பாம்பு பாவம்!
"என்னங்க!” சமையலறையிலிருந்து குயில் கூவியது.
"என்னா?” ஹாலிலிருந்து நான் கத்தினேன்.
"நாளைக்கு தை வெள்ளிக்கிழமை!”
"அதெற்கென்ன இப்போ?”
"நாசமாய் போச்சு, உஙகம்மா புத்துக்கு போய் படைச்சுட்டு வரச் சொன்னாளே மறந்து போச்சா? அந்த இன்டெர்நெட்டில் அப்படி என்ன தான் ஆட்றதோ?( அதில் என்ன ஆடுகிறது, எப்படியெல்லாம் ஆடுகிறது என்று அதன் முன்னால் உட்கார்ந்து, மெய்மறந்து போயிருக்கும் எனக்கல்லவா தெரியும்!!) என் மனைவி ஒரு அன்னப்பட்சி! அவளுக்கு மாமியார் சொல்வதில் எதையெதை எடுத்துக் கொள்ள வேண்டும் எதைஎதைக் கொல்ல வேண்டுமென்று தெரியும்! புத்துக்குப் படைக்கப்படும் பொருட்களில் அகலச்சரிகை போட்ட ஒரு கறுப்புச் சேலையும் அடக்கம்- நேற்று அதற்காக ஆயிரம் ரூபாய் தண்டம் அழுதிருந்தேன். அகலச்சரிகை போட்ட சேலைகலையெல்லாம் என் அம்மா இப்போது கட்டுவதில்லை!
புற்று-படையல்-கறுப்புச்சேலை-என் மனதில் அன்றொரு நாள் நடந்த நிகழ்ச்சி நிழலாடியது!
அது போன வருடம் சித்திரை மாதம். அக்கினி வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. பிற்பகல் மணி 1.30. மனைவி வீட்டில் இல்லை. தொலைக் காட்சியில் “காமெடி காலனி” காமெடி பண்ணிக்கொண்டிருந்தது! நான் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்!
தீடிரென்று “ஐயோ” என்ற சத்தம். கதவை திறந்துகொண்டு மாடிப் படியில் இறங்கி ஓடினேன். எதிர் வீட்டு வாசலில் ஐந்தாறு பேர் நின்று கொண்டு காரசாரமாக் விவாதித்துக் கொண்டிருந்தனர்
அந்த வீட்டில் ஒரு கிழவர் மட்டுமே இருந்தார்.
விஷயம் இதுதான்: கிழவரின் வீட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்து நடை வழியாக ஊர்ந்து, குளியலறையில் ஒண்டிக்கொண்டது. பாம்பை யார் அடிப்பது அல்லது எப்படி வெளியே ”அழைத்து” வருவது என்ற விவாதம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மொத்த தெருவும் அங்கே கூடிவிட்டது- ஆளாளுக்கு யோசனை தூள் பறந்தது. ஆனால் யாரும் வீட்டுக்குள்ளே நுழைந்து திருவாளர்.பாம்புடன் கைகுலுக்கவோ அல்லது அதற்கு மோட்சம் அளிக்கவோ தயாராயில்லை.
விவாதம் உச்சகட்டத்தை நெருங்கிகொண்டிருந்த சமயம் எங்கிருந்தோ ”பைக்” ஒன்று பறந்து வந்தது- அதன் மேல் ஆஜானுபாகுவான ஒரு கம்பீரமான உருவம்-எந்த ஊர் கட்டப் பஞ்சாயத்து தலைவரோ அல்லது அப்பாவி மக்களைக் காப்பாற்ற ஆணடவன் அனுப்பிய தேவ தூதரோ? (சுனாமி/ நில நடுக்கம்/ தானே புயல் இதையெல்லாம் அனுப்பிய நேரம் போக மீதி நேரத்தில் சில சமயம் ஆண்டவன் இப்படிபட்ட “நல்ல" காரியங்களைச் செய்வதாக எங்கோ படித்ததாக ஞாபகம்!) பைக் ஆசாமி கூட்டத்தைப் பார்த்து வண்டியை நிறுத்தி,“ என்ன?” என்று விசாரிததார். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே வீட்டுக்கருகே போனார்.
