கடவுள், கள்வன், மற்றும் கங்கை!
1.அவன் விழி சிரித்து
நாம் பார்த்ததில்லை!
அவன் குரலையும்
நாம் கேட்டதில்லை!
ஆனாலும், அவன் முகத்தில்
முகிழ்ந்தும் முகிழாத முறுவலை
இன்று கண்டதும்
வயிற்றிலிருந்து நெருப்புப் பந்தொன்று
மேலெழும்பி பாய்ந்து,
நெஞ்சை நிறைத்து,
தொண்டைக் குழியை அடைக்க,
கண்களில் திரண்ட துளிகள்,
கீழே விழும் முன்பே கருகிப் போயின!
கடவுளும் கள்வனும்
இரட்டைப் பிறவிகள்!
இரவில் வருவர் இருவரும்
வேண்டியதை அள்ளிச் செல்வர்!
கடவுளை விடத் கள்வன் சான்றோன்!
கள்வன் களவாடுவது தன் பசி தீர்க்க!
கடவுள் களவாடுவது யார் பசி போக்க?
கள்வன் வந்து சென்றதற்கு
ஏது அடையாளம்?
கடவுள் வந்து சென்றதற்கு அடையாளம்:
அவன் விட்டுச் செல்லும் உடல்
அதை வைத்து நாம் துடிக்க வேண்டும்!
அதைப் பார்த்து அவன் மகிழ வேண்டும்!
இந்த குரூர மனதை,
எந்தக் கள்வனிடம் நாம் கண்டிருக்கிறோம்?
அன்று பரந்தாமன் பார்த்தனிடம் சொன்னான்:
“அறம் அழியும் போது நான் வருவேன்!”
ஆனால் இன்றோ,
அறம் செய்ய விரும்பிய அருணையே
அவன் கடிதிழுத்துச் சென்றான்!
அறம் செய்ய விரும்பியவர்களை
இப்படியெல்லாம் இடையிலேயே
‘இழுத்து’ச் சென்றால்,
அறம் இங்கு எப்படி தளிர்க்கும்?
அவனுக்கு இது ஏன் புரியவில்லை?
பெற்றெடுத்து, பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி
பையப்பைய வளர்த்தெடுத்து
அவை தன்னில் சான்றோனாக்கி
ஊர்கூடி மெச்சுகையில்,
உச்சி முகர்ந்து, உள்ளம் பூரிக்கையில்,
இடிகொண்டு தாக்கி,
இப்படி வேறோடு சாய்ப்பதென்றால்
வாழ்வின் பொருள்தானென்ன?
ஆண்டவனே! அறம் செய்ய விரும்புவது
அப்படியொரு குற்றமா?
2.குற்றமெனில் உன் கீதையும் பொய்யா?
அங்கே, உன் பள்ளியில்,
ஆசிரியர் பற்றாக்குறையா?
அதனால்தான் எங்கள் அருணை
அள்ளிச் சென்றாயா?
செல்லுமுன் சொல்லியிருந்தால்,
’சென்று வா!” என்று அனுப்பி வைத்திருப்போமே!
“ஏனிப்படி?” என்று கேட்டால்
அவன் பாவமும், எங்கள் பாவமும்
அழிவதற்கே அழைத்துச் சென்றேன் என்பாய்!
உன் பாவம் கழிய எந்தக் கங்கைக்குப் போவாய்?
”காலையில் பார்க்கலாம்!”
என்று சொல்லிப் போனவனை,
கதிரவன் உதிக்கும் முன்னே
கவர்ந்து சென்றாயே,
உனக்கெதற்குக் கருணைக்கடலென்று பெயர்?
09/04/21 --லினிரா
பி.கு: அமெரிக்காவில் வாழும் எனது இனிய நண்பர் முனைவர். திரு. ப. அர்ஜூனின்
மகன் தன் நாற்பதாவது வயதில் அகால மரமணடைந்தார். இந்தக் கவிதை அவரின் நினைவாக!
No comments:
Post a Comment