Saturday, May 28, 2016

தென்றல் 
     தருணங்கள்...                                                       
6. கம்பெனி அய்யா!
                                                      ---லினிரா ( 29/05/2016)
 தாத்தா வீடு இருந்த வரிசையில், தாத்தா வீட்டிற்கு இருபுறமும் தறிகள் இருந்தன. தாத்தா வீட்டில் மட்டும் தறிகள் ‘மிஸ்ஸிங்’. தாத்தாவின் அப்பா கைத்தறி நெசவாளராக இருந்தவர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். இருவரும் அந்தக் காலத்திலேயே  நான்கு எழுத்து’ படித்து உத்தியோகம் பார்த்தவர்கள். என் தாத்தாவின் தம்பி- என் சிறிய தாத்தா ரெவின்யு இன்ஸ்பெக்டராக இருந்தவர்.
 தாத்தா அன்று கோவையின் பெருஞ் செல்வந்தர்களில் ஒருவரான மருதாசலம் செட்டியாரிடம் வேலை பார்த்து வந்தார். செட்டியார் கொஞ்ச காலம் சென்னையில் சினிமாத் துறையில் தன் திறமையைக் காட்டி விட்டு, பின்பு சினிமாவும் இவரிடம் தன் வேலையைக் காட்டிவிட்டதால், கோவையில் செட்டிலானவர். இன்றும் கோவை மேட்டுப்பாளையம்  ரோட்டிலிருக்கும் ‘ஷண்முகா தியேட்டர் செட்டியாருக்குச் சொந்தமானதுதான். அந்தக் காலத்திலேயே இது இரண்டு தளங்கள் கொண்டதாகக் கட்டுபட்டது.  தரை மட்டத்திற்குக் கீழே இருக்கும் கீழ் தளத்தில் நாடகங்கள் நடக்கும்; மேல் தளத்தில் சினிமா! செட்டியாருக்கு இதைத் தவிர கோவை பெரிய கடை வீதியில் கர்னாடிக் தியேட்டர் முன்புறம் ஒரு பெட்ரோல் பங்கும், திருப்பூரில் ஒரு பெட்ரோல் பங்கும் இருந்தன. இரண்டும் ’பர்மா‘ஷெல்’ கம்பெனியின் விற்பனை நிறுவனங்கள். தாத்தா செட்டியாரின் கணக்கு வழக்குகளைப் பார்த்து வந்தார்.
 தாத்தாவின் பங்காளிகலெல்லாம் காலை ஆறு மணிக்கே கோவணத்துடன் தறியில் உட்கார, கையில் அப்போது கோவையிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த ‘நவ இந்தியா’ செய்தித்தாளுடன் இவர் திண்ணையில் தரிசனம் தந்தருள்வார். ஏழுமணி சுமாருக்கு, ஒரு வெண்தாடி வேந்தர்---(இவர் பார்பதற்கு வினொபா பவே போலவே இருப்பார்). தலையில் குடுமியுடனும், வெற்று மார்பில் போர்த்திய துண்டுடனும் இருக்கும் இவரைப் பார்தாலே பயல்கள் எங்களுக்கு வெகு இளக்காரம் வெ. வேந்தர், தாத்தாவிடம்,‘நேடிகி ஏமி நியூஸ்?’ என்று தெலுங்கில் கேட்பார். உடனே தாத்தா அவரிடம் பேப்பரைக் கொடுத்துவிட்டு, குளிக்கக் கிளம்பி விடுவார். ‘தினமும் இப்படி ஓசிப் பேப்பர் படிக்க வந்து விடுகிறாரே இவர்’, என்று எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும். (அந்தக் காலத்தில் இப்படி ஓசியில் பேப்பர் படிக்கவென்றே ஒரு கூட்டம் அலைந்தது)
 தாத்தா குளித்துவிட்டு, எட்டு மணியளவில் தன் ‘கம்பெனி’க்கு கிளம்பி விடுவார். வீட்டிலிருந்து என்.ஹெச். ரோடு வழியாக, ஐந்து முக்கு வந்து, கிழக்கே திரும்பி., ‘பிரசென்டேஷன் கான்வென்ட் எதிரில் சாலையைக் கடந்து, தன் அலுவலகத்திற்குச் செல்வார். மதிய சாப்பாட்டிற்கு ஒரு மணிக்கு வந்தாரென்றால், இரண்டு மணியளவில் மீண்டும் அலுவலகம் செல்வார். மாலை ஆறுமணியளவில் வீடு திரும்புவார்.
 தாத்தாவின் மார்பின் குறுக்கே முப்புரி நூல் ( பூணூல்) தொங்கும் அதில் அவருடைய பரம்பரைச் சொத்தான, 5 அடி ஈட்டி பீரோவின் சாவி தொங்கும். தாத்தா துவைத்த, சுத்தமான வெள்ளாடைகளையே அணிவார். மேலே ஜிப்பா. இடுப்பில் நாலு முழ வேட்டி. இடது தோளில் மடிப்புக் கலையாத அங்க வஸ்திரம். வலது கையில் குடையுடன், சரக் சரக்கென்று செருப்பு ஒலி கட்டியம் கூற, அவர் அலுவலகம் செல்வதை சிறுவர்கள் நாங்கள் பிரமிப்புடன் பார்ப்போம். தாத்தாவிற்கு, செட்டியாரின் சகவாசத்தால் ஆங்கிலமும் ஒரளவிற்குத் தெரியும். பர்மாஷெல் கம்பெனி பெட்ரோல் பங்கில் அவர் வேலை செய்ததால், தாத்தாவை அவர் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் ‘கம்பெனி ஐயா’ என்றே அழைத்தார்கள். எங்களுக்கும் அவர் கம்பெனி ஐயாதான் – வளர்ந்து, நான் கல்லூரி செல்லும் போதுதான் அவரின் பெயர், வேலாசாமி செட்டியார் என்று எனக்குத் தெரியும். நெசாவாளியின் மகன் நெசவாளிதான் என்று இருந்த காலத்தில். என் கொள்ளுத் தாத்தா தன் இரண்டு மகன்களையும் நாலெழுத்து படிக்க வைத்து, அலுவலக வேலைக்கு அனுப்பினார். என் தாத்தா, தன் இரு மகன்களில் ஒருவரை (அடியேனின் தந்தை) உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், இன்னொருவரை சிவில் இன்ஞீனியராகவும் ஆக்கினார். என் சித்தப்பா, பரம்பிக்குளம்--- ஆழியார் அணை கட்டியதில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். என் தந்தை என்னை பி.எஸ்சி, எம், ஏ என்று ஒரு சில ‘எழுத்துக்கள்’ படிக்க வைத்ததால். இதோ நானும் மடிக் கணினியில் தட்டிக் கொண்டிருக்கிறேன்!

                                      ---தென்றல் முத்தங்கள் தொடரும்

No comments:

Post a Comment