Friday, April 22, 2016

தென்றல் தருணங்கள்

 1. இரண்டு ரூபாய் நோட்டு !
 ஊசிப்பட்டாசைத் தெருவில் வீசியெறிந்தால், பட்டென்று வெடித்துவிடும்! வெயில் அப்படிக் கொளுத்திக் கொண்டிருந்தது, கற்பின் கனல் போல்!.
 வேறு வழியின்றி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். எத்தனை நேரம்தான் புத்தகம் வாசிப்பது? மனைவிக்குத் தெரியாமல், தொலைக்காட்சி பார்ப்பது?
 திடீரென்று ஏதோ நினைப்பில், புத்தக அலமாரியைக் குடைய ஆரம்பித்தேன்.
 புத்தகங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்த ஏதோவொன்று ”மளுக்” கென்று மடியில் விழுந்தது! கண்கள் அதன் மேல் அனிச்சையாக மேய்ந்தன.
 அட! இரண்டு ரூபாய் நோட்டு!
 புதுக்கருக்கழியாத, புத்தம் புது சலவை நோட்டு!
 பாரக்கப் பார்க்க பரவசம், மல்லிகைச் சரத்தின் மணமாக என்னை ஆக்கிரமித்துக் கொண்டது-
 ரூபாய் நோட்டுகளில், இரண்டு ரூபாய் நோட்டுகள் மட்டும் தனியானவை.. இளம் ஆரஞ்சு மற்றும் வான் நீலம் என இரண்டு மிகை வேறுபாடு (contrast)  நிறங்களில் அவை அச்சிடப்பட்டிருக்கும். வேறெந்த நோட்டிலும் இந்த வண்ணக் கலவையைப் பார்க்க முடியாது---அவைகளெல்லாம் ஒரே வண்ணத்தின் பல “ஷேடு” களில் அச்சிடப்பட்டவை.
 பூமிப்பந்தின் மேல் செயற்கைக் கோளொன்று (ஆர்ய பட்டா ?) பறக்கும் படம் இரண்டு ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டிருக்கும்.
 இந்த இரண்டு ரூபாய் நோட்டு எப்படி புத்தக அலமாரிக்குள் வந்தது?    
 எப்படி புத்தகங்களுக்கிடையில் மாட்டிக் கொண்டது?
 விடை தெரியாத வினாக்கள்!
 காதல் கனிந்தது எப்போது என்ற கேள்விக்கு யாராவது விடை சொல்ல முடியுமா, என்ன?
 இவ்வளவு காலத்திற்குப் பின்னும், நோட்டு, புதுக் கருக்கழியாமல் இருந்தது, வாழ்வின் சில தென்றல் தருணங்களைப் போல!
 தென்றல் தருணங்களெல்லாம் கடந்த காலத்துக்குச் சொந்தமானவை! நினவுச் சுழலின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அவை, எப்போதாவது மேழும்பி வரும்! அப்போதெல்லாம் அவை நம்மைச் சத்தமின்றி முத்தமிட்டுச் செல்லத்தவறுவதே இல்லை! தென்றல் முத்தமிடும் அந்தத் தருணங்கள் மட்டும் இல்லையெறால்…







                                   
                          
                                ---தென்றல் இன்னும் முத்தமிடும்        ---லினிரா                     
26/04/2016  
                     

No comments:

Post a Comment