தென்றல் தருணங்கள் (தொடர்ச்சி) 12/03/21
சிறிது
காலம் கொரொனா போன்ற இன்ன பிற கரணங்களால் நின்று போயிருந்த ‘தென்றல் தருணங்கள்’ இப்போது
மீண்டும் வீசத் துவங்கியிருக்கிறது. இந்தக் கோடை காலத்தில் தென்றல் வீசினால் எப்படி
இருக்கும்- எவ்வளவு சுகம்!
-அன்புடன் லினிரா
10. கல்லூரிப் பூக்கள்-1
காலை மணி
11. கல்லூரியில் இரண்டாம் மணி வகுப்பு! புகுமுக வகுப்பு (பி.யு.சி) மாணவர்களுக்கு ஆசிரியர்
ஆங்கிலத் துணைப்பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பாடம் சார்லஸ் டிக்கின்ஸ்சின் புகழ்
பெற்ற நாவலான ‘எ டேல் ஆஃப் டூ சிடிஸ்”
மாணவர்கள்
முன்னே காட்சி விரிகிறது: கொடும் சிறைச்சாலை- சிறிய அறை – வெளிச்சத்திற்கு மட்டும்
மேலே உயரத்தில் ஒரு சிறிய ஜன்னல். அதன் ஊடே சிற்றொளி அறையிலிருந்த கைதியின் முகம் மேல்
படுகிறது. அவர் கைகள் குழந்தைகள் அணிவதற்காண காலணியைத் தயாரித்துக் கொண்டிருந்தது.
அவர் ஒரு மருத்துவர்!
அவர்
அந்த அறைக்கு வந்து எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன என்று அவருக்கே தெரியாது. ஃபிரான்ஸ்
நாட்டுப் பிரபுக்களால் ‘அரசாங்க விருந்தாளி’யாக்கப்பட்டு, அவர் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
அவர் சிறையிலடைக்கப்பட்ட போது, அன்னையற்ற அவர் மகளுக்கு ஏழு வயது!
மருத்துவரின்
நினைவாற்றல் அந்தப் புள்ளியை விட்டு அகலவே இல்லை! அவரைப் பொறுத்தவரை, காலச் சக்கரம்
சுழல்வது நின்று போயிற்று, ஓடும் காலத்தின் மீது ஓடா நினைவின்றி, அவர் கைகள் தன் மகளுக்காக
காலணி தயாரித்துக் கொண்டிருந்தன. சிறைபிடிக்கப்படுவதற்கு முந்தைய நாள், மருத்துவர்
தன் செல்ல மகளுக்கு தானே ஒரு காலணி செய்து தருவதாக வாக்களித்திருந்தார். அதைத்தான்
சிறையில் தன் அறையில் அவர் தயாரித்துக் கொண்டிருந்தார் பல வருடங்களாக!
பாடம் நடத்திக்
கொண்டிருந்த ஆங்கிலப் போராசிரியர் பாடம் நடத்துவதில் கில்லாடி! அந்தக் கல்லூரியிலேயே
மிகவும் ‘ஸ்டைலாக’ உடை அணிபவர், மாணவர்களை தன் நண்பர்களாக(!) நடத்துபவர். அவர் ஆங்கில
உச்சரிப்பு அப்பழுக்கற்றது! அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை ஆங்கிலத்திலேயே(?) போதிப்பவர்!
பாடம் நடத்தும் போது மறந்தும் அவர் வாயிலிருந்து ஒரு தமிழ்ச் சொல் கூட வராது! அவர்
பாடம் நடத்தும் போது மாணவர்கள் ஒரு விதமான சுய நினைவற்ற நிலைக்கு ஆளாகி, பாடத்துடன்
‘செம்புலப் பெயல் நீர்’ போல் கலந்து விடுவர்!
நேரம் போனதே
தெரியவில்லை! வகுப்பு முடிந்ததற்காண மணி அடித்தது. ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேறினார்.
உடனே, ஒரு மாணவன் வேகமாக அவரைப் பின் தொடர்ந்து சென்று, ‘சார்! சார்!’ என்றழைத்தான்
(அப்போது மாணவர்களிடையே ‘எக்ஸ் க்யூஸ் மீ!’ பிரபலமாகிவில்லை! அனேகமாக, எல்லோரும் தமிழ்
வழி படித்த மாணவர்கள்! மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வராத பொற்காலம்! ஆங்கல பள்ளிகள் அண்டாத
அற்புதக் காலம்!)