கூட்டம் நிம்மதி பெருமூச்சு விட்ட்து. ”மவனெ, பாம்பு இன்னைக்கு கைமாதான்!” என்று சிலருக்கு சந்தோசம். நான் பைக் ஆசாமியையும் பாம்பையையும் நினைத்துப் பார்த்தேன்:கழுத்தில்
பாம்போடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் பரமசிவன் மனதில் வந்து போனார்.
வீட்டிற்கு அருகே போன ஆசாமி வாசலைப் பார்த்தார்;கூட்டத்தைப் பார்த்தர்ர். கம்பீரமான தன் கொடுவாள் மீசையைத் தடவிக்கொண்டார் இரண்டு தடவை. பின்பு வண்டிக்கு அருகே போனார். அடுத்த நிமிடம் வண்டியில் ஏறி பறந்தார். கூட்டம் “ப்பச்”என்றது. எல்லோரும் எனனைப் பார்த்தனர். (இந்த சனங்களுக்கு இப்படித்தான் சில சமயம் விவஸ்தையே இருப்பதில்லை. பின் என்ன, பந்திக்குக் கூட முந்ததாவன் நான் என்று என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்தும் என்னை இப்படிப் பார்க்கலாமா?) நான் மெதுவாக ஓரமாக ஒதுங்கினேன்.
இப்படியே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஒரு பத்து நிமிடம் ஓடியது.
திருவாளர்/ திருமதி பாம்பு வெளியே வருவதாகக் காணோம் . அப்போது தெருவில் கீரை விற்கும் ஸ்வப்னா கீரையை விற்று விட்டு திரும்பி வந்துகொண்டு இருந்தாள் நான் “ஏ, ஸ்வப்னா!,” என்று அவளை அன்பொழுக அழைத்தேன்.( கீரைக்காரியின் பெயர் முனியம்மா/வேலம்மா/ குப்பம்மா என்றுதான் இருக்க வேண்டுமா என்ன? மனைவிமார்கள் ஸ்வப்னாவை “சொப்பு”, ”சொ”, மற்றும் “பானா” என்றெல்லாம் அழைத்து கணவன்மார்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வதும், மனைவிகள அசந்த நேரத்தில், கண்ணியமிக்க கணவர்கள் “ஸவப்னா!”என்று மனம் குளிர, வாய் நிறைய அவளை அழைத்து, தங்கள் ஆத்ம தாகத்தை தணித்துக் கொள்வதும் வழக்கம்!). அருகில் வந்தவள் “இன்னா?” என்றாள்.
இப்போது ஆளாளுக்கு விஷயத்தை விளக்கினார்கள் (ஸ்வப்னாவின் அழகு மற்றும் வயது –ஐயோ!) ஸ்வப்னா சுற்றுமுற்றும் பார்த்தாள். சற்று தூரத்தில் கிடந்த ஒரு தடியை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். எல்லோர் முகத்திலும் “ஐயோ, நாளையிலிருந்து ஸ்வப்னா வரமாட்டாளோ!” என்ற திகில் அப்பிக் கொண்டது. ஐந்து நிமிடம் போயிருக்கும் ஸ்வப்னா கையில் குச்சியுடன் வெளியெ வந்தாள். அதில் ஒரு ஆறடி நாகப்பாம்பு குற்றுயிரும் கொலையுயிருமாக தொங்கிக் கொண்டிருந்தது.! கூட்டம் நிம்மதி பெருமூச்சு விட்டது (ஸ்வப்னாவுக்கா!!) ஸ்வப்னா பாம்பைக் கீழே போட்டாள். எங்களை நோக்கி ஒரு மோகனப்(?) புன்னகையை வீசிவிட்டு நடையைக் கட்டினாள்.
