Saturday, June 4, 2016

தென்றல்
      தருணங்கள்

7. மைனரும், மோரிஸ் மைனரும் (05/06/2016)
 செட்டியாருக்கு திருப்பூரிலும் ஒரு ‘பங்க்’ இருந்தது என்று சொன்னேன் அல்லவா?  மாதம் ஒரு முறை தாத்தா, செட்டியாருடன் அங்கு சென்று அதன் கணக்குகளைத் தணிக்கை செய்வது வழக்கம். அந்த சமயத்தில் நானிருந்தால், என்னையும் தாத்தா தன்னுடன் அழைத்துச் செல்வார். நான், தாத்தா, செட்டியார் மூவரும் திருப்பூருக்கு அவருடைய ’மோரிஸ் மைனர்’ காரில் செல்வோம். நான் முன் சீட்டில் ஒரு மைனர் போல பந்தாவாக அமர்ந்து செல்ல, செட்டியாரும், தாத்தாவும் பின் சீட்டில் அமர்ந்து நாட்டு நடப்புகளைப் பேசிக் கொண்டு வருவார்கள்.
 செட்டியாருக்கு, குருணையை திரிகையில் போட்டு அரைத்தால் ‘கரகர’’வென்று ஒரு ஒசை வருமே அது போல் ‘கண’ கம்பீரக் குரல், ஆஜானுபாகுவான உருவம். நீள் சதுர முகம்.  முடியை “உயர்ந்த மனிதன்” சிவாஜியைப் போல படிய சீவி, அகன்ற நெற்றியில் வீபூதி பட்டைகளையிட்டு, நடுவில் பெரிய சந்தனப் பொட்டு வைத்திருப்பார்.  நல்ல அகன்ற பெரிய விழிகள், எப்போதும் தீ கங்குகள் போல் ஜொலிக்கும். மூக்குக் கீழே நல்ல பருத்த மீசை! சமயத்தில் அதை நீவிக் கொண்டே செட்டியார் ‘ஹீங்கார” மிடுவார். சில சமயம் ‘என்னைப் பார்த்து, ‘ஏமிரா?’ என்பார் (செட்டியாருக்குத் தாய் மொழி தெலுங்கு; எனக்கும் அதுவே). எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விடும்.
 செட்டியாரின் கார் டிரைவர், செட்டியாருக்குச் சற்றும் சளைத்தவரில்லை! கருகருவென்றிருக்கும் தன் தலை முடியை எண்ணெய்விட்டு “நீலமலைத் திருடன்” ரஞ்சனைப் போல வாரியிருப்பார், இருவரும் ஜிப்பா அணிந்து, இடுப்பில் நாலு முழ வேட்டியை வெகு அலட்சியமாக ‘சுற்றி’ இருப்பார்கள்.  செட்டியார் எப்போதும் சந்தனக் கலர் ஜிப்பாவையே அணிவார். இவர் வெள்ளைக் கலர். செட்டியார் தோளில் நல்ல அகலமான அங்கவஸ்த்திரம் தொங்கும். இவர் தோலில் அது மிஸ்ஸிங்! இருவரும் ‘கட் ஷூ ‘ அணிந்திருப்பார்கள். இருவருக்கும் ஒரு முக்கியமான ‘சின்ன” வித்தியாசம்: செட்டியார் குரல் கண கம்பீரமாக ஒலிக்கும்; இவர் குரல் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட எலிக்குஞ்சு. ‘கத்து’வது போலிருக்கும்.
 அந்தக் காலத்தில் கார்களை சாவி போட்டுத் ‘திருகி’ யெல்லாம் சுலபமாக ’ஸ்டார்ட்’ செய்துவிட முடியாது.  பல சமயங்களில் சாவியைப் போட்டுத் திருகினால், ‘டுர்ர்க், டுர்ர்க்’ என்று இரண்டு மூன்று ஒலியை எழுப்பிவிட்டு, கார் ‘’ஆழ் துயிலில்” ஆழ்ந்துவிடும். இந்த மாதிரி சமயங்களில் வண்டியை உயிர்பிக்கவென்றே கார் கம்பெனியால் (இலவச இணப்பாக) கொடுக்கப்பட்ட, ஒரு கனாமான, நீளமான. வளைந்த கம்பியை (க்ராங்க் ஹேண்டில்’) காரின் முன்புறம், ’பானெட்’டுக் கீழே உள்ள துவாரத்தில் நுழைத்து, சுற்ற வேண்டும். சமயத்தில் எவ்வளவு சுற்றினாலும் வண்டி தன் துயிலிலிருந்து எழாது. அது ‘உனாக்காச்சு, எனாக்காச்சு’ என்று, வெயிலில் சுருண்டு படுத்திருக்கும் நாய் போல அசைவற்றிருக்கும். பார்பவர்களுக்கு அது காரா, கட்டையா என்ற ஐயம் வரும். அந்த மாதிரி சமயங்களில் நம் டிரைவர் அண்ணாச்சி, தரையில் மண்டியிட்டு, தன் நான்கு சாண் உடம்பை, எட்டாக வளைத்து, காரின் தூக்கம் களைக்க, பிரம்மப் பிரயத்தனம் செய்வார். அப்போது அவரைப் பார்க்க எனக்குச் சிரிப்பு சிரிப்பாக வரும். நான் சிரிப்பது அவருக்கு எப்படியோ தெரிந்து விடும். தலையைத் திருப்பி, என்னைப் பார்த்து ஒரு முறை முறைப்பார். நான் என்ன லேசுப்பட்டவானா? நானும் திருப்பி முறைப்பேன். சமயங்களில், செட்டியாரிடம் போய் இன்னும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை’, என்று வத்தி வைத்து விடுவேன். அதைக் கேட்கும் செட்டியார், டிரைவரை சத்தம் போடுவார்.  மேலும் ஒரு பொடிப்பயலாகிய, நான் அவருக்குச் சமமாக, எதோ கார் என்னுடையதே என்பது போல் முன் சீட்டில் அமர்ந்து வருவது டிரைவருக்கு கொஞ்சமும் பிடிக்கவேயில்லை: நானும் லேசுப்பட்டவன் இல்லை! ‘ஆஃப்டர் ஆல், நீ டிரைவர்தானே!’ என்பதைப் போலத்தான் அவரை பார்ப்பேன். இதன் காரணமாக, எங்கள் இருவருக்குள்ளும் அன்றைய அமெரிக்கா-இரஷ்யா’ ‘கோல்டு வாரை’ப் போல ஒரு நிழல் பகைமை நிலவியது.

                                   ---தென்றல் முத்தங்கள் தொடரும்

No comments:

Post a Comment