Saturday, May 7, 2016

3. பரணும் பனாமாவும்!
                                            ---லினிரா (07-05-2016)                                                
  அப்போதெல்லாம் ‘எவர் சில்வர்’ பாத்திரங்கள் கிடையாது. அவை பெரும் செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே இருக்கும். எல்லோருடைய வீட்டிலும் ‘ஏழைகளின் வெள்ளி’யாலான அலுமினியப் பாத்திரங்கள்தான்! தாத்தா வீட்டிலும் அப்படித்தான். தாத்தா சாப்பிடும் தட்டு மட்டும் கொஞ்சம் வித்தியாசமானது. அதன் உட்புறம் வெள்ளை வெளேரென்று ஒரு விதக் கலவை பூசப்பட்டு வழு வழுவென்றிருக்கும். வெளிப்புறம் அதே கலவை, பாசிப் பச்சை நிறத்தில். விளிம்புகள் சுமார் மூன்று அங்குலத்திற்கு வளைக்கப்பட்டு, மடக்கிவிடப் பட்டிருக்கும். பார்ப்பதற்கு ஒரு பெரிய கிண்ணம் போன்றிருக்கும் இவை மிக அழகானவை. அந்தத் தட்டில் சாப்பிட, தாத்தா இல்லாத மதிய வேளைகளில் எங்களுக்குள் பெரிய போராட்டமே நடக்கும். சரோஜா அத்தை எங்கள் தலைகளில் குட்டி, அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும். சமயத்தில் அத்தை எங்கள் கண்களில் படாமல் அதை ஒளித்து வைத்துவிட்டு, பின் தன் உணவை அதில் போட்டுச் சாப்பிடும். வெளிப்புறம் பச்சை அல்லது நீல நிறப் பூச்சும் கொண்ட, உட் புறம் வெண்மையாகப் பீங்கான் போலிருக்கும், விரல் வைத்தால் வழுக்கிக் கொண்டு போகும் இந்த மாதிரி வட்டில்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவற்றில் சாப்பிட்டிருக்கிறீர்களா?
 தாத்தா வீட்டுப் படுக்கையறையின் மேல் ஆறடி உயரத்தில், சன்னமான மூங்கில்களால் வேயப்பட்ட ’அட்டாலி’ என்றழைக்கப்பட்ட பரண் இருந்தது. இந்த அமைப்பின் காரணமாக, தாத்தா வீடு கோடையில் ‘குளு, குளு’ வென்றும், குளிர் காலங்களில் ’வெது வெதுப்’ பாகவும் இருக்கும். விடுமுறை நாட்களில், நடு அத்தை பையன் பாரதியும், சித்தப்பா இராஜேந்திரனும். (சித்தப்பா என்னைவிட இரண்டு வயது சிறியவன்! )  பரணுக்குப் போய்விடுவோம். பரண்தான் எங்கள் அரசவை மற்றும் சதியாலோசனைக் கூடம்! இங்கேதான் மற்ற பயல்களின் சொத்துகளைக் கொள்ளயடித்தல், அவற்றை, குட்டு வெளிப்படாமல் மறைத்து வைத்தல், மற்றும் பங்கு போடுதல், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கல், எதிராளியை நேரடிப் போரில் வெல்லுதல், ஒற்று வேலை செய்தல், உறவாடிக் கெடுத்தல் முதலிய அதி முக்கிய, பயங்கர விசயங்கள் விவாதிக்கப்பட்டு, திட்டம் தீட்டப்படும்.. எங்கள் ஒவ்வொருவருக்கும், பிற கூட்டாளிகளுக்குத் தெரியாத ’பனாமா லாக்கர்கள்’ பரணில் இருந்தன. சாக்குப் பைகளின் அடி மடி, தட்டுமுட்டுச் சாமான்கள், உபயோகமற்றது என ‘தூக்கி’ வீசப்பட்ட சாமான்களின் இண்டு இடுக்குகள், கவிழ்த்து வைக்கப்பட்ட கூடைகளின் உட்புறம், பனிப்படலம் போல் மென்தூசிப் போர்வை மூடியிருக்கும், கொள்ளுத் தாத்தா / எள்ளுத் தாத்தாக்களின் பெட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். பிறருக்குத் தெரியாமல் இவற்றை திறக்க, பரண் மேல் ஏற ஒவ்வொருவருக்கும் பல         ’டெக்னீ’க்குகளும் உண்டு. கோலிக் குண்டுகள், பம்பரங்கள், தீப்பெட்டி அட்டைகள், சிகரெட் பெட்டி அட்டைகள்: என்ற நானாவிதமான ’அசையும்’ சொத்துக்கள் அரும்பாடு பட்டுச் சேமிக்கப்பட்டு, இந்த ’லாக்கர்’களில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆனால், எவ்வளவு இரகசியமாகச் சேமிககப்பட்டு வைத்தாலும், ஆட்டையை போடும் எத்தன்களும் எங்களில் உண்டு.
 பரணில் உட்கார்ந்து கொண்டு, ‘இன்னதென்றே தெரியாத’ பல கதைகள் பேசுவது சொர்க்கானுபவம். பரண் மேல் ஏற ஏணியெல்லாம் கிடையாது ஹால் கதவில் இரண்டடி இடைவெளியில் அமைந்திருக்கும் மூன்று உறுதியானக் குறுக்குச் சட்டங்கள்தான் ஏணி! இந்தச் ’சிக்கலான’ அமைப்பின் காரணமாக, பரணில் ஏறுவதற்கு பெண் பிள்ளைகளுக்கு அனுமதியில்லை. மேலும் பரணில் இருக்கும் பேய், பிசாசுகள் பற்றியும் அவர்களுக்கு வாழையடி வாழையாக சொல்லப்பட்டிருந்தது. எனவே, பரண் முழுக்க பசங்கள் இராஜ்ஜியந்தான். பரணில் இருக்கும் சாமான்களை எடுக்க எங்களை விட்டால் வேறு ஆளுமில்லை. அந்த மாதிரி சமயங்களில் நாங்கள் அலட்டிக் கொள்ளும் அலட்டல்---அரசியல் வாதிகளெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்!
 சரோஜா அத்தை எதற்கும் துணிந்த கட்டை! தேவைப்படும் போது, அது தானே பரணில் ஏறி தனக்குத் வேண்டியதை எடுத்துக் கொள்ளும். அதை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அத்தையின் வாய் அவ்வளவு பிரசித்தம்!!
                                    ---தென்றல் இன்னும் முத்தமிடும்   

     

No comments:

Post a Comment