Thursday, February 28, 2013


   
             வாழ்க்கையை ருசிக்கலாம் வாங்க
                          3
                      ஆணி-2
சம்பவம்-2:                   
 இரவு சுமார் பத்து மணி இருக்கும்.தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தேன். குயில் போன்ற குரலில் குறட்டை விட்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தாள்! கொடுத்த வைத்த ஜீவன்! என்று பொறாமைப் பட்டேன்! வேறேன்ன செய்ய முடியும்?
எழுந்து புத்தக அலமாரியை திறந்து கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு படுக்கைகு வந்து புரட்டினேன். அது எஸ். ராமகிருஷ்ணனின் கதை/கட்டுரைத் தொகுப்பு. என் கண்கள் பொருளடக்கத்தை மேய்ந்தன.. கண்ணில் பட்டது:  ‘ஆணி.’ ஆணி பற்றி சென்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல ஒரு அற்புதமான அனுபவம் எனக்கு ஏற்கனவே எற்பட்டிருந்ததால் எஸ்ராவின் ‘ஆணி’யில் மனம் இயல்பாகவே மாட்டிக்கொண்டது.  ‘ஆணி’யை படிக்க ஆரம்பிதேன். படித்து முடிக்கவும் மின்சாரம் விடை பெறவும் சரியாக இருந்தது.
  எஸ்ராவின் ‘ஆணி’ நன்றாக என் மனதில் ஆழமாக இறங்கி இருந்தது. ஆணியைப் பற்றி பலவேறு சிந்தனைகள் மனதில் வேர் விட்டு கிளை பரப்பின.
 நேரம் வேறு, இதற்குள் பேய் வரும் நேரம் ஆகிவிட்டது. ஆணிகளுக்கும் பேய்களுக்கும் ஏழாம் பொறுத்தமல்லவா?  எனவே பேய்களிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும் கிளை விட்ட சிந்தனைகளை அவற்றின் போக்கில் அசைந்தாட விட்டேன். அவை போட்ட கோலங்கள் இதோ:   
என் அப்பா அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியாக இருந்தார். அடிக்கடி மாறுதல் காரணமாக ஊர், வீடு மாற்ற வேண்டி வரும். அப்பாவிடம் நிறைய போட்டோக்கள் இருந்தன. எந்தெந்த போட்டோவை எங்கெங்கே மாட்டுவதென்பது பற்றி பல கோணங்களில் பல மணி நேரம் யோசித்து ஒரு விதமாக முடிவு செய்வார். அவர் மார்க் செய்த இடங்ளுக்கு அவர் தேர்ந்தெடுத்த போட்டோக்களை கொண்டு போய் வைக்க வேண்டிய வேலை எனக்கும் என் தம்பிக்கும். பின்பு சுவரில் மாட்ட சரியான ‘புள்ளி’களை அப்பா தேர்தெடுப்பார். அடுத்ததாக சித்தாள் ஆன நான் ஆணி, சுத்தி முதலான ஆயுதங்களை எடுத்து வர வேண்டும். இவற்றைப் போட்டு வைப்பதற்கென்றே எங்கள் வீட்டில் ஒரு சில்வர் ஓக் மரப் பெட்டி (15”x18”)இருந்தது. வார்னீஸ் அடித்து அது பளபள வென்றிருக்கும். பிற்காலத்தில் குடும்ப சொத்தைப் பிரித்த போது இந்த பெட்டி என் தலையில் கட்டப்பட்டது. அதனுள்ளே இரண்டு முண்று வகையான சுத்திகள், பல விதமான திருப்புளிகள், ஒரு கொரடு சில ஸ்பேனர்கள் வெவ்வேறு அளவுகளில் விதவிதமான ஆணிகள்  ,போல்டுகள் நட்டுகள் இன்னும் என்னென்னவோ-எடுத்துச் சொன்னால் எண்ணிக்கையில் அடங்காத சாமாச்சாரம்-இருந்தன.
