குப்பத்து அரசன் போல்

அந்தக் கால “ஓரியண்ட்” மேஜை விசிறி;

இதற்கப்புறம் என் துணி பீரோ,

அதற்கடுத்து கழிவறைக் கதவு,

பின், தென் புறச்சுவரில்,

அலமாரியில்,

அருமை மனைவி

காசு போட்டு வாங்கிய

கணக்கற்ற சேலைகள்!

அப்புறம், வரவேற்பறைக் கதவு,

இவையன்றி, வேறெதையும் கண்டிலேன்!!





மனம் வெறுத்துப் போனேன்:

மனதில் மீண்டும் அந்தக் குரல்:

“நல்லவர் கூட பொய்யுரைப்பர்,

நானென்றும் பொய்யுரைப்பதில்லை!

நண்பா! மீண்டும் பார்!“



கடைசி முறையாக,

கண்களைச் சுழல விட்டேன்;

ஆஹா, தென்புறச் சுவரும்

மனைவியின் ஒப்பனை மேடையும்

கைகுலுக்கும் சந்திப்பில்,

ஒருக்களித்துச் சாய்ந்து

ஒய்யாராமாய் ஒருமாதிரி

நின்றிருந்தது அது

நிறைமாத கர்ப்பிணி போல்!!





(அது சரி,

அவன், எவன்?

என்கிறீர்களா,

கண நேரம்,

கண் மூடிச் சிந்தியுங்கள்,

அவன் எவனென்று புரியும்!)

அன்புடன்,

லினிரா.