Saturday, April 12, 2014


ரோஜா

நேற்று ஒரு ரோஜா செடி வாங்கி வந்தேன். ரோஜா செடி என்றால் எனக்கும் என் மனைவிக்கும் கொள்ளைப் பிரியம். தினமும் காலை எழுந்ததும், பின்பு காலை சிற்றுண்டி முடிதத்ததும், இப்படி தினமும் ஒரு ஆறு முறையாவது எங்களிடம் உள்ள இருபது சொச்சம் செடிகளுடன் உரையாடிவிட்டு வந்தால்தான் எங்களுக்கு அன்றைய பொழுது கழிந்தது போல இருக்கும்.
      நேற்று வாங்கி வந்த செடியில் மூன்று பூக்கள் பெரிதாக, உடல் முழுக்க வெள்ளை நிறத்திலும், அழகாக விளிம்பில் மிக லேசாக இளஞ் சிவப்பு  நிறத்தில் செவ்வரியிட்டும்-பட்டுப் புடைவைக்கு சன்ன ஜரிகை இழைத்திருப்பார்களே அந்த மாதிரி! அந்தப் பூக்கள் கொள்ளை அழகு!! மனைவியும் நானும் மெய்மறந்து ரசித்தோம், ஒரு கால் மணி நேரம். மதிய உணவு வேளை வந்துவிட்டதால், உணவிற்குப்பின் மீண்டும் சற்று நேரம் புதிய செடியின் பூக்கள் அருகே பேச்சற்று நின்றிருந்தோம்! உண்ட மயக்கம் சிறிது நேரத்தில்  கண்ணைச் சுழற்றியதால், மனைவி லேசாக ஹால் கதவை திறந்துவிட்டு ஹாலில் பாய் விரித்து படுத்துக்கொண்டார்.
.  நான் எனது அறையில் படுத்துக் கொண்டேன். ஹாலை ஒட்டினார்போல், பக்கவாட்டில் முற்றம். அதில்தான் தான் செடிகளைத் தொட்டியில் வைத்திருந்தோம்.  
என் மனம் பெங்களூருவில் இருந்த, ஒன்றரை வயதேயான என் குட்டிப்பேத்தியை நினைத்துக் கொண்டது- குழந்தை பூக்களை பார்த்து எப்படிச் சிரிக்கும் என்று எண்ணியவாரே தூங்கியும் போனேன்.
 கோடைக்காலம். நல்ல தூக்கம். தீடிரென்று முழிப்பு தட்டியது. மாலை மணி ஐந்தரை. வாங்கி வந்த செடியை தொட்டியில்  சீக்கிரம் நடவேண்டுமே என்று பதைபதைப்புடன் செடியினருகே போனேன். மூன்று பூக்களையும் காணோம்.
காய்ந்துபோன இலைகளை வெட்ட வெராந்தா சன்னல் திட்டிலேயே ஒரு சிறிய கத்திரிக்கோல் வைத்திருப்போம். அதை எடுத்து யாரோ செடிக்கு நோகாமல், கச்சிதமாக பூக்களை ‘கட்’ செய்து கொண்டு போயிருக்கிறார்கள்!
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாங்கள் இருப்பது ஒரு ‘கேட்டட் கம்யூனிடி’ ஒரெ ஒரு தெருதான். இந்தப் பக்கம் எட்டு வீடுகள். அந்தப் பக்கம் எட்டு வீடுகள். எல்லோரும் ‘அப்பர் மிடில் கிளாஸ்’ எல்லோருடைய வீட்டிலும் குறைந்தது ஒரு டூவீலர் ஒரு கார் உண்டு. எந்த வீட்டிலும் வாலாட்டும் வாண்டுகள் இல்லை. கல்லூரிக்குச் செல்லும் பெண்களும் இல்லை. எல்லாம் திருமணமான பேரிளம் பெண்கள் தான்! ஆண்கள் எல்லோரும் கெளரவமிக்க பதவியில் இருப்பவர்கள். அப்படியிருக்க பூக்கள், வாங்கிகொண்டு வந்ததும் வாராதுதுமாக, திருடு போனது எப்படி?
எந்த ’மிடில் ஏஜெடு’ புண்ணியவான் தன் மனைவியை ( ?!)  மகிழ்விக்க இந்த வேலையைச் செய்தது? இதில் விஷேசம் என்னவென்றால் ‘திருட்டுப் பூவை’ யாரும் தன் கூந்தலில் சூடிக்கொண்டு எங்கள் தெருவில் நடமாட முடியாது- ‘குட்டு’வெளிப்பட்டுவிடும். கடையில் வாங்கினேன் என்று சொல்ல முடியாது- பூவின் கலர் இரண்டும் ‘ரேர்’ காம்பினேசன். கடைகளில் கிடைக்காது!
 ‘பூக்களைப் பறிக்கும் போது அந்த மனிதனின் முகம் எப்படி இருந்திருக்கும்?
யூதாசுகள் எங்கும் எப்போதும் இருக்கிறார்கள்!
லினிரா,

12-04-14.

