தென்றல்
தருணங்கள்
-லினிரா (17/07/2016)
9 பான் கேக், காரா
பூந்தி மற்றும் குரங்கு சேட்
தாத்தா மாலையில் வீடு திரும்பும்வரை
நான் திண்ணையிலேயே காத்திருப்பேன் காரணம் அவர் கொண்டு வரும் தீனிகள். நான் விடுமுறைக்கு
மட்டுமே தாத்தா வீட்டிற்குச் செல்வதால், நான் அவருக்குச் செல்லப்பிள்ளை. எனவே தீனி
எனக்கு மட்டும் தான். சில சமயம் போனால் போகிறதென்று அதில் நான் துக்குனூண்டு சரோஜா அத்தைக்குத் தருவதுண்டு. எல்லோருக்கும் தீனி வாங்கித்தர தாத்தாவிற்கு கட்டுபடியும்
ஆகாது.
சில நாட்களில் தாத்தா
காரபூந்தி என்று அப்போது பரவலாக அழைக்கப்பட்ட ‘மிக்ஸர்” வாங்கி வருவார். அது செய்த்தித்
தாள் காகிதத்தில் கூம்பு வடிவில் சுற்றப்பட்ட பொட்டலத்தில் இருக்கும். எனக்கு அப்போது,
காரா பூந்தியின் சுவையைவிட அது இருக்கும் கூம்பு வடிவ பொட்டலம் தான் பெரும் அதிசயம்!
காரா பூந்தியை ஒரு கை பார்த்துவிட்டு, பொட்டலத்தை விரித்து, அதை மீண்டும் மீண்டும்
கூம்பு வடிவமாக்க பலதடவை முயன்றிருக்கிறேன் பல நாட்காளாகியும் அந்த வித்தை எனக்குக்
கை கூடவேயில்லை! பல வருடங்கள் கழித்து, திருமாண புதிதில் மனைவியுடன் பேருந்தில் க்டலை போட்டுகொண்டே, கடலை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பழைய ஞாபகத்தில் கூம்பு “சுற்றும்” முயற்சியில் இறங்க, மணைவியானவர்
என்னை, “என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்?” நான், என் பிரச்சனையைச் சொல்ல, அவர் ஒரு
மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டே அந்த வித்தையைச் சொல்லிக் கொடுத்தார்.
சில நாட்களில் தாத்தா
ஒரு விதமான ‘பேன் கேக்’ வாங்கி வருவார். மேற்
புறம் அகன்றும். நுனி சிறுத்தும் இருக்கும் அது, பட்டர் பேப்பரில் சுற்றியிருக்கும்.
சுமார் ஆறு அங்குல நீளம் இருக்கும் அதன் உட்புறம் பஞ்சுப் பொதி போல் மெது மெதுவென்றிருக்கும்.
மேற்புறம் கொஞ்சம் ரோஸ்ட் செய்யப்பட்டு மொறு மொறு வென்றிருக்கும். முதலிலெல்லாம் ‘காஞ்ச மாடு கம்பங் கொல்லையில் பூந்த’, கணக்காக,
கேக் சுற்றியிருக்கும் காகித்ததை அரக்க பரக்கப் பிரித்து, கேக்கை சிந்திச் சிதறிச்
சாப்பிடுவேண். நான் கேக் சாப்பிடும் இலட்சணத்தைப் பார்த்த சரோஜா அத்தை ஒரு நாள் பட்டர்
பேப்பரை மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து, கேக்கை சிந்தாமல் சிதறாமல் சாப்பிடும்
வித்தையை சொல்லிக் கொடுத்தது.
