கடவுளும்
காரிகையும்
கோயில்
வாசல்:
காரிலிருந்து
இறங்கினாள்
காரிகை!
காலணி
வைக்க மறைவான
இடம்
தேடினாள்!
ஆய்ந்து, ஆய்ந்து,
ஆங்கோர்
மூலையில்
அதை
வைத்தாள்!
கயல்
விழிகளை சுழலவிட்டாள்,
சுற்றும்
முற்றும்!
"கடவுளே!
யாரும்
பார்க்கவில்லை
என் காலணிகளை!
நேற்றுதான்
வாங்கினேன்!
ஆயிரம்
ரூபாய்!"
கடவுளுக்கு
சேதி பறந்தது!
காலணி
காப்போனை
அவள்
பார்த்தாள் அச்சமுடன்:
"திருடிக்
கொள்வானோ?"
கள்ளம்
கொள் காரிகைக்கு
காலணியைக்
காக்க,
காசுகொடுக்க
மனமில்லை!
***
கருவறையில்
கடவுள்!
எதிரே
பக்தை-பக்திப் பிழம்பு!
உதடுகளில்
கடவுள் ஜபம்
உள்ளத்தில்
காலணி தவம்!
பூசை
முடிந்து திரும்பினால்
காலணியைக்
காணோம்!
கண்களில்
எரிந்தது கோபம்!
நவீன
கண்ணகி
நீதி
கேட்டாள் கடவுளிடம்:
"எங்கே என்
காற்செருப்பு?"
பயந்து
போனான் பகவான்!
"எரித்து
விடுவாளோ?"
எம்
பெருமான் நடுங்கினான்!
"அம்மா!
உங்கள் காலணி இங்கே!"
அசிரீரி
ஒலித்தது!
கைகளில்
காரிகையின்
காலணியுடன்
அழைத்தவன்,
காலணி
காப்போன்!
சீறி
வரும் சிங்கமென
அவனை
நோக்கி நடந்தவள்,
அவன்
கரங்களிலிருந்த
காலணியைப்
பறித்தாள்;
காசை
நீட்டீனாள்!
காலணி
காப்போன்
தன்
தலைக்கு மேல்
அசைந்தாடிய
அட்டையை
விழிகளால்
சுட்டினான்:
"இலவச
காலணி காப்பகம்!"
காசால்
கல்லாகிப் போன
காரிகை
கர்வத்துடன்
கடந்து
போனாள் அவனை!
கடவுளுக்கு
போன மூச்சு
திரும்பி
வந்தது!
---லினிரா 17/08.21
No comments:
Post a Comment