Monday, April 7, 2014

கண்ணா லட்டு திங்க ஆசையா?



கண்ணா லட்டு திங்க ஆசையா?

     இது முன்னொரு(?) காலத்தில் வந்த ஒரு திரைப்படம்.
     உங்களுக்கும் லட்டு திண்ண ஆசையா?
     இங்கே நான் லட்டு என்று குறிப்பட்டது லட்டு என்ற பலகாரத்தை; வேறு ‘எதை’யும் அல்ல;
     லட்டு என்ற பலகாரம் மட்டுமே சாப்பிட, சாப்பிட இனிக்கும் (உங்களுக்கு சர்க்கரை இல்லாதிருந்தால்);
     லட்டு என்பது தமிழனின் தனிச்சொத்து! அதன் உருவம் ஏறக்குறைய கல் உருண்டையைப் போல் இருப்பதால்  அநேகமாக அது கல் தோன்றி மண் தோன்றிய காலத்துக்கு சற்றே பின் தோன்றிய காலத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று பலகார அகழ்வாராய்ச்சி வல்லுனர்க்ள் கூறுகிறார்கள்.
      லட்டுவில் பல வகைகள் இருக்கின்றன. தமிழ் நாட்டைத் தவிர பிற மாநிலங்களில்  ‘புழங்கு’ம் லட்டுவின் சுவையும்  நிறமும் வேறு. அவற்றில் கலர் சற்றே தூக்கலாக இருக்கும். அதில் பூந்திகள் ஜவ்வரிசி சைசில் சிறியதாக இருக்கும். திருப்பதி லட்டை பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அதில் நெய் மிக அதிகம்; பூந்திகளும் பெரியாது! தவிர, முந்திரிப் பருப்பும் முழுசாக இருக்கும்; அது பிரசாதம்! அவ்வளவே!!
ஆனால் தமிழர்தம் லட்டின் லட்சணமே வேறு!!
தமிழ் நாட்டு லட்டில் பூந்திகள் சரியான சைசில் இருக்கும்-வட நாட்டு லட்டில் தேனீக்கள் தேன்கூடில் கொசகொசவென்று ஒட்டிக் கொண்டிருப்பதை போன்று தமிழ் நாட்டு லட்டில் இருக்காது! மிதமான இனிப்பில், இயற்கையான வண்ணத்தில் இருக்கும்.  நம்ம ஊர் லட்டைச் சுவைக்கும் போது ஒவ்வொரு பூந்தியும் பல்லில் பட்டு அரைபடத்துவங்கி,(ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி-இப்படி ஒரு அணுப்பிளவே-  நுயுக்கிளியர் ஃபிஷ்னே- அப்போது நடக்கிறது-கரு குழந்தையாக உருப்பெறுவதும் இப்படித்தானே!), அதன் இனிப்புச் சுவை நாக்கின் பக்கவாட்டுப் பகுதியை வருடி, இனிப்பு கரைந்த பூந்தியின் மொக்கையான சுவை நாக்கின் நடுப்பகுதியில் பட்டு, பிறகு இரண்டும் நுனி நாக்கில் சங்கமமாகி  தொண்டைக்குள் இறங்கும் போது நாம் சொர்க்கத்தை தரிசிக்கிறோம். காதலர்கள் ஊடுவதும் பின்பு கூடுவதும் அல்லவா அங்கே நடக்கிறது!!
லட்டு பலகாரங்களின் அரசி!!
லட்டு இன்றும் தீபாவளி பலகாரங்களில் முக்கியமான இடத்தை வகிக்கிறது.
புதுத் துணியில்லாத தீபாவளி உண்டு!
லட்டு இல்லாத தீபாவளி உண்டோ?
ஒரு வேளை நீங்கள் சில பல காரணங்களினால் லட்டு செய்ய முடியாமல் போனால் கூட லட்டு யார் வீட்டிலிருந்தாவது வந்து உங்களை  இரட்சிக்கும்!
லட்டின் சுவையைப் போலவே அதைச் செய்வதும் மிக சுவாரசியமான விஷயம். ஒற்றை ஆளாக அதைச் செய்ய முடியாது- அது ஒரு கூட்டுறவுத் தொழில்-குடும்பத் தொழில் என்றும் சொல்லலாம்.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு (இதிலிருந்தே என் வயதை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்-என் எழுத்தின் சுவையில் மயங்கி நான் ஏதொ இளமை ஊஞ்சல் ஆடும் ஆசாமி என்று  நீங்கள் நினத்துக் கொண்டிருந்தால் அதற்கு நான் என்ன செய்யட்டும்?) தீபாவளிக்கு முதல் நாள் நானும், என் தம்பியும் தங்கையும் எனது தாயும்  தந்தையும் ‘சேர்ந்து’ லட்டு செய்வோம்.