கேக், அந்தக் காலத்தில்
‘லோட்டா’ என்றழைக்கப்பட்ட சுமார் ஆறு அங்குல நீளமுள்ள டம்ளர் ஸைசுக்கு இருக்கும். இந்த
டம்ளர்களை இப்போது பார்க்க முடியாது- இப்போதெல்லாம் மூன்று இஞ்ச் ஒல்லிப்பிச்சான்
– ஸைஸ் ஜீரோ டம்ளர்கள்தான். சில வீடுகளுக்கு விருந்தினர் வந்தால் அதில் பாதியளவே காப்பி
அல்லது டீ தருவார்கள். ஒரு முறை எனக்கும் ஒரு பெரும் செல்வந்தர் வீட்டில் இந்த ‘அரை
டம்ளர் மரியாதை நடக்க, நான் காபி கொடுத்த நாரீமணியைப் பார்க்க, அவர் என்னைப் பார்த்து
ஒரு மாதிரி சிரித்துக் கொண்டே சொன்னார், “அதிகக்
காபி உடம்புக்கு ஆகாது!” நான் அவரை ‘அல்பமே’ என்பதுபோல் பார்க்க, அவரும் என்னை, ‘அட,
அல்பமே!’ என்பது போல் பார்த்தார்.
மாலை வேளைகளில்
கொள்ளுப் பாட்டி மேலே சொன்ன பெரிய டம்ளர்களில் பால் கலக்காத பனங்கருப்பட்டிக் காப்பியை
ஊற்றித் தரும். இதமான சூட்டில் இருக்கும் அதை உதட்டில் வைத்து ‘ஜூர் ஜூர்’ ரென்று ஓசை
வர குடிப்பது அலாதி சுகம். அடுத்த காபி அடுத்த நாள் மாலைதான். பெட் காபி, பதினொரு மணி காபி. இரவு பால் போன்ற சங்கதியெல்லாம்
பெரும் பணக்காரர்கள் வீடுகளில்தான். மற்றவர்களின் வீடுகளிளெல்லாம் காப்பிக்கு பனைவெல்லந்தான்! “அஸ்கா” என்றழைக்கப்பட்ட வெள்ளை சக்கரையும் பணக்காரர்கள் வீட்டில்தான். வெள்ளைச் சர்க்கரை பணக்காரர்களின் ‘ஸ்டெடஸ் ஸிம்பல்”
அப்பொழுது மண்ணெண்ணெய்க்குக்
கடும் தட்டுப்பாடு இருந்தது. அது ரேஷன் கடைகள் இல்லாத காலம். தாத்தா பெட்ரோல் பங்கில்
வேளை செய்ததால், அவர் அவ்வப்போது 16½ மண்ணெண்னெய் டின்னை—இது இப்போதுள்ள கடலை எண்ணெய்
டின் போலிருக்கும்- வீட்டுக்குக் கொண்டு வருவார். மாலையில் வீட்டின் பின் புறமிருந்த
தெருவில் நாங்கள் சீமெண்ணெய்க் கடையைத் திறப்போம். டின்னின் மேற்புறம் ஒரு மூலையில் ஒரு சிறிய தகடு
வில்லை வைத்துச் ஈயத்தால் ‘சீல்’ செய்யப்பட்டிருக்கும். அதன் மேல் சிறிய தணல் துண்டுகளை
வைத்தால் வில்லை விலகி விடும். இந்த வில்லையின் மேல் ஒரு குரங்கின் படம் போட்டிருக்கும்.
மண்ணெண்ணெய் டீலர் ஒரு சேட்டு! எனவே அவர் ‘குரங்கு சேட்டு’ என்றே வெகு அன்புடன் அழைக்கப்பட்டார்.
நானும் அத்தைப் பையன் பாரதியும் விற்பணையாளர்கள். தெரு ரெளடியான சித்தப்பாதான் கூட்டத்தை
ஒழுங்கு படுத்தும் போலீஸ்! மண்ணெண்ணெய் வாங்க பெரும்பாலும் பொடுசுகள்தான் வருவார்கள்.
எனவே சித்தப்பாவின் அதிகாரம் கையில் செங்கோலுடன் தூள் பறக்கும். அத்தைதான் காசாளர்.