அடுத்த நிமிடம் ஆளாளுக்கு பாம்பை அடிததார்கள்! செத்த பாம்பை அடிக்கத்தான் மனிதர்களுக்கு எத்தனை ஆர்வம்! நான் அந்த பக்கமே போகவில்லை. –எனக்கு பாம்பை அடிககப் பிடிக்காது–அதற்கு உயிர்இருந்தாலும், இல்லாவிட்டாலும்!
அடுதத அரைமணி நேரத்தில் பாம்பின் ஈமச் சடங்குகள் இனிதே நடந்தேறின!!
வீட்டுக்குத் திரும்பிய நான் மீண்டும் சாப்பிடப் பிடிக்காமல் படுக்கையில் விழுந்தேன்......எப்போதோ படித்த டி.ஹெச்.லாரென்ஸின் “பாம்பு” (The Snake”) கவிதை ஞாபகத்திற்கு வந்தது:
கோடை காலத்தின் ஒரு பிற்பகல் நேரம் லாரென்ஸ் தன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருகிறார். வீட்டின் முற்றத்தில் ஒரு தண்ணீர் குழாய், அதன் கீழ் தண்ணீர் பிடிகக ஒரு கல்தொட்டி. தன் தாகத்தை தணித்துக் கொள்ள, தொட்டியிலிருந்து தண்ணீர் மொண்டு குடிக்க எணணி வீட்டை விட்டு வெளியெ வருகிறார். தொட்டியை நோக்கிப் போன லாரென்ஸ் அதற்கு சற்று தொலைவிலெயே நின்று விடுகிறார்.
அங்கே ஒரு பாம்பு, மெத்தென்ற தன் பழுப்பு நிற வயிற்றை தண்ணீர் தொட்டியின் சுவர் மேல் இருத்தி, தலையை- தொட்டியில், சரியாக குழாயிலிருந்து தண்ணீர் சொட்டும் இடத்தில்- வைத்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது!
லாரென்ஸின் மனம் அவரிடம் சொன்னது: ”கொஞ்சம் பொறு! உனக்கு முன் ஒருவர் வந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார். அவர் குடித்து விட்டுப் போகும்வரை காத்திரு!” லாரென்ஸ், தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து, ஒரு விருந்தாளியாக வந்து, இந்தப் பாம்பு தன்னை கெளரவப் படுத்தியிருக்கிறதே!’’ என்று மகிழ்கிறார்.
பாம்பு, இப்போது தண்ணீர் குடிக்கும் மாடு, இடையிடையே தன் தலையைத் தூக்கிப்பார்ப்பது போல, தன் தலையைத் தூக்கி, ஒரு மையமாக லாரென்ஸைப் பார்த்து விட்டு மீண்டும் கொஞ்சம் தண்ணீர் குடிததது.
வழிவழியாக வந்த பரம்பரை அறிவும் கற்பிக்கப்பட்ட பள்ளி அறிவும், ”முட்டாளே! பாம்பு மனிதனின் பரம்பரை விரோதி அல்லவா? விட்டால் உன்னை அது கொத்திக் கொன்றுவிடும்: உடனே அதை அடித்துக்கொல்-அது உன் கடமையும் கூட!!”என்று லாரென்ஸை அறிவுறுத்துகின்றன.
மனம் சொல்கிறபடி கேட்பதா?
அறிவு சுட்டிக்காட்டும் வழியில் நடப்பதா?
லாரென்ஸுக்குள் ஒரு பெரும் போராட்டம் நடக்கிறது.
தாகம் தீர தண்ணீர் குடித்த பின்பு ஏற்பட்ட ஒருவிதமான மயககம் கலந்த திருப்தியுட்ன் பாம்பு, தன் தலையை இப்போது மீண்டும் தூக்கிப் பார்தது விட்டு, பின்பு, தொட்டியின் சுவற்றை ஒட்டி கீழே இறங்கி மிகமெதுவாக அருகே இருந்த சுவற்றின் பொந்தில் தன் தலையை நுழைத்து தன் உடம்பை மெதுவாக உள்ளே இழுத்து, இழுத்து, நகர்ந்தது. சிறிது, நேரத்தில் ஏறக்குறைய அதன் உடம்பு முழுவதும் பொந்திற்குள் நுழைந்து விட்டது.
