Tuesday, May 24, 2016

5. மல்லிகை மங்கைகள்
                                            --லினிரா( 24/06/2016)
 தாத்தா வீட்டு சந்து, பெயருக்குத்தான் சந்து! இரண்டு அடிக்கு இரண்டடி சிமெண்டு கற்கள் பாவப்பட்டு, அது மிக சுத்தமாக இருக்கும். காலையும், மாலையும் அழகான கோலங்கள் அலங்கரிக்கும். தாத்தா வீட்டின் எதிர் வரிசையில், 3 அங்குல ஆழமும், 3 அங்குல அகலமும் கொண்ட சிறிய சாக்கடை நெடுக ஓடும். ஒரு இடத்தில்கூட சாக்கடை நீர் தேங்காது. தாத்தா வீட்டு வரிசையிலிருந்த வீடுகளுக்குச் சாக்கடை, புழக்கடைப் பக்கம் இருந்தது. தாத்தாவின் பங்காளிகள் அடுத்தடுத்துக் குடியிருந்தனர். தாத்தா வீட்டைத் தவிர மற்ற வீடுகளில்லெல்லாம் குறைந்த பட்சம் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு தறிகள், ‘படுகு’ எனப்படும் நூள் சுற்றும் 10 அடி விட்டமுள்ள பெரும் இராட்டினம் ஒன்றும், 4 அடி விட்டமுள்ள இராட்டினம் ஒன்றும், 1 அடி விட்டமுள்ள இராட்டினம் இரண்டு, மூன்றும் இருக்கும். இவற்றில் சிறிய இராட்டினத்தை மட்டும் நெசவாளரின் மனைவி சுற்றுவார். மற்றவறைச் ‘சுற்ற’ கூலிக்கு பெண்கள் இருப்பார்கள். இப்படி ஒரே வீட்டில் நெசவாளி, தொழிலாளியாக இருக்க, அவர் மனைவி, இரண்டு, மூன்று பெண்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளியாக இருக்கும் ஒருவிதக் ‘கலப்புப்’ பொருளாதாரம் அங்கு நிலவியது. காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை நெசாவாளர்களின் வீட்டுத் தறிகளின் ’டக்கு, டடக்கு’ இன்னிசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டேயிருக்கும். மாலை 5 மணி சுமாருக்கு, நெசவாளிகளின் மனைவிகள் தங்கள் வீட்டுக்காரருக்கு பனங்கருப்பட்டி ’தண்ணி’ கொடுத்துவிட்டு, தாங்களும் ஒரு வாய் குடித்துவிட்டு, தலைவாரிப் பொட்டிட்டு, பூச்சூடி தங்கள், தங்கள் வீட்டுத் திண்ணைகளில் அமர்வார்கள். சிறிது நேரத்தில், கல கல வென்ற சிரிப்புடன் அவர்கள் கச்சேரி களை கட்டும். தலைவாருதல் என்றால் சும்மா ஒப்புக்கு முடியை சீப்பால் ’வரக் வரகெ’ன்று வாரி கோடாலி முடிச்சுப்போடும் சாமாச்சாரமெல்லாம் இல்லை. நன்றாக சுத்தாமான(!) தேங்காய் எண்ணையை முடிக்குத் தடவி, சீப்பால் சிக்கெடுத்து (சிக்கெடுக்கும் அளவிற்கு பெண்களுக்கு அன்று முடியிருந்தது; சிக்கெடுக்க பெண்களுக்குப் பொறுமையும் இருந்தது ) நன்றாக அழுந்த வாரி சவுரி வைத்து மூன்று ‘கால்’ சடை பின்னிக் கொள்வார்கள். 40 + களில் இருக்கும் நாரிமணிகள், ‘பிச்சாடோ’ என்ற துணி வளையத்திற்குள் தங்கள் முடியைச் சுருட்டி ஒரு விதமான கொண்டையைப் போட்டு அதைச் சுற்றி மல்லிகைச் சரத்தைச் சூடிக் கொள்வார்கள். 