Sunday, March 21, 2021

 

கல்லூரிப்பூக்கள்-2                                      21/03/21

     கைபேசி எனக்கு எப்போதும்

     என் கை தொடாத பேசிதான்!

     எப்போதாவது நாங்கள்

     இசைவது வழக்கம்தான்

     அபூர்வமாக மாமியார் மருமகள இசைந்திருப்பது போல!

ஆனால். இப்போதெல்லாம் கைபேசி ஒலிக்கும் போது

அதைப் பாய்ந்து சென்றெடுக்கிறேன்

காதோரம் வைத்து அணைத்துக் கொள்கிறேன்!

கைக்குழந்தையை அணைப்பது போlல!

ஏனிந்த மாயாஜால மாற்றம்?

எல்லா புகழும் “நண்பா!” என்று தன் நண்பர்களை

அன்று போல் இன்றும் அன்பொழுக அழைக்கும்

அருமை நண்பன் கந்தசாமிக்கே!

கருகிக் கொண்டிருக்கும் ‘சோலை’யில்

தென்றல் தவழ்ந்தது! கருணை மழை பொழிந்தது!

கந்தன் கருணையால்!

                      *****

கல்லூரியில் சேர்ந்தோம்,

கசடறக் கற்றோம்.

வேலைக்குப் போனோம்!

ஓய்வின்றி உழைத்தோம்!

மனைவி வந்தாள். மக்கள் வந்தனர்

ஆசைகள் பெருகின,

ஆலாய் பறந்தோம்,

அவற்றைத் தீர்த்துவைக்க!

கூடொன்றைக் கட்டினோம்

குடியிருக்க! கூடி மகிழ!                           

காலச் சக்கரம் சுழல.

குஞ்சுகளெல்லாம் தனிக்கூடு

தேடிப் பறந்தன!

எப்போதாவது வளர்த்த பறவைகள் தேடி வரும்

தங்கள் வேலை முடிந்ததும் பறந்து போகும்!

சில அண்டை மாநிலங்களில்!

சில அயல் நாடுகளில்!

’வந்து போன நாட்கள்’ வந்து வந்து தாலாட்டும்

தூக்கம் வராது; துக்கமே வரும்!

நலிந்துபோன உறவுக் கயிறுகளில்

நைந்து போன நினைவுத் துணிகளை உலர்த்தினோம்!

ஒரு நாள் வந்த மென்தென்றல்

’துணி’களைத் தொட்டுத் தழுவியது

உடுக்கைச் சுருக்கங்கள் சுருங்கிப் போயின!

உலர் சலவை செய்த

உடுப்புக்களாய் அவை மாறிப் போயின !

தென்றலுக்குப் பேருண்டோ?

முகவரியும் தானுண்டோ?

இந்தத் தெனறலுக்கு முகவரி உண்டு

பேரும் உண்டு!

பொதிகை மலைத் தென்றல் அல்ல இது!

பெருந்துறையிலிருந்து கிளம்பி வந்து

‘நண்பா!” என்றைழைத்து,

கண்ணதாசன் கவிதை வரிகளைப் போல

எங்கள் இதயங்களை

இதமாய் வருடிக் கொடுத்த

கந்தசாமி தென்றல் இது!                                   

கந்தசாமி இல்லையேல்

தனித்தனித் தீவுகளாய்

தடுமாறிப் போயிருப்போம்!

கந்தசாமி இணைத்தார் எங்களை

நட்பால், பாசத்தால்!

எல்லாம் இனி சுகந்தான்!

எங்கும் இன்பமயம் தான்!

                       ***

மீண்டசொர்க்கம் நான் கண்டது எப்படி?

இதொ இப்படித்தான்:

ஓரு நாள் இரவு மணி ஏழு

அலைபேசி அழைத்தது

சலித்துக் கொண்டே எடுத்தேன்

காதில் தேனாய் ஒலித்தது

“நண்பா!” என்றொரு சொல்!

மனதில் நினைவுப் பூ மலர்ந்தது!

‘கந்தசாமி?’ என்றேன்

’ஆஹா!’ சிரிப்பு மறு முனையில்!

உடனிருந்த மனைவி ’ங்கே’ என்று விழிக்க

மனதில் நானும் கந்தசாமியும் நினைவாடை நெய்தோம்!

அரசியல் முதல் ஆன்மிகம் வரை அலசினோம்!

நெய்த ஆடை காஞ்சிப்பட்டோ? காசிப்பட்டோ?

மங்கையர் உடுத்தும் பட்டு,

மங்கிப் போகும் பட்டு!

எங்கள் மனப்பட்டு

என்றும் மங்காப்பட்டு!

மங்கையர் பட்டு-                                                        

ஒரு நாள் பட்டு

எங்கள் மனங்கள் நெய்த பட்டு

நாங்கள் தினம் தினம் உடுத்தும் பட்டு

அணிய, அணிய அழகு மிளிரும் அபூர்வ பட்டு!                    

                            ***

தினம் தினம் அலைபேசியில் ஒரு புதிய(?) நண்பர் அழைப்பு!

(பழம் கள் -போதை அதிகம்!) 

1970-களில் பூ.சா.கோ கல்லூரியில்

பட்டப்படிப்பு முடித்த நண்பர்களை

பூச்சரமாய் தொடுத்தது

பாசமிகு நண்பன் கந்தசாமியின்

நேசமிகு உழைப்பு!

எல்லா நண்பர்களையும்

ஆரத்தழுவ ஆசைதான்

ஆனால் கொரானா?

அதனாலென்ன, காத்திருப்போம்!

நண்பர்களே!

‘காலம் ஒரு நாள் மாறும்!

நம் கவலைகள் யாவும் தீரும்!’

அந்த நாள் வரும் வரை

பேசிக் கொண்டிருப்போம்…

பேசிக் கொண்டே இருப்போம்,

பறவைகள் பறந்து போனலென்ன,

பலவீனம் அணைத்தால்தானென்ன,

கைபேசி இருக்க கவலையெதற்கு?

 

‘நண்பா’!, கந்தசாமி,                                         

நெஞ்சார்ந்த நன்றிகள் உனக்கு!                                         

’இணைப்புப் பாலம் நீ ‘சமைத்த’ போது,

’இதென்ன வேண்டாத வேலை!”

என்று எள்ளி நகையாடாமல்,.

உன்னை ஊக்கப்படுத்திய

உத்தமி உன் மனைவிக்கு,

என் சிரம் தாழ்ந்த வணக்கம்!

வாழ்க வளமுடன் பல்லாண்டு!

பல கோடி நூறாயிரமாண்டு!

                                       ---லினிரா.    

                              ---------------------------