Friday, June 25, 2021

 

கவியரசருக்கு ஒர் கடிதம்! 

                
சிறுகூடல்பட்டி தந்த சிங்காரக் கண்ணா!

சிந்தையள்ளும் தமிழில் சத்தான

பாடல் பல படைத்த கவிக்கோமானே!

பதின் பருவத்தில், உன் பாடல்களைப்

பாடித் திரிந்தோம்,பொருள் புரியாமலே!

பின்னாட்களில், வாழ்க்கை வாத்தியார்

பாடமெடுக்க உன் வரிகளின் 

பொருளும் புரிந்தது!

வாழ்க்கையின் புதிர்களும் விளங்கின!                 

கவியரசே!

நீ பட்ட காயங்களெல்லாம்,

உனக்குக் கவிதை வரிகளாயின!

அந்த வரிகளெல்லாம்

மருந்தாயின எங்கள் காயங்களுக்கு!

உன் பாடல்கள்,

நாங்கள் அடிபட்டு, அழுத போதெல்லாம்

தாயின் முந்தானையாக மாறி,

வீழும் கண்ணீர்த் துளிகள் துடைத்தன!

காதலில் தவித்த போது

தடவிக் கொடுத்தன முதுகை!

காதலில் திளைத்த போது

காவியப் பெண்களின்

இல்லா இடைகளாய் மாறி

இன்னிசையயோடு அசைந்தாடின!

வாழ்க்கைப் பயணத்தில்

உற்றாரும், உறவினரும்,

சமயத்தில் நண்பர்களும்,

காலை இடறிவிட,

"மனைவியின் தோள் பற்றி நட!

மலையளவு துயரமும்

மறைந்து போகும் மேகத்தை போல!' "என்றாய் நீ!

வாழ்க்கைக் காட்டில் நாங்கள்

வழி தெரியாமல் திகைத்த போது,

"பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்!

காட்சி கிடைத்தால் கவலை தீரும்!”

என்ற வாழ வழி

சொல்லித் தந்த செம்மல் நீ!              

எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வி

எட்டாக் கனியாயிற்று உனக்கு!

ஆனாலும் என்ன,

கம்பனும்,புகழேந்தியும்,வள்ளுவனும்,வள்ளலாரும், 

சங்கப் புலவர்கள் பலரும், பட்டினத்தடிகளும்,

தவமிருந்தனர் உன் வீட்டு வாசலில்,

தங்கள் சொல்லாட்சி

உன் ஆட்சியாக வேண்டுமே

என்ற கவலையில்!   

கம்பன் கண்டதோ ஓரிரு வண்ணம்!

நீ கண்டதோ ’பால் வண்ணம்’ முதல் பல வண்ணம்!         

ஓர் சுவை தான் தேனுக்கு உண்டென்று நாங்கள் அறிவோம்!

ஆனால், பல் சுவைத் தேனை பருகத் தந்தவன் நீ!

கவிஞர் பலரும் பெண்ணை பல விதமாய் வருணிக்க

நீயோ பெண்ணையே ’கலை ’யாகக் கண்டாய்!

’சந்தித்த வேளையில் சிந்திக்காமல் கொடுப்பதுதான் காதல்!”

என்று காதலுக்கு உரை எழுதியவன் நீ!

”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!”

என்று தாம்பத்தியத்திற்கு இலக்கணம் வகுத்தவன் நீ!

’முதிரா கதிரையும்’ ’முளைக்காத சொல்லையும்’

உவமைகளாக்கி எங்களுக்கு

உன்மத்தம் பிடிக்கச் செய்தாய்!

தமிழ் இலக்கணத்தையும் இலக்கியத்தையும்,

உன் வரிகள் போல

ஆரே சொல்லித்தர வல்லார்?

உன் பாடல்களால்

பாமரர்களில் வாயிலும் கமழ்ந்தது தமிழ்;

புகுந்து புறப்பட்டன வாழ்வியல் தத்துவங்கள்!

"ஆண்டவன் எங்கே?" என்று

ஆளாய்  நாங்கள் பறந்த போது,

"அனுபவமே ஆண்டவன்!"

என்ற அரும் பெரும்

தத்துவம் சொன்னவன் நீ

"இறைவா!

எனக்கொரு வரம் தா!

இன்னும் பல பிறவிகள்

நானெடுக்க வேண்டும்

ஒவ்வொன்றிலும்

தமிழனாய் பிறக்க வேண்டும்,

கவியரசின் கவியமுதை

அள்ளி அள்ளி பருக வேண்டும்!"

                -லினிரா 26/06/21 

ReplyForward

 

 

No comments:

Post a Comment