சுவற்றில் ஆணி “ஏற்றும்” திருவிழா நடக்கும் போது நான் குட்டி பூசாரி போல் பெரிய பூசாரிக்கு அதாவது என்னைத் இதற்காகவே தவமாய் தவமிருந்து பெற்ற என் அப்பாவிற்கு உதவ வேண்டும். ஆணிகளை தேவையான அளவுகளில் அப்பாவின் கை-கோணம் பார்த்து நீட்ட வேண்டும். கோணம் தவறினால் திட்டு விழும். சமயத்தில் அடியும் விழும். (இதற்கு எதிர் வினையாக ஆணி அடிக்கும் போது அப்பா கைதவறி விரலில் சுத்தியலில் அடிவாங்கி  “ஸ்ஸ்ஸ்” என்று இழுத்தவாறு வாயில் விரலை வைத்து சூப்பிக் கொள்ளும் போது வாயை மூடிக்கொண்டு சிரிப்பேன், (அவருக்குத் தெரியாமல்!)
இப்படியாக ஆணித் திருமஞ்சனம் ஒரு வழியாக இரண்டு மூன்று நாட்களில் முடியும்! அப்போதெல்லாம் கான்க்ரீட் சுவர்கள் ஏது? காரைச் சுவர்கள்தான். ஆதில் ஆணி அடிப்பது  கோவை “கிருஷ்னா ஸீவீட்ஸ்” மைசூர் பாக் நாவில் பட்டு,  தொண்டையில் கரைந்து வயிற்றுக்கள் வட்டமடிப்பதை போன்றதொரு சுகம்! சில சமயம, கடலை போடும் போது குறுக்கே வந்த நன்றி மறந்த நாயைப் போல, ஆணி சுவற்றில் இரங்காமல் சண்டித்தனம் செய்து தலையை வளைத்து, கழுத்தை நொடித்து அப்பாவைப் பார்த்து நக்கலாகச் சிரிக்கும். அப்பா அதற்கெல்லாம் மயங்குகிற ஆசாமியில்லை!
முதலில் அதன் தலையில் விரலால் தடவிக் கொடுத்து ‘சுளுக்கு’ எங்கே என்று கண்டு பிடிப்பார். பின்பு சுத்தியால் லேசாக அதன் தலையில் தட்டுவார். பின்பு சற்று பலமாக. இதற்கும் மசியவில்லை யென்றால் சுத்தியை திருப்பி அதன் பின்புறம் உள்ள பிளவில் ஆணியின் கழுத்தை சிக்கவைத்து ஒரே இழுப்பாக இழுப்பார். ஆணி மந்திரவாதியின் மந்திரத்துக்கு கட்டுப்பட்ட பேயைப் போல சுவற்றில் இருந்து பிய்த்துக் கொண்டு விழும். சிலசமயம் கையளவு காரயையும் தன்னோடு பிய்த்துக் கொண்டு விழும். கீழே விழுந்த காரையை என் அம்மா திட்டிக் கொண்டே கூட்டிப் பெருக்கும். இதே அம்மா அடுத்த அரை மணி நேரத்தில் சமையலறையில் அதை மாட்ட, இதை மாட்ட அல்லது படுக்கை அறையில் தன் சவுரியை மாட்ட “ஏங்க!” என்று  “சரவணன்-மீனாட்சி” குயிலி மாதிரி கூப்பிடும். அப்பா சரியான கோபக்கார ஆசாமி. ஆனால் அம்மா ஆணி அடிக்கக் கூப்பிட்டால் மட்டும் உடனே ஓடி வருவார். பின்னாலேயே பெட்டியை தூக்கிக் கொண்டு நான் ஒட வேண்டும்!
ம்ம்.அது ஒரு கனாக் காலம்!
