Friday, April 29, 2016

2.  நான் ஆசிவதிக்கப்பட்டவன்!
                                          ---லினிரா (30/04/2016)
 நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது,
 ஒரு நாளும் ஏரிக்கரையில் சிறுவர்களுடன் சுற்றியதில்லை!
 ஆற்று மணலில் கபடி ஆடியதில்லை!
 கிணற்று மேட்டில் கோலி, பம்பரம் விளையாடியதில்லை!
 மாந்தோப்பில் மாங்காய் திருடித் தின்றதில்லை!
 புளியமர நிழலில் பையன்களுடன் கட்டிப்பிடித்து உருண்டு    சண்டையிட்டதில்லை!
 ஆல மர விழுதுகளில் ”தூரி” ஆடியதில்லை!
 விழுதுகளைப் பிடித்துக்கொண்டு, விக்கிரமாதித்தன் வேதாளம் போல் தலைகீழாய்த் தொங்கியதுமில்லை!
 இருந்தாலும்,  
 நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்!
 என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களெல்லாம் தாத்தா, கொள்ளுப் பாட்டியுடன் கழிந்தன. அப்பா வழி தாத்தாவின் வீடு, கோவையில் இருந்தது. மரக்கடை மூலையில், நாவாப் ஹக்கீம் ரோட்டிற்கு எதிரில், மில் ரோடிலிருந்து வடக்கே பிரியும் சாலையான தியாகராயப் புது வீதி நெம்.1-ல், ஒரு சந்தில், அது இருந்தது. ஏறக்குறைய எட்டடி அகலமிருந்த அந்தச்சந்தின் இரு புறமும் “U” வடிவ நாட்டு ஓடுகள் வேய்ந்த வீடுகள் இருக்கும். ஓட்டு வீடுகள்தான். ஆனால் பிரம்மாண்டமனவை. தாத்தாவின் புழக்கடை- பின்புறம் இன்னொரு தெருவை தொடும். ஒன்றுக்கடுத்து ஒன்று என்று வரிசையாக இருந்த அவரின் பங்காளிகளின் வீடுகளும் அவ்வாறே! தாத்தாவின் தாத்தா தெரு முழுக்க ஓரே வீடாகக் கட்டி ஆண்டவர். 
 தாத்தா வீட்டு வரிசையில், எல்லா வீடுகளின் முன்புறமும் 3 அடி உயரத்தில், 1½ அடி அகலத்தில் திண்ணை இருக்கும். எதிர் வரிசையில் இவ்வாறு திண்ணை கிடையாது. திண்ணை அந்தஸ்தின் அடையாளம்! சற்றே உயரமான படிகளை ஏறி, ஆளோடியைக் கடந்து போனால், ஒரு பெரிய ஹால், அதையொட்டி, சதுர வடிவில் திறந்த முற்றம்; முழு நிலாக்காலங்களில் முற்றத்தில், நிலவும், மேகங்களும் ஓடிப் பிடித்து விளையாடும்: அமாவாசை நாட்களில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டும்.  பெளர்ணமிக் காலங்களில் கொள்ளுப் பாட்டியின் எழும்புகள் துருத்திக் கொண்டிருக்கும் மடியில் படுத்துக் கொண்டு, ’ஜில்’ லென்று வீசும் தென்றலை சுவாசித்துக் கொண்டே மாயாஜாலக் கதைகள் கேட்பது…..அடடா, அது ஒரு தனி சுகம்! முற்றத்திற்கு ஒரு புறம் பெரிய ஹால், அதனுடைய நீட்சியாக ஒரு சிறிய சமையலறை, அதை ஒட்டி கூரையில்லாத குளியலறை. அந்தக் காலத்தில் ஆண்கள் கோமணத்துடனும், பெண்கள் பாவாடையை கழுத்துவரை மேலேற்றிக் கட்டிக் கொண்டும் குளிப்பதுதான் வழக்கம். பிற்காலத்தில் வந்து விட்ட கூரையிட்ட குளியலறைகளும், அவற்றில் ஆதாம், ஏவாள் திருக்கோலத்தில் குளிக்கும் பழக்கமெல்லாம் அப்போது இல்லை! எல்லாமே ஓட்டு வீடுகளாததால் பறவைப் பார்வைகளுக்கும் வழியில்லை! சொல்லப்போனால், அப்படி ஒரு சங்கதி இருப்பதே யாருக்கும் தெரியாது! (மக்கள் அந்தக் காலத்தில் எவ்வளவு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள்!) தாத்தா. வீட்டின் தரை சின்னஞ்சிறு காரைக் கற்களும் ஒரு வித சாந்தும் கலந்த கலவையால் ஆனது. கொள்ளுப் பாட்டி அதைச் சாணியால் மெழுகி, மெழுகி, சலவைக்கல் போல் இழைத்திருந்தாள். தாத்தா, மனைவியை இழந்தவர். சமையலை கவனித்துக் கொண்டது ஐந்தாம் வகுப்பு படித்த, பதினெட்டு வயதான, திருமணத்திற்குக் காத்து கொண்டிருந்த சரோஜா அத்தை. அவருக்கு உதவி 93 (!) வயதான கொள்ளுப் பாட்டி.
 விடுமுறை நாட்களில், வெயிலில் ‘ஆடு ஆடெ’ன்று ஆடிவிட்டு வந்தால், அத்தை+கொ. பாட்டி சமையல் வாசனையில் அடி வயிறு ‘கப கப’ வென்று எரியும். கை, கால் கழுவிக் கொண்டு வந்து வரிசையாக உட்கார்ந்தால், பாட்டி முதலில் இராகிக் களியை சட்டியிலிருந்து சுடச்சுட எடுத்து உருட்டி வட்டிலில் போடும். சூடு தாங்காமல் பாட்டி ’ஊஊ’ என்று அவ்வப்போது ஊதும். அந்த மாதிரி சமயங்களில், சில சமயம், அதன் வாயிலிருந்து எச்சில் ஒழுகும்; ஒழுகும் எச்சில் களி உருண்டையை ஆசிர்வதிப்பதும் உண்டு. ஒரு நாளும் நாங்கள் அதற்காக அருவருப்படைந்தது இல்லை: ’அருவருப்பு’ போன்ற அற்ப விஷயங்கள் தெரியாமல், அன்பு போன்ற அற்புத விஷயங்கள் மட்டுமே தெரிந்த வயது அது! பாட்டி உருண்டைகளை வட்டிலில் போட்டவுடன், அத்தை அதன் மேல் சுடச்சுட கத்திரிக்காய் அல்லது மொச்சைக் கொட்டை அல்லது வேறு ஏதாவது ஒரு குழம்பை ஊற்றும். களி உருண்டையை, விரலைச் சுட்டுக் கொண்டே அதைப் பற்றிக் கவலை படாமல், வாயில் வைத்து, சூடு தாங்காமல், ‘ச்சூ ச்சூ’ என்று மென் ஒலிகளை எழுப்பிக் கொண்டே சப்பு கொட்டிக் கொண்டே சாப்பிட்ட சுகத்தை இப்போது நினைத்தால்,“ மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மா நிலத்தே!” என்ற தேவார வரிகள்தான் மனதில் ஊஞ்சல் ஆடுகின்றன. 

                                        --தென்றல் இன்னும் முத்தமிடும்