Monday, September 5, 2011

வீடே! விடைகொடு!!





                     வீடே! விடைகொடு!!




சொந்த வீடொன்று

பணி செய்யும் இடத்திலேயே

இருக்க வேண்டுமென்று

இளமையில் நினைத்தேன்.

வீட்டுக் கடனா?”, வா வா வென்று

வாசலுக்கே வந்து அழைக்கும்

வங்கிகள் இல்லை அன்று!

அரசுக் கடன்,

கூட்டுறவு வீட்டு சங்கக் கடன் மட்டுமே!





அரசுக் கடன் பெற

ஆகும் ஓர் ஆயுட்காலம்!

ஆதலால்,

கூட்டுறவுக் கடன் வாங்கினேன்!

அது,

ஆனைப்பசிக்கு சோளப்பொரி!

“இன்னும் இன்னும் பணம்!”

என்றது வீடு!

என்னனம்,என்னனம்?”

என்றது மனம்.






காசு புரட்டி, கடன் வாங்கி ,

மனைவி நகை விற்று,

மக்கள் தம் சுகம் மறுதளித்து,

சுற்றத்தின் ஏச்சும் பேச்சும் கேட்டு,

விழாக் காலங்களில்

புடவை போர்த்திய

மனைவியின் வெறுங் கழுத்தைப் பார்த்து

கையறு நிலையில்

கண் கலங்கி நின்றிருக்கிறேன் பல சமயம்!



சுற்றும் பூமி சுற்றிக் கொண்டேயிருக்க,

“சுட்டதுதானா இது?”என,

செங்கல் செங்கல்லாய்

சுழற்றிச் சுழற்றிப் பார்த்து,

கல் சுமந்து,

காரைச் சட்டி சுமந்து,

கட்டாந்தரையில்

தொழிலாளர்ர்களுடன்

ஒன்றாய் அமர்ந்து

சோறு பகிர்ந்துண்டு,

கடைகள் பல ஏறி இறங்கி,

பொருட்கள் பார்த்து பார்த்து வாங்கி,

கட்டினோம் வீட்டை

மொத்த குடும்பமும் சேர்ந்து

மெதுமெதுவாய் மூண்றாண்டு காலம்!!



புகுமனை புகு விழா”விற்கு

வந்தவரெல்லாம் சொன்னார்:

“அழகு! அழகு!!”

அந்தக் கனம் பறந்துபோனது

பட்ட துன்பமெல்லாம்!!





பாடுபட்டு கட்டிய கூட்டில்

குடியிருந்தோம் சில காலம்!

மென் தென்றல் வீசும்

முழு நிலாக்காலங்களில்

மொட்டை மாடியில்

கருத்தொருமித்த மனைவியுடனும்

கண்ணின் மணிபோன்ற மகள்களுடனும்

வானொலி கேட்டு,

பாட்டுக்குப் பாட்டு பாடி

அணு அணுவாய் அனுபவித்த

ஆன்ம சுகத்தை என்னவென்று சொல்வேன்!







புழுக்கம் நிறைந்த கோடைகளின்

பிற்பகல் பொழுதுகளில்,

பின் வாசலில் தலை வைத்துப் படுத்து,

தென்னங்கீற்றுகளின் ஊடே

லேசாய் கசிந்து வரும் தென்றல்

முகத்தை வருட,

“மோக முள்ளை”யும், “மரப்பசு”வையும்

மனதில் அசை போட்டபடி

மல்லாந்து கிடந்த சுகமென்ன!



எத்தனை எத்தனை கொண்டாட்டங்கள்!

எத்தனை எத்தனை திண்டாட்டங்கள்!!

எல்லாவற்றிலும் ஒரு சுகமிருந்தது,

இருப்பது சொந்தவீடு என்பதால்!

-அது ஒரு பொற்காலம்!





நாளுங் கிழமையும்

நாழிகையாய் பறந்தன!

நான் பெற்ற செல்வங்களுக்கு,

சிறகுகள் முளைத்தன

ஒரு நாள் பறந்தும் போயின!!



அண்டை மானிலத்தில்

ஓர் மகள்!

அயல் நாட்டில்

ஓர் மகள்!!





யாருக்கும் இந்த வீடு வேண்டாமாம்

ஏதும் பயனில்லை இதனால் அவர்களுக்கு!!

அதுவும் சரிதான்

அவரவர் பாடு

அவரவர்களுக்கு!!





”வீட்டை விற்று

வரும் பணத்தை

இரண்டாய் பிரித்து

இருவருக்கும் தந்துவிடலாம்!”

அருமை மனைவி சொன்னாள்!

“ அதுவே சரி”, என்றேன்.



நண்பர்களிடம் சொன்னோம்
நல்லவர் பலரிடம் சொன்னோம்

விளம்பரம் செய்தோம்

வித்தைகள் பல செய்தும் பார்த்தோம்



பலர் வந்தார், பார்த்தார், போனார்

“ஹும்” என்று சொல்லியே!

சிலர் சுவர் தடவிப் பார்த்தார்;

சிலர் ஜன்னல் ஆட்டிப் பார்த்தார்;

இன்னும் சிலர்

வாஸ்து கொஞ்சம் சரியில்லை

வாசல் சற்றே கோணல்

என்று சொல்லிச் சென்றார்!!

அடி மாட்டு விலை என்றால்

” நான் , நீ” என்று,

ஆயிரம் பேர் உடனே வருவார்!

ஆனால் கூவிக்கூவி

விற்கத்தான் எங்களுக்கு மனமில்லை!



வாசலில் விழி வைத்துக் காத்திருக்கிறோம்

மனவியும் நானும்!!

வாங்க வருவோர்தான் யாருமில்லை!!



இதயம் சுமந்த வீடு

இதயத்திற்கே சுமையனது!!



சுகங்களெல்லாம்

ஓர் நாள்

இப்படிததான்

சுமையாகுமோ?



-லினிரா     (Ind. 9965412116)