இப்பொழுதெல்லாம் கான்கிரீட் சுவர்கள் வந்துவிட்டன. ஆணி அடிக்க எலக்ட்ரிஷியனைத் தேட வேண்டும். அவர் எலெக்ட்ரிக் டிரில்லெர், பிட்டுகள் இவற்றை ஒரு வி.ஐ.பி. பிரீப்/ சூட் கேஸில் போட்டு எடுத்து வருவார். கூடவே ஒரு உதவியாளரும் . அவர் வரும் நேரம் மின்சாரக் கன்னியின் கருணைப் பார்வை உங்கள் மீது இருக்க வேண்டும். அவள் உங்கள் மீது ஊடினாள் என்றால் அவ்வளவுதான், எலக்ட்ரீசியன் நழுவி விடுவார். மீண்டும் அவரைப் பிடிக்க சிலபல பிராத்தனைகள் நீங்கள் செய்ய வேண்டும். கூடவே “துப்பு கெட்ட மனுசன்” என்று மனைவி கொடுக்கும் “குடும்ப ரத்னா” பட்டத்தையும் அன்பு கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்! 
சற்றே ஆழமாக யோசித்துப் பார்த்தால், சேக்கிழார், “தொண்டர் தம் பெருமை சொல்லற்கும் அரிதே”, என்று சொன்னதைப் போல ஆணியின் பெருமை அளவிடற்கரியது என்றே தோன்றுகிறது!
கோயில் இல்லாத ஊர் இருக்கலாம்; ஆணி இல்லாத வீடு உண்டா?
மதமற்ற மனிதர் இருக்கலாம்: ஆணி அடிக்காத மனிதர் உண்டா?
கடவுள் இல்லாமல், மதமில்லாமல். உணவு இல்லாமல், இவ்வளவு ஏன். தண்ணீர் கூட இல்லாமல் வாழலாம். ஆனால் ஆணி இல்லாமல் ஒரு கணமேனும் வாழமுடியுமா? சட்டையையும் சவுரியையும் எப்படித்தான் மாட்டுவது?
கடவுள்களைப் போல ஆணிகளில்தான் எத்தனை வகை! போட்டோ பிரேம்களின் பக்கவாட்டில் அடிக்கப்படும்  துளியூண்டு ஆணி, ½”ஆணி, 1’’ஆணி இப்படியே வளர்ந்து ஆணியின் நீளம் ஆறு இன்ச், எட்டு இன்ச் என நீள்கிறது. போட்டோ ஆணி அதன் வாமன அவதாரம் என்றால், கடப்பாரை அதன் விஸ்வரூபம்!!
 மாதர்தம் மயக்கும் அழகைப் போல ஆணிகளின் வடிங்கள் தான் எத்தனை எத்தனை? சாதா ஆணிகள், தண்டு உருண்டையான ஆணிகள், தண்டு சதுரமான ஆணிகள், தலையற்ற ஆணிகள், ஊசி ஆணிகள், இரட்டை நாக்கு ஆணிகள் மற்றும் ஊசிகள். பல்லில் உணவுத் துணுக்குகள் சிக்கிக்கொண்டு சித்திரவதைப் பட்டு எதிரில் இருப்பவரை நாலு அப்பு அப்பலாமா என்று எரிச்சல் படும் போது உற்ற நண்பனாய் வந்து உதவும் குண்டூசி, அல்லது மனைவியின் பிளவுசில் மாட்டி இருக்கும் சேப்டி பின், இதனாலெல்லாம் காரியம் ஆகவில்லை யென்றால் உடனே ஒடோடி வரும் ஊசி மச்சான்! (ஊசி தரையில் விழுந்து கண்ணா மூச்சி காட்டினால் அதை ‘ஊசி மச்சான்’ என்றழைத்தால் , அது தான் இருக்குமிடத்தை, வெட்கப்பட்டுக் கொண்டு காட்டி கொடுத்து விடுமாம்- இந்த டெக்னிக் எங்கள் வீட்டில் பலனளித்திருக்கிறது- “ஊசி மச்சான்” என் மனைவியின் குயில் குரலில் மயங்கி இருக்கலாம்! குயில் குரல் உங்களுக்கோ/உங்கள் மனைவி/கணவனுக்கோ வாய்த்திருக்கும் பட்சத்தில் நீங்களும் ஊசி மச்சானை அழைத்துப் பார்க்கலாம்).
ஸ்குரூ ஆணிகள்!
அவற்றைப் பற்றி என்ன சொல்ல?
அவை கம்பன் காவியம்!
