Sunday, July 18, 2021

 

வெளி நாட்டில் வாழும்
பிள்ளைகளைப் பெற்ற
(அ) பாக்கியவான்களுக்கு
சமர்ப்பணம்!

வெளி நாட்டில்
வாழும் பிள்ளைகளும்
பேரக் குழந்தைகளும்
விமானத்தில்
வந்திறங்கும் போது
வெகு சுகமாய்த்தானிருக்கும்
பேரக் குழந்தைகள்
ஓடி வந்து கட்டிப்பிடித்து
சொர்க்கத்தைக் காட்டும்!
அவர்கள் இருக்கும்
அத்தனை நாட்களும்
இன்பம் இதயத்தில்
அரியாசனம் போட்டு
அமர்ந்து கொள்ளும்!
ஊர் சுற்றல்,
உணவு விடுதிகள்,
உடைகள் வாங்குதல்,
உறவினர் இல்லம் செல்லல்,
உறங்கு முன் நடு நிசி வரை
கதைகள் சொல்லலென
நிகழும்,
சுகங்களின் சங்கமம்!
வெளி நாட்டு நயத்தகு
நனி நாகரீகத்தால்
அடக்கி வைக்கப்பட்டிருந்த
ஆதிப்பிறவியின் சேட்டைகள்
அத்தனையும் அரங்கேறும்
தாத்தா,பாட்டி வீடுகளில்!
தெருவில் விளையாடும்
பேரக் குழந்தைகள்
திடீரென வீட்டுக்குள் நுழைந்து தரும்,
அரைத் தூக்கத்திலிருக்கும் தாத்தாவிற்கு ஓர் முத்தம்!
அப்படியே சமையலறை ஓடி
அங்கே வடை சுடும்
பாட்டிக்குத் தரும்
இடுப்பில் ஒரு சுட்டிக் கிள்ளு!
அப்போதெல்லாம்
உள்ளத்தில் ஊறும் உற்சாகம்
சாமிக்கே சவால் விடும்:
"இப்படியொரு இன்பம்
கண்டதுண்டோ நீ?"
குழந்தைகள் இருக்கும்
காலம் முழுவதும்
வீட்டிற்கு வசந்த காலம்!
கடவுளர் அறைக்கு மட்டும்
கார் காலம்!
காலச்சக்கரம் சுழல,
காட்சிகள் மாறும்!
''-வில் ஆரம்பித்தது
'அஃகு'-வில் முடியும்
அந்தக் காலையும் புலரும்!
சேகரித்த பொருட்களை
பெற்றோர்கள்
பெட்டிகளில் அடைக்க,
பேரக் குழந்தைகள்
துக்கத்தை
  மனதில் அடக்கி,
தாத்தா, பாட்டியை
சுற்றிச்சுற்றி வரும் காட்சி...
கூரற்ற வாளென
இதயம் அறுக்கும்!
விமான நிலையம் செல்ல
வாசலில் வண்டி வந்து நிற்க,
அரங்கேறும்
ஆசிர்வாதப் படலம்!
காலில் விழுந்த குழந்தைகள்
கட்டிப் பிடித்து கொண்டு,
"தாத்தா, பாட்டி
பத்திரமாய் இருங்க!"
   என்று தேம்புகையில்,
கண்களில் குளம் கட்டும்
கண்ணீர்!
மறு நாள்,
குழந்தைகள் கைகள் பட்டு
கலைந்த விட்ட பொருட்களை
சரி செய்கையில்,
மனதைக் கொல்லும்
மலையளவு துயரம்!
வாயைத் திறந்து
ஏதாவது பேசினால்,
மனைவி உடைந்து போவாள்
என்று கணவனும்,
இவன் உடைந்து போவான்
என்று அவளும்
மெளனம் காக்க,
வீடெங்கும் நிறைந்திருக்கும்
குழந்தைகளின்
  நறுமணம்;
கூடவே வெறுமையும்!
இப்போதும்,
காலச்சக்கரம் சுழல்கிறது,
மிக...மிக...மெதுவாக!
     ---லினிரா 19/07/21 

ReplyForward