ஆசிரியர்
திரும்பிப் பார்த்தார். என்ன என்று கண்களாலேயே கேட்டார்.
மாணவர்
சொன்னார், “சார் இதே பாடத்தை எஸ்.எஸ். எல். சியில் எங்கள் தலைமையாசிரியர் நடத்தக் கேட்டிருக்கிறேன்.
அவர் சிறைக் கைதியை டாக்டர் ‘மானெ’ என்று தான் சொல்வார். நீங்கள் ‘மானெட்’ என்று சொல்கிறீர்களே?”
என்று கேட்டார்- அந்தக் காலத்தில் மாணவர்கள் தைரியமாக தங்கள் ஆசிரியரிடம் ‘பேசுவார்கள்!
பேராசிரியர்,
“இஸிட்?” என்று கேட்டுவிட்டுப் போய்விட்டார்.
மாணவருக்கு
அச்சத்தில் உடல் வியர்த்தது!
இரண்டு
நாட்கள் கழிந்தன! மீண்டும் அதே வகுப்பு- அதே ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்தார். மாணவனைப் பார்த்தார். “உன் பெயர் என்ன?”வென்று
கேட்டார், பதில் வந்ததும் “எந்த ஊர்?” என்றார்.
மாணவன் ‘விஜய மங்கலம்’ என்றான். அது எந்த திசையில் இருக்கிறது என்று கேட்டார். மாணவனுக்கு
அச்சம்; ஆச்சரியம்! “வகுப்பை விட்டு வெளியே போ!” என்று சொல்லாமல், ஊர் பெயரெல்லாம்
கேட்கிறார்; திசை பற்றிக் கேட்கிறார்..முதல்வர் அறை … டி.சி…ஐயோ… அப்புறம்… இப்படி
அவர் சிந்தனை ஓடியது. வகுப்பிலிருந்த மற்ற மாணவர்களுக்கு, “என்ன நடக்கிறது?’ என்று
ஒன்றும் புரியவில்லை! முதல் நாள் வகுப்புக்கு வெளியே மாணவன் செய்த ‘சேட்டையை’ பற்றி
அவர்களுக்கு ஒன்றும் தெரியாது! மாணவன் அச்சத்துடனும், குழப்பத்துடனும் “கிழக்கு!” என்றான்.
உடனே ஆசிரியர்
வகுப்பறையில் எல்லா மாணவர்களும் பார்த்துக் கொண்டிருக்க, தரையில் மண்டியிட்டு, தன்
சிரம் தாழ்த்தி, இரு கரம் கூப்பி அந்த திசையை நோக்கி வணங்கினார்! பின் மாணவனைப் பார்த்துச்
சொன்னார், “உன் தலைமையாசிரியர் சொன்னது தான் சரி! நான் சொன்னது தவறான உச்சரிப்பு,
‘ஐம் ஸாரி!” என்றார்.
சக மாணவர்களுக்கு
ஒன்றும் புரியவில்லை! வகுப்பு முடிந்ததும் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொள்ள, நடந்ததை
அவன் விவரித்தான். ‘அப்பழுக்கற்ற ஆங்கில உச்சரிப்புக்குப் பெயர் போன அந்தப் பேராசிரியர்,
ஒர் ஆங்கில வார்த்தையை தவறாக உச்சரிக்க, அதை இந்தக் கிராமப்புற மாணவன் சுட்டிக் காட்டினானா?’
என்று அவர்களுக்கு ஒரே வியப்பு!
பல ஆண்டுகள்
ஆங்கிலம் கற்பித்துக் கொண்டிருக்கும் ஓர் அனுபவம் மிக்க ஆசிரியர், அதுவும் தன் ஆங்கில
உச்சரிப்புக்கு கல்லூரியில் பேர் போன ஒரு பேராசிரியர், புகுமுக வகுப்பு படிக்க வந்திருக்கும்
ஒரு கிராமப்புற மாணவனிடம் தன் தவறான உச்சரிப்புக்காக பகிரங்கமாக, வகுப்பிலேயே, அதுவும்,
எல்லா மாணவர்கள் முன்பும் மன்னிப்புக் கேட்டார்! அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் பாடம்
மட்டும் நடத்த வில்லை; பண்பு நெறிகளையும் வாழ்ந்து காட்டினார்கள்!
இந்தக்
‘கதை’ அரங்கேறியது 1967-ம் ஆண்டு! ஏறத்தாழ ஐம்பது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு!
பேராசிரியர்
பெயர்: உஸ்மான் சேட்.
