4. வெட்டும் புலி
---லினிரா (14/05/2016)
எங்கள் ‘பனாமா லாக்கர்களான ’பரண் லாக்கர்களில்‘ வெகு
இரகசியமாக சேமித்து வைக்கப்படும் மிக முக்கியமான அசையும் சொத்து, தீப்பெட்டி மற்றும்
சிகரெட் பெட்டி அட்டைகள். அப்போதெல்லாம் இவற்றில் பல் வேறு ’பிராண்டு’கள் இருந்தன.
தீப்பெட்டிகளில் அந்த அந்தக் கம்பெனிகளின் லேபிள்கள் ஒட்டப்பட்டிருக்கும். மஞ்சள் நிற
பின் புலத்தில் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் இரட்டைக் குருவி, சங்குவின் படம், இப்படிப்
பல வகையான லேபிள்கள் தீப்பெட்டிகளின் மேல் ஒட்டப் பட்டிருக்கும். தீப்பெட்டிகள் மிக
மெல்லிய ‘மரத் தகடு’களால் ஆனவை. இவற்றில் மிக விசேஷமானது ‘வெட்டும் புலி’ தீப்பெட்டிகள்.
அப்போது மிகப் பிரபலமான இந்தத் தீப்பெட்டிகளின் லேபிள் பார்க்க மிக அழகாக இருக்கும்.
லேபிளைச் சுற்றி, பூ கட்டும் நூல் போல் வெள்ளை நிற ‘பார்டர்’ ‘ஓடும்’. அங்கங்கே, ஒன்றிரண்டு மேகங்கள் ‘நின்று’
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நீல வானப் பின்னணியில், ஒரு வயல் வெளி. வயல் வெளியெங்கும்
அறுவடைக்குத் தயாராயிருக்கும் பொன்மணிக் கதிர்கள்! வயலின் ஒரு ஓரத்தில் ஒரு மரம்- மரத்தின்
அந்தப் பக்கம் சீறிப்பாயும் புலி. இந்தப் பக்கம் ஒரே வெட்டாக அதை வெட்டிச் சாய்க்க
வலது கையில் அரிவாளோடு, ஆஜானுபாகுவான ஒரு ஆள். அவரின் வலது கையில் அரிவாளிருக்க, இடது
கை இடுப்பில் பதிந்திருக்கும். தலையில் சுருட்டிக் கட்டிய தலைப்பாகையுடனும், திறந்த
மார்புடனும், இடுப்பில் முழங்கால் வரை மடித்துக் கட்டிய வேட்டியுடனும் அவர் காட்சியளிப்பார்.
அந்த வேட்டியின் ஒரு முனையை முன்புறம் கால்களின் நடுவே விட்டு, பின்புறம் இழுத்து,
இடுப்பில் சொருகி, தார்பாய்ச்சிக் கட்டியிருப்பார். கால்களை அகற்றி வைத்து, வயல் நடுவே
ஆழமாக மண்ணில் ஊன்றி நின்று கொண்டிருக்கும் அவர். கால்களின் ஆடு சதையும், நரம்புகள்
புடைத்திருக்கும் கரங்களின் உறுதியும், கட்டபொம்மன் மீசையும் அவர் வீரத்தைப் பறை சாற்றும்.
அந்தக் கண்களில் மின்னும் ஆவேசம், தீ போன்று சுடும்.! (பல இரவுகளில் இந்தப் படத்தை
நினைத்து பாதித் தூக்கத்தில் நான் ‘புலி, புலி’ என்று அலறியிருக்கிறேன். அப்போதெல்லாம்
சரோஜா அத்தை எழுப்பி, தண்ணீர் குடிக்க வைத்து, நெற்றியில் திரு நீறு பூசி முதுகில்
தட்டிக் கொடுத்து, மீண்டும் தூங்க வைக்கும்)
லேபிளில் இருக்கும்
மரத்தின் இலைகள் அசையப் போவதில்லை:
கதிர்மணிகள் அறுவடை
செய்யப்படப் போவதுமில்லை:
புலியும் மனிதன்
மேல் பாயப்போவதில்லை;
மனிதன் அதை வெட்டப்
போவதுமில்லை!
காலப் பெருவெளியில்
உறையவைக்கப்பட்ட (‘ஃப்ரீஸான’) இந்தக் காட்சி யேசுவின் ’கடைசி விருந்துக்கும்’, மோனலிஸாவின்
புன்னகைக்கும் சற்றும் சளைத்ததல்ல!!
கேவலம், ஒரு தீப்பெட்டி
லேபிள்! அதில் அச்சிட இப்படி ஒரு கற்பனையை இவ்வளவு அழகாக தீட்டியவன் யார்? அவன் எவ்வளவு
பெரிய கலைஞன்! ஒரு சிறிய தீப்பெட்டி லேபிளில் ஒரு இனத்தின் மாண்பையும், வீரத்தையும்,
வாழ்க்கை முறையையும் சொல்லி விட்ட அந்தக் கலைஞன் டா வின்ஸிக்கும், மைக்கேல் ஏஞ்சலோவிற்கும்
சவால் விடுகிறான்! எல்லாவற்றையும் விட, அதைப் பெற்று, அச்சிட்டு தன் தீப்பெட்டிகளில்
பயன்படுத்திய அந்த தீப்பெட்டி நிறுவனத்தின் உரிமையாளரின் இரசிக்கும் மாண்பை என்னவென்று
சொல்ல?. நினைக்க நினைக்க மனம் பொங்குகிறது!
உரிமையாளர் ஓவியனிடம்
தனக்கு, ‘இப்படி ஒரு ஓவியம்’ வேண்டுமெனெக் கேட்டாரா?
அல்லது,
அவர் தன் தீப்பெட்டி
லேபிளுக்கு படமொன்று கேட்க, ஓவியன் இப்படி ஒரு காவியத்தை வடித்தானா? அப்படியெனில்,
தன் ஓவியத்தை தீப்பெட்டி தாயாரிப்பாளர் ஏற்றுக் கொள்வார் என்று அவன் எவ்வளவு ஆழமாக
நம்பியிருக்க வேண்ட்டும்!! எந்த அடிப்படையில் அவ்வளவு ஆழமாக நம்பினான்? அடிப்படையில்லாத
நம்பிக்கைகள்தான் ஆழமான நம்பிக்கைகளோ?
ஒரு வேளை, உரிமையாளரே
ஓவியராகவும் இருந்திருக்கக் கூடுமோ?
---தென்றல்
இன்னும் முத்தமிடும்
No comments:
Post a Comment