மண்ணெண்ணையை டின்னிலிருந்து புனலில் சேந்தி, அளவிடும் கேன்களில் (250 மிலி, 500 மிலி,
மற்றும் ஒரு லிட்.) அளந்து, வாடிக்கையாளர் கொண்டுவரும் பாட்டிலகளில் ஊற்ற வேண்டிய வேலையை
நானும் பாரதியும் மாறி மாறிச் செய்வோம். மண்ணெண்ணெய் சேந்தும் புனல் ஒரு குழலுடன் இருக்கும்.
குழலின் மேல் நுனி அகன்று, ஒரு கிண்ணம் போல் இருக்கும். அதனுள் சிறிய தட்டுடன் கூடிய
ஒரு ஒல்லியான உலோகக் குச்சி இருக்கும். குச்சியை கீழே செலுத்தி வேகமாக மேலே இழுத்தால்
டின்னில் இருக்கும் மண்ணெண்ணெய் மேலெ பொங்கி வந்து, பாத்திரம் போன்றிருக்கும் அகன்ற
பகுதியில் நிரம்பி, அதனுடன் இணைக்கப்பட்ட சிறு குழல் வழியாகப் பாய்ந்தோடி அதனடியில்
வைக்கப்பட்டிருக்கும் பாட்டிலில் விழும். புனலை
‘ஆப்ரேட்’ செய்வதற்கு எங்களுக்குள் சமயத்தில் பெரும் போராட்டமே நடக்கும். மண்ணெண்ணெய்
பொங்கி வரும் போது, நிறைய குமிழ்குளுடன் கொப்பளித்துக் கொண்டு வரும். அதைக்காணத்தான்
அவ்வளவு அடிதடியும்! சேந்தும்போது, வேகத்திற்கேற்ப, ‘சொர் சொரெ’ வென்று சத்தம் கேட்கும்.
மண்ணெண்ணெய் சேந்துவது,
படிப்பதற்கு சுலபமான காரியமாகத் தோன்றினாலும், உண்மையில் அதற்கு அசாத்தியத் திறமை வேண்டும்.
பல சமயங்களில், ஆர்வமிகுதியால், நான் அதிகவேகமாகச் சேந்தி, மண்ணெண்ணெய் புனல் முழுவதும்
வழிந்து அல்லது வாடிக்கையாளரின் பாட்டில் நிறைந்து, வழிந்து தெருவில் கொட்டிவிடும்.
சில சமயம் மேலே பொங்கி வரும் மண்ணெண்ணெய் என்
முகத்தை அபிஷேகம் செய்யும். அபோது ஒரு அனிச்சை செயலாக என் நாக்கு மண்ணெண்ணையை நக்குவதும் உண்டு! அந்த மாதிரி சமயங்களில் அத்தையிடமிருந்து
தவறாமல் என் தலையில் குட்டு விழும். சரியான அழுத்தத்துடனும்,சீரான வேகத்துடனும் குச்சியை மேழும், கீழும்
செலுத்தி ஒரு சொட்டு எண்ணெய் வழியாமல் சேந்த, ஒரு கைதேர்ந்த வயலின் மேதையின் லாகவம்
தேவை. நான் எவ்வளவு லாவகமாகச் சேந்தினாலும்,
என்னால் எண்ணெய் சிந்தாமல் சேந்தவே முடிந்ததில்லை. சித்தப்பா இதில் கில்லாடி. எனக்கு
அந்த லாகவம் கைவரப் பெறவேயில்லை! பல ஆண்டுகள் கழித்து, திருமாண பின்பு மண்ணெண்ணெய்
அடுப்பிற்கு எண்ணெய் நிரப்பும் போதும் என் பிரச்சனை தீர்ந்த பாடில்லை! கடைசியில் சிறிய
துருத்தியுடன் கூடிய பிளாஸ்டிக் புனல் வந்து, என் பிரச்சினையை ஒரு வழியாக தீர்த்து
வைத்தது.
---தென்றல் இன்னும்
முத்தமிடும்