முதலில் அம்மா ஜீரா காய்ச்சும்-அது கம்பி பதத்தில் வர வேண்டும். பின்பு பூந்திகளை வார்த்தெடுக்கும். பூந்திகள் வெந்தும் வேகாமலும் வடிவேலுவின் ‘வருவாங்க ஆனா வரமாட்டாய்ங்க’ ரேஞ்சில் இருக்க வேண்டும். இவற்றை சற்றே ஆறிய பின்பு, ஏற்கனவே காய்ச்சி வைத்திருக்கும் ஜீராவில் போடுவார்-அதில் ஏற்கனவே சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு, இளம் வறுவலாக வறுக்கப்பட்ட முந்திரி ஏலக்ககாய் பொடி மற்றும் குங்குமப்பூ(!?)- இந்த சமாச்சாரம் இப்போது சுண்டு விரல் சைஸ் டப்பி விலை ரூ. 200/= இருக்கும். பிறகு குழந்தையைக் கொஞ்சுவது போல ஜீராவில் போட்ட பூந்தியை கிளறுவார்.
பின்பு ஜீரா நன்றாக லட்டுடன் உறவு கொண்டதும், மேற்படி சமாச்சாரம் உள்ள பெரிய போசி/ போகினியில் அப்பா தன் வலது கையை விட்டு கைகொள்ளும் அளவிற்கு எடுத்து ‘உஸ் உஸ்’ என்று ஊதிக்கொண்டெ, அதை உருண்டை/ அதாவது லட்டாக மாற்றும் அரிய முயற்சியில் இறங்குவார்.  நாங்கள் குழந்தைகளெள்லாம் அந்த பெரிய குண்டானை சுற்றி உட்கார்ந்து கொண்டு ‘எப்படா திங்கலாம்?’ என்று நாக்கில் எச்சில் ஊற, கடைவாயில் ஜொள் ஒழுகக் காத்துக்கொண்டிருப்போம். அப்பா கணக்கு வாத்தியார், மாணவர்களுக்கு  நன்றாக சைபர் போட்டுப் பழக்கம். எனவே பூந்தி உருண்டைகள் அவர் சொன்னபடி கேட்கும். எல்லா மாணவர்களுமா ஆசிரியர் சொன்னபடி கேட்பார்கள்? சில மாணவர்கள் தண்ணி காட்டுவதும் உண்டள்ளவா? சில  பூந்திகள் அப்பா எவ்வளவு பிடித்து அமுக்கினாலும் அவருக்கு ‘டேகா’ காட்டிவிட்டு, தனித்தனியாக தற்கால பிரபல தேசியக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர்களைப் போல் திக்குக்கு ஒன்றாக  ‘முக’த்தைத் திருப்பிக்கொண்டு சண்டித்தனம் செய்யும். அப்போது அவர் அம்மாவைப் பார்க்கும் பார்வையும், அவர் இவரைப் பார்க்கும் பார்வையும்…. சில சமயம் இப்படி உதிர்ந்த பூந்திகள் எங்களுக்குச் சுடச்சுட கிடைக்கும்.
அப்பா லட்டுகளைப் ‘பிடித்து’, ஒவ்வொன்றாக, வரிசயாக ஒரு பெரிய எவெர்சில்வர் தாம்பாளத்தில் அடுக்குவார். லட்டு செய்து முடித்ததும் அம்மா பாத்திரங்களை ஒழித்துவிட்டு, அடுக்களையை சுத்தம் செய்துவிட்டு வரும். பின்பு இருவரும் சேர்ந்து ஒரு பெரிய சம்புடத்தில் லட்டுகளை எண்ணி அடுக்குவார்கள். அப்புறம் தான் கிடைக்கும் ஆளுக்கொரு லட்டு… அப்பப்பா அதன் சுவை! சிலசமயம் சுவை குறைபாடு காரணமாக அப்பா அம்மா இடையே பலத்த வாக்குவாதம் நிகழும். அம்மா கண்ணைக் கசக்கும்.       
இரவு சாப்பிட்டிற்குப் பின் சுமார் எட்டரை மனியளவில் துவங்கும் இந்த வேலை முடிய நடு நிசி தாண்டிவிடும்! விடிந்தால் தீபாவளி!!
இவ்வளவு கஷ்டப்பட்டு செய்த லட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்க்குக் கொடுத்தது போக மீதியிருப்பது ஒரு நான்கைந்து நாட்களில் தீர்ந்து போவது சிறு வயது பெருஞ்சோகம்!
-லினிரா
08—4-2014.