Friday, July 8, 2016


கொசுக்கடி
   ---லினிரா (09/07/2016)

கை மேல் கொசு
ஓங்கி அடித்தேன்
உயிர் போகும் வலி
        ***
ஜன்னல் கம்பிகளில்
தொங்குகின்றன 
முதிர் கன்னியின் 
கிழிந்த ஆடைகளும் 
கிழியாத கனவுகளும்
        ***
அகலப்படுத்தப்பட்ட சாலையில் 
காரோட்ட                                                                          
வெகு சுகமாய்த்தானிருக்கிறது
வெட்டி சாய்க்கப்பட்டு
முண்டங்களாய் நிற்கும்
மரங்களைக் காணும் வரை
        ***
விடுமுறை முடிந்து
பறவைகள் கூடுகளுக்குப்
பறந்து விட்டன
வீடு சுத்தமாயிற்று
மனம் வெறுமையாயிற்று
                    ***
மணமக்கள் போல்
அலங்கரித்துக் கொண்டு சென்றனர்
ஆதார் புகைப்படமெடுக்க
         ***
முதுகின் பின்னால் நின்று கொண்டு
என் கண்களை மூடியது குழந்தை
மூடிய கண்களுக்குள் பேரொளி


No comments:

Post a Comment