ரோஜா
நேற்று ஒரு ரோஜா செடி வாங்கி வந்தேன். ரோஜா செடி என்றால்
எனக்கும் என் மனைவிக்கும் கொள்ளைப் பிரியம். தினமும் காலை எழுந்ததும், பின்பு காலை
சிற்றுண்டி முடிதத்ததும், இப்படி தினமும் ஒரு ஆறு முறையாவது எங்களிடம் உள்ள இருபது
சொச்சம் செடிகளுடன் உரையாடிவிட்டு வந்தால்தான் எங்களுக்கு அன்றைய பொழுது கழிந்தது போல
இருக்கும்.
நேற்று
வாங்கி வந்த செடியில் மூன்று பூக்கள் பெரிதாக, உடல் முழுக்க வெள்ளை நிறத்திலும், அழகாக
விளிம்பில் மிக லேசாக இளஞ் சிவப்பு நிறத்தில்
செவ்வரியிட்டும்-பட்டுப் புடைவைக்கு சன்ன ஜரிகை இழைத்திருப்பார்களே அந்த மாதிரி! அந்தப்
பூக்கள் கொள்ளை அழகு!! மனைவியும் நானும் மெய்மறந்து ரசித்தோம், ஒரு கால் மணி நேரம்.
மதிய உணவு வேளை வந்துவிட்டதால், உணவிற்குப்பின் மீண்டும் சற்று நேரம் புதிய செடியின்
பூக்கள் அருகே பேச்சற்று நின்றிருந்தோம்! உண்ட மயக்கம் சிறிது நேரத்தில் கண்ணைச் சுழற்றியதால், மனைவி லேசாக ஹால் கதவை திறந்துவிட்டு
ஹாலில் பாய் விரித்து படுத்துக்கொண்டார்.
. நான் எனது அறையில் படுத்துக் கொண்டேன். ஹாலை ஒட்டினார்போல்,
பக்கவாட்டில் முற்றம். அதில்தான் தான் செடிகளைத் தொட்டியில் வைத்திருந்தோம்.
என் மனம் பெங்களூருவில் இருந்த, ஒன்றரை வயதேயான என் குட்டிப்பேத்தியை
நினைத்துக் கொண்டது- குழந்தை பூக்களை பார்த்து எப்படிச் சிரிக்கும் என்று எண்ணியவாரே
தூங்கியும் போனேன்.
கோடைக்காலம். நல்ல
தூக்கம். தீடிரென்று முழிப்பு தட்டியது. மாலை மணி ஐந்தரை. வாங்கி வந்த செடியை தொட்டியில் சீக்கிரம் நடவேண்டுமே என்று பதைபதைப்புடன் செடியினருகே
போனேன். மூன்று பூக்களையும் காணோம்.
காய்ந்துபோன இலைகளை வெட்ட வெராந்தா சன்னல் திட்டிலேயே ஒரு
சிறிய கத்திரிக்கோல் வைத்திருப்போம். அதை எடுத்து யாரோ செடிக்கு நோகாமல், கச்சிதமாக
பூக்களை ‘கட்’ செய்து கொண்டு போயிருக்கிறார்கள்!
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாங்கள் இருப்பது
ஒரு ‘கேட்டட் கம்யூனிடி’ ஒரெ ஒரு தெருதான். இந்தப் பக்கம் எட்டு வீடுகள். அந்தப் பக்கம்
எட்டு வீடுகள். எல்லோரும் ‘அப்பர் மிடில் கிளாஸ்’ எல்லோருடைய வீட்டிலும் குறைந்தது
ஒரு டூவீலர் ஒரு கார் உண்டு. எந்த வீட்டிலும் வாலாட்டும் வாண்டுகள் இல்லை. கல்லூரிக்குச்
செல்லும் பெண்களும் இல்லை. எல்லாம் திருமணமான பேரிளம் பெண்கள் தான்! ஆண்கள் எல்லோரும்
கெளரவமிக்க பதவியில் இருப்பவர்கள். அப்படியிருக்க பூக்கள், வாங்கிகொண்டு வந்ததும் வாராதுதுமாக,
திருடு போனது எப்படி?
எந்த ’மிடில் ஏஜெடு’ புண்ணியவான் தன் மனைவியை ( ?!) மகிழ்விக்க இந்த வேலையைச் செய்தது? இதில் விஷேசம்
என்னவென்றால் ‘திருட்டுப் பூவை’ யாரும் தன் கூந்தலில் சூடிக்கொண்டு எங்கள் தெருவில்
நடமாட முடியாது- ‘குட்டு’வெளிப்பட்டுவிடும். கடையில் வாங்கினேன் என்று சொல்ல முடியாது-
பூவின் கலர் இரண்டும் ‘ரேர்’ காம்பினேசன். கடைகளில் கிடைக்காது!
‘பூக்களைப் பறிக்கும்
போது அந்த மனிதனின் முகம் எப்படி இருந்திருக்கும்?
யூதாசுகள் எங்கும் எப்போதும் இருக்கிறார்கள்!
லினிரா,
12-04-14.
No comments:
Post a Comment