Saturday, June 11, 2016



தென்றல்
      தருணங்கள்
                                                         -லினிரா (12/06/2016)
8.தேள் கண்டார் தேளே கண்டார்!  
                                   -
 அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தாயிற்று! நேற்று மாலை வாசல் தெளித்த கோடை மழை, இன்று சூட்டைக் கிளப்பிவிட்டது. வீட்டில் புழுக்கம் தாங்க முடியவில்லை.
  மின்சாரம் தான் இருப்பதை வெட்டி வெட்டி’ நிரூபித்ததால், கொஞ்சம் காற்றாடலாமென்று, வீட்டைவிட்டு வெளியே வந்தேன். வெளியில் அதைவிடக் கொடுமை! திரும்ப வீட்டிற்க்குள் செல்ல யத்தனிதேன். மனதில் ஏதோ உறுத்த, கால்கள் தயங்கின. தலையைப் திருப்பி, ‘என் உள்ளங்கவர் கள்வன்’ யாரென்று பார்த்தால், அது சுமார் ஐந்த அங்குல நீளமுள்ள ஏதொ ஒரு ஜந்து! கேட்டருகில் காம்பவுண்ட் சுவரில் ஒண்டிக் கொண்டு இருந்தது. உற்றுப் பார்த்தேன் - தேள் மாதிரி இருந்தது.
சற்றே குனிந்து பார்த்தேன் அது தன் மூன்றங்குலக் கொடுக்கை வளைத்து, ‘அற்பனே அருகில் வாடா’ என்றது. என் அறிவு உடனே அலாரம் அடிக்க, பின் பக்கம் ஓடி, ஒரு பெரும் கட்டையை எடுத்து வந்து ஒரே போடு!
 ஆனால் கால்களில் இன்னும் நடுக்கம் நின்ற பாடில்லை! பேசாமல்  வந்து படுக்கையில் விழுந்தேன்—தேள் ஒரு வேளை கடித்திருந்தால்……. மனம் தறிகெட்டு ஓடி----- நிஸீம் எஸெக்கியலின் ‘தேளின் இரவு’ (Night Of The Scorpion) கவிதையில் வந்து நின்றது!
 அப்போது எஸெக்கியலின் குடும்பம் ஒரு கிராமத்தில் வசித்து வந்தது. கவிஞர் சிறுவன். சொற்ப வீடுகளே இருந்த அந்தக் கிராமத்தில் விவசாயம்தான் முக்கிய வாழ்வாதாரம். மின்சாரம் இன்னும் தன் பார்வையைப் பதிக்காத கிராமம் அது. அந்தக் கிராமத்தில் எஸெக்கியலின் தந்தை மட்டுமே ஓரளவிற்குப் படித்தவர்.
 ஒரு நாள் மாலை மங்கிய நேரம்.எஸெக்கியலின் தாய் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த தானிய மூட்டைகளின் அருகே வருகிறார். அங்கே இடுக்கில் ஒண்டிக் கொண்டிருந்த தேளொன்று, பயந்து போய் அவர் இடது பெரு விரலில் கொட்டிவிடுகிறது. வலி பொறுக்க முடியாமல்  அந்தப் பெண்மனி, அப்படியே தரையில் படுத்துக் கொண்டு துடிக்கிறார்.
 சற்று நேரத்தில் செய்தி காட்டுத் தீ போல் கிராமம் முழுவதும் பரவி விடுகிறது. மக்கள் சாரி சாரியாக எஸெக்கியலின் வீடு நோக்கி வர ஆரம்பிக்கின்றனர். எல்லோருடைய மனதிலும் ஒரு பதைபதைப்பு- ஏதோ தங்களையே தேள் கொட்டி விட்டதைப் போல!
 எஸெக்கியலின் தாயார் நடுக் கூடத்தில் படுத்திருக்கிறார் வலியால் அவர் துடிப்பதைப் பார்த்து, ஆளாளுக்கு, ஒவ்வொரு விதமாக ஆறுதல் கூறுகின்றனர்’
  ஒருவர் சொல்கிறார்,“கொஞசம் பொறுத்துக்கம்மா. நீ செய்த தீ வினைப் பயன்களெள்லாம் அழிந்து விடும்!”
 இன்னொருவர் சொல்கிறார், “விஷம் உடம்பில் ஏற ஏற உன் பாவங்களெல்லாம் கழிந்து விடும்!”.
 ஒருவர் பாடம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
 “இந்தத் தேள்கடி, உன் உடலைப் புனிதமாக்கட்டும்!” இது ஒரு வயதான பெண்மணியின் ஆசிர்வாதம்!
 இன்னொமொருவர் சொல்கிறார், ”அந்தத் தேளை கண்டு பிடித்து அடித்துவிட்டால், உடனே விஷம் இறங்கி விடும்!”
 அதுவும் சரிதான் என்று சிலர் சொல்ல, தேளைத் தேடும் படலம் ஆரம்பமாகிறது. ஆனால், எவ்வளவு தேடியும் தேள் கிடைத்த பாடில்லை!
  இன்னொரு வயதான பெண்மணி, எஸெக்கியலின் தாயாரிடம் பேரன்புக் குரலில் கேட்கிறார், “தாயே ஏதாவது தெய்வக் குற்றம்?”
  இப்படி ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்க, கொஞ்சம் படித்தவரான, அதானல் கொஞ்சம் பகுத்தறிவும் பெற்றவரான எஸெக்கியலின் தந்தை எங்கிருந்தோ ஒரு பாரபின் மெழுகுத் துண்டைக் கொண்டு வந்து, அதை தன் மனவியின், தேள் கடிபட்ட பெரு விரலில் அப்பி, மெழுகைப் பற்ற வைக்கிறார்- மெழுகு எரிந்து, விரல் சூடேறினால், விஷம் இறங்கிவிடும் என்று அவர் நம்புகிறார். சிறுவன் எஸெக்கியலுக்கு, அது தன் தாயாரின் விரலே பற்றி எரிவது போல் தோன்றுகிறது.
 வலி தாங்காமல் உடலை முறுக்கிக் கொண்டு அரற்றும் எஸெக்கியலின் அம்மாவைச் சுற்றி கிராமத்துப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு, “ஐயோ ஆணடவனே! இப்படி ஆகிவிட்டதே!” என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர், அறையில் இருக்கும் ஒவ்வொருவர் கையிலும் ஹரிக்கேன் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி. பலவாறாகக் குனிந்திருக்கும் மனிதர்களின் உடல்கள், அவற்றின் வெளிச்சத்தில் மண் சுவர்களில் இராட்சத தேள்---நிழல்களாகப் (giant scorpion shadows) படிகின்றன.
 தேளின் விஷம் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை! அது, அடுத்த நாள்- இருபது மணி நேரம் கழித்து, தானே இறங்கி விடுகிறது. விஷம் இறங்கிய பின் கண் விழித்த கவிஞரின் தாய் சொல்கிறாள்: ”நன்றி கடவுளே! தேள் என் குழந்தைகளை விட்டு விட்டு, என்னைக் கடித்ததே!”
 அது சரி,
 நான் அடித்தது தேளா அல்லது அதன் பங்காளியான நட்டுவாக்காலியா?   
 படத்தைப் பார்த்து யாராவது இந்த ’தருமி’யன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க முடியுமா?

                                  


                                     ---தென்றல் தருணங்கள் தொடரும்