60, 70-களில் வந்த திரைப்படத்தின் கதா நாயகிகளுக்கு இந்த ‘பிச்சாடோ’ கொண்டைதான் ‘ஸ்டாண்டாட்’ தலை அலங்காரம். நான் அப்படிப் பார்த்த முதல் கதா நாயகி, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ தேவிகா! அந்தப் படத்தில் அந்தக் கொண்டையுடன் தேவிகா பாடும் ‘சொன்னதும் நீ தானா, சொல், சொல் என்னுயிரே’ வை இன்னும் என் நெஞ்சம் மறக்கவில்லை. ’குடிப்பது கஞ்சியே ஆனாலும், கட்டும் கந்தையைக் கசக்கிக் கட்டுவதும், நாள் தவறாமல் தலையில் மல்லிகைச் சரம் சூடுவதும்’ இப்பெண்களின் வாழ்க்கை நெறி! நெசவாளர்களின் அடையாளங்கள் அனைத்தும் அழிந்து போனாலும், வழிவழியாக வந்த, அவர்கள் பெண்கள் மாலையில் மல்லிகைப் பூ சூடிக்கொள்ளும் பழக்கம் மட்டும் இன்னும் மறையவே இல்லை. அன்று போல் இப்போதும் பல வீடுகளில் கடைகளுக்கு பூச்சரங்கள் கட்டிக் கொடுப்பது ஒரு குடிசைத் தொழிலாகவே இருக்கிறது. பூக்களையும், பூச்சரங்களையும் விற்பதற்காகவே இப்பகுதியில் ஒரு பெரிய மார்க்கெட்டே இயங்குகிறது. அதற்கு ‘பூ மார்கெட்’ என்றே பெயர். இப்படி தமிழ் நாட்டில் வேறெங்காவது இருக்கிறதா?
 இன்றைக்கும் தியாகராயப் புது வீதி 1, 2, 3, தேவாங்கர் பேட்டை, பூ மார்க்கெட் ஏரியாக்களில் மாலை நீங்கள் உலா வந்தீர்களென்றால் மல்லிகை மணக்கும் மங்கையரைப் பார்க்கலாம். ஆனால், இப்போது வடக்கும் தெற்கும் கலந்து விட்டதால், இந்தப் பகுதியில் குஜராத்திக் குடும்பங்கள் பெருகிவிட்டன. வீயாபாரம் செய்ய வந்த சேட்டுகள், பல நெசவாளர்களின் வீடுகளை, வாங்கி, அவற்றை இடித்து விட்டு, பெரும் கோட்டைகளைக் கட்டிவிட்டனர். நெசவாளர்களின் தறிகளும், திண்ணைகளும், கோவணங்களும் காணாமல் போய்விட்டன. , குஜராத்திப் பெண்களுக்கு, மல்லிகைப் பூச்சரங்கள் சூடிக்கொள்வதிலும் அவ்வளவாக விருப்பமில்லை போலும்! இன்று இந்தப் பகுதிகளில் நடந்து போனால், நெடு நெடு வென வளர்ந்த, நல்ல சிவப்பான, தலைக்கு பிறைச் சந்திர முக்காடிட்ட, வெடு வெடுவென வேகமாக நடந்து போகும் சேட்டுப் பெண்களைப் பார்க்கலாம். சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல் அவர்கள் வேக, வேகமாக நடப்பது கண்கொள்ளாக் காட்சி! எனக்கொரு சந்தேகம்: இந்தப் பெண்கள் ’விசுக் விசுக்’ கென்று எவ்வளவு வேகமாக நடந்தாலும் இவர்கள் தலை மேல் போட்டிருக்கும் மூன்றாம் பிறை முக்காடு கொஞ்சம் கூட விலகுவதில்லையே, அது எப்படி?   
                                       ---தென்றல் இன்னும் முத்தமிடும்    





No comments:

Post a Comment