பிராட்டியின் சுடர் விடும் அழகைப் போல் தகதகவென மின்னும் கம்மல் திருகாணிகள். அயோத்தி பெண்களைப் போல் பளபளக்கும் பித்தளை ஆணிகள், ஆழ்வார்களைப் போல் நடு நெற்றியில் ‘திருமண்’ சாற்றிய போல்ட்டுகள், எந்த ‘மண்ணும்’ சாற்றாத நாத்திகர் போல்  நெற்றியில் (கொண்டையில்) கோடற்ற போல்ட்டுகள், நிக்கல் ஸ்குரு, பவுடர்கோட்டட் ஸ்குரு, மெட்டல் ஸ்குரு அலுமினியம் ஸ்குரூ இத்தியாதி…இத்தியாதி. அப்புறம் ஆணியிலும் ஸ்குரூ வகையிலும் சேர்க்கமுடியாத இரண்டும் கெட்டானான ‘கோச்’ ஸ்குரூக்கள்!!
ஆணிகளின் மன்னாதி மன்னன் ‘எழுத்தாணி!’
அப்புறம் கடையாணி!
அம்புகளும் ஒரு வகை ஆணிகளே!
துப்பாக்கி குண்டுகளும் கத்திகளும் கூட ஆணிகளின் பல்வேறு வடிவங்களே!!
ஒரு பக்கம் கூர்மையாகவும் இன்னொரு பக்கம் தட்டையாகவும் இருக்கும் சகல சமாச்சாரங்களும் ஆணிகளே!!!
மனிதனின் கண்டுபிடிப்புகளில், ஆணியைப் போல் அவனுக்கு உதவுவது வேறேதாவது உண்டா?
இவ்வளவு அற்புதமான பொருளைக் கண்டுபித்த அறிவாளியும் யாரோ?
நீங்கள் ஒரு வீட்டில் ‘நுழையு’ முன்பே அந்த வீட்டில் உங்களுக்கு உதவ ஒரு ஆணியாவது காத்திருக்கும்! நீங்கள் அந்த வீட்டைக் காலி செய்த பின்பும் அது அங்கேயே இன்னொருவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும், (செல்விருந்து ஓம்பி வரு விருந்து காத்திருக்கும் நல் மனிதனைப் போல்!) இப்படி முக்காலமும் ஆணிகள் மனிதர்களுக்கு உதவக் காத்திருக்கின்றன! இதே ஆணிகள் மனிதர் மேல் கோபம், கொண்டு அவர் கால்களில் ‘ஆணி’களாக ‘கல்கி’ அவதாரம் எடுத்து உயிரை வாங்குவதும் உண்டு! இப்படி கிருஷ்ண பரமாத்மா போல ‘சிஷ்ட பரிபாலணமும் துஷ்ட நிக்ரஹமும்’ செய்யும் ஆணிகள் ஆண்டவன் அவதாரமின்றி வேறென்ன?
கண்ணுக்குத் தெரியாத கடவுள்களுக்கு எத்தனை யெத்தனை கோயில்கள்!
உலகக் கோயில்கள் வரலாற்றில் நடிகைக்கு கோயில் எடுத்து வரலாற்றுக்கே வரலாறு படைத்த தருமமிகு தமிழினமே, மனிதனின்  உற்ற நண்பனாண ஆணிக்கு ஒரு கோவில் எடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவாய்?
                    ______
           
(குறிப்பு: இந்தக் கட்டு/கதையுரை எழுத உந்து சக்தியாக இருந்தது நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல், திரு. எஸ். ராமகிருஷ்ணனின் ‘ஆணி’ தான்! அவருக்கு என் மனமார்ந்த நன்றி!‘ஆணி’எஸ்ராவின் ‘பதினெட்டாம்நூற்றாண்டின்மழை’ தொகுதியில் (உயிர்மை பதிப்பகம்,சென்னை) இருக்கிறது. நீங்களும் படித்துப் பாருங்கள்!)
                         -இன்னும் ருசிக்கலாம்
-லினிரா
        இந்த வாரம் நான் ரசித்த விளம்பரம்?
                         VEHICLES DON’T
                            KILL PEOPLE!
                                 PEOPLE
                                KILL
                                 PEOPLE!!

No comments:

Post a Comment