மாணவர்
பெயர். செ.கந்தசாமி.
எப்பேர்பட்ட
பேராசிரியர்! எப்பேர்பட்ட மாணவர்!
கற்றோரைக்
கற்றோரே காமுறுவர் அல்லவா?
பி.கு.
1: உயர் நிலைப்பள்ளி அளவில் ஆங்கில உச்சரிப்பைப் பற்றி யாரும் அதிகமாகக் கவலைப்பட மாட்டார்கள்!
ஃப்ரென்ஞ் மிகவும் மென்மையான மொழி- அதில் பல எழுத்துக்கள் உச்சரிக்கப்படுவதில்லை. ஆகவே,
அந்த மொழியைச் சரியாக உச்சரிப்பதைப் பற்றி ஆசிரியர்கள் யாரும் அதிகமாகக் கவலைப்பட மாட்டார்கள்;
அப்படி ஒரு விஷயம் இருப்பதற்கான விழிப்புணர்வே பல ஆசிரியர்களுக்கு இருக்காது; ‘எப்படி
உச்சரித்தால் என்ன, பசங்களுக்கு எங்கே தெரியப் போகிறது!’ என்று அலட்சியமாக எண்ணாமல்,
ஃப்ரென்ஞ் சொற்களை, அதுவும் பெயர்ச் சொற்களை, மிகச் சரியாக உச்சரித்துச் சொல்லித்தர
வேண்டும் என்ற அந்த ஆசிரியரின் பேரார்வத்தை எழுத்தில் வடிக்க வார்த்தைகள் ஏது? அவர்
கற்பித்த விதம் ஒரு மாணவனை, தன் பேராசிரியரிடமே துணிந்து பேச வைத்திருக்கிறதென்றால்,
அந்தப் பாடமும், அதை அவர் சொல்லித் தந்த விதமும்-ஐயோ, அதை என்னவென்று சொல்வது- ஒரு
ஆசிரியரால் ஒரு மாணவனைச் செதுக்கவும் முடியும், சிதைக்கவும் முடியும்! (A Teacher can
make or mar a student!) - எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! எஸ்.எஸ்.எல்.சி-யில்
கந்தசாமிக்குக் கிடைத்த அந்த அருமையான ஆசிரியப் பெருந்தகையின் பெயர். திரு.பீமசேன ராவ்.
இப்போது 94 வயதாகும் இவர், சத்தியமங்கலத்திற்கு அருகில் அரியாம்பாளையத்தில் வசித்து
வருகிறார். ஆசிரியர் தன் மாணவனை மட்டுமல்ல, அவர் தந்தையின் பெயரையும் (சென்னிமலை கவுண்டர்) மறக்கவில்லை! அதுமட்டுமல்ல, அவர் ஒரு நாள் கந்தசாமியைத்
தன் வீட்டிற்கு அழைத்து தன் குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். இன்றும்
கந்தசாமி தன் ஆசிரியரைiப் பார்க்க அரியாம்பாளையம் சென்று வருகிறார்!
பி.கு
2: திரு. செ.கந்தசாமி, வேதியியலில் பட்டப்படிப்பையும். கல்வியியல் கல்லூரியில் பட்டப்படிப்பையும்
முடித்துவிட்டு, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் சேர்ந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றி,
மிக உயர்ந்த பதவியை அடைந்து, பணி ஓய்வுக்குப்பின் தற்போது பெருந்துறையில் வசித்து வருகிறார்.
கந்தசாமியும் நானும் வகுப்புத் தோழர்கள். 1967-70 இளம் அறிவியல் பட்டப்படிப்பு வகுப்பில்
ஒன்றாகப் படித்தவர்கள். எங்களை மி.மீ, மி.மீராகச் செதுக்கிய கல்லூரி, கோவையில் இன்றும்
கல்விப் பணியில் சிறந்து விளங்கும் பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி! அப்போது
அதன் பெயர் பூ.சா.கோ கலைக் கல்லூரி. அப்போதெல்லாம் அறிவியலுடன் கலைப்பாடங்களைக் கற்றுத்
தரும் கல்லூரிகளெல்லாம் கலைக்கல்லூரிகள் என்றே அழைக்கப்பட்டன. திரு. கந்தசாமி இப்போது
எங்கள் அணியை ஒருங்கிணைக்கும் சீரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
--------------------0---------------------
என்னுடைய வலைப்பூ முகவரி: kattappai.blogspot.com
No comments:
Post a Comment