சட்டென்று லாரன்ஸின் உடம்பு முழுவதும் ஒரு மிருக உணர்ச்சி பொங்கிப் பிரவாகிக்கிறது. படியருகே இருந்த ஒரு தடி கையில் சிக்குகிறது. அடுத்த கணம் தடி பாம்பை நோக்கிப் பறக்கிறது. ஆனால் தடி அதனை தாக்காமல் தண்ணீர் தொட்டிமேல் பட்டு சற்று தூரத்தில் சத்தத்துடன் கீழே விழுகிறது. பாம்பு தன் வாலை ஒரு மாதிரி , பார்பதற்கே மிக அவலமான முறையில் நெளித்து, ஒரு மினனலைப் போல் அதை முழுவதுமாக பொந்துக்குள் இழுத்துக் கொண்டது.
மகுடம் பறிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட ஓர் அரசன் மீண்டும் மகுடம் சூட்டிக்கொள்ள தன் நாட்டில் நுழையும் காட்சி லாரென்ஸின் மனதில் நிழலாடுகிறது. அவர் மனதில் மகிழ்ச்சியில்லை ; மாறாக, மிக சில்லறைத் தனமாக தான் நடந்து கொண்டதான உணர்வும், தன் மேல் அளவற்ற வெறுப்பும், ஒரு அதிதி போல் தன் வீட்டிற்கு வந்த பாம்பை அடித்ததற்காக வெட்கமும் வேதனையுமே மிஞ்சுகிறது
.
- லினிரா
-(liniraa@gmail.com)
பி.கு: டி.ஹெச். லாரென்ஸ்(1885-1930)- இருபதாம் நூற்றாண்டின், முதல் கால் நூற்றாண்டு கால ஆங்கில இலக்கியத்தில், தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர். சமூகப் பிரச்சனைகளை மட்டுமே இலக்கியம் அலசிக் கொண்டிருந்த காலத்தில், மனித மனதைப் பற்றியும் அதன் வசீகரம் பற்றியும் வக்கிரங்கள் பற்றியும்., அதன் மீது சமூகம் விதிக்கும் அர்ததமற்ற் கட்டுப்பாடுகள் பற்றியும் லாரென்ஸ் துணிச்சலாக எழுதி, மனிதனின் / சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டியவர். அவருடைய, “ LADY CHATTERLY’S LOVER “ என்ற நாவல் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது- இப்போது வரும் சில திரைப் படங்களையும் குத்துப் பாட்டுகளையும் லாரென்ஸின் தடை செய்யப்பட்ட நாவலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ... பாவம் லாரென்ஸ்!
“SONS AND LOVERS” என்ற லாரென்ஸின் இன்னுமொரு அற்புதமான நாவல் திருமணம் செய்துகொண்டு, கட்டிய மனைவியை முழுமையாக நேசிகக முடியாமலும், அதே சமயம் தன் அம்மாவின் அன்புச் சிறையிலிருந்து வெளியே வரமுடியாமலும் அல்லாடும் ஒரு இளைஞனின் அவஸ்தயை அழகாகச் சொல்கிறது.
அப்புறம் இன்னொரு விசயம் (விவகாரம்?). லாரென்ஸ் இங்கெ பாம்பு என்று குறிப்பிடுவது பாம்பை அல்ல! அது என்னவென்று தெரிந்து கொள்ள லாரென்ஸின் இணயதளத்தை சொடுக்குங்கள். அங்கே அவருடைய “ THE SNAKE ” உங்களுடன் கைகுலுக்க தன் படத்தை விரித்துக் காத்துக் கொண்டிருக்கிறது!
No comments:
Post a Comment