Sunday, August 22, 2010

வலைப்பூ வந்த கதை




அவன்,

எப்போதாவது வருவான்,

எங்கிருந்தாவது வருவான்,

ஏதாவது பேசிக்கொண்டிருப்போம்!

ஏதும் சொல்லாமலெ,

சட்டென்று மறைந்துபோவான்

செப்பிடு வித்தைக்காரன் போல!!



ஒரு நாள் அவன் வந்தான்

வாட்டமுற்று அமர்ந்திருந்தேன்

“வருத்தம் என்ன?” என்றான்.

“வலைப்பூ ஒன்று வேண்டும் !” என்றேன்.

“வண்ணப்பூ எது வேண்டும் சொல்,

வானிலிருந்தாவது பறித்து வருவேன்;

வலைப்பூ என்கிறாயே ,

வாழ்நாளிள் கேள்விப்பட்டதில்லையே!” என்றான்.

“வலைப்பூ என்றால் எண்ணங்களை

வலைத்தலமெனும்

இணையத்தில் சொல்லும் வழி!“என்றேன்.

அவன் சொன்னான்:

“எங்கள் ஊரில்

காசுமில்லை, கணிணியுமில்லை,

இதயங்களில்லை, இணையுமுமில்லை

எழுத்தும் இல்லை, எண்ணங்களுமில்லை

என் செய்வேன்?“.

கண்கள் கலங்க,

“கருத்துச் சொல்லும்

வலைப்பூவிற்கு, நண்பா,

வழியொன்று சொல் “ என்றேன்.

கண்கள் மூடி நின்றான் கண நேரம்;

கை பற்றி, கனிவுடன் சொன்னான்:

“சிங்கப்பூர் சென்று சிவனருள் பெற்றால்

சித்திக்கும் உன் சித்திரக்கனவு! ‘

”குடியிருக்கும் குக்கிராமத்திலிருந்து

குவலயம் போற்றும் சிங்கப்பூருக்கா? எப்படி?” என்றேன்.

“சேதி வரும் மகளிடமிருந்து, பொறுத்திரு!”

சொல்லிவிட்டு சடுதியில் மறைந்தான்.





அவன் சொல்லிப் போய்

ஆயிற்று ஆறு மாத காலம்!

சிங்கப்பூரில் வாழும்

சிந்தனைச் செல்வி அழைத்தாள் ஒரு நாள்:

(மகள் ஓர் ஆராய்ச்சி மாணவி)

“அப்பா என் வீட்டுதோட்டத்தில்

அழகாய் இன்னுமொரு பூ!

வந்து பாரேன்! வாழ்த்துச் சொல்லேன்!!” என்றாள்.

அகமெலாம் மலரச் சொன்னேன்:

“அவசியம் வருகிறேன் கண்ணே!!



சிங்கப்பூரென்ன ,

சிங்காரச் சென்னையா? இல்லை,

செம்மொழிக் கோவையா?

சிந்தையில் நினைத்தவுடன்

சிட்டாய் பறந்து போக?

அதற்கு,

பணம் புரட்ட வேண்டும் ,

பலதும் வாங்க வேண்டும்,

கடவுச் சீட்டு , நுழைவுச்சீட்டு வேண்டும்,

கவனிப்போர் அழைப்பும் வேண்டுமே!

இவையெல்லாம் பெற

இமைப்பொழுதென பறந்தன

இரண்டு மாத காலம்!



கடைசியில், ஒரு நள்ளிரவில்,

கடல் கடந்து பறந்து போனோம்!

நானும்,

என் கண்ணில் நீர் வழிந்தால்

எப்போதும் சிரிக்கும் என் மனைவியும்!!

மகள் பெற்ற மழலையைக் கண்டோம்,

மறைந்து போயின அலுப்பும் சலிப்பும்!



அடுத்த நாள் முதல்

அழகு நகர் சுற்றிப் பார்த்தோம்:

வானுயர் கட்டிடங்கள்,

வாமன மனிதர்கள்,

கறுப்புக் காஞ்சிப் பட்டுபோல்

கார்கள் வழுக்கிச் செல்லும் சாலைகள்,

சிரிக்க மட்டுமே தெரிந்த சிங்காரிகள்;

சிங்காரிகள் இடுப்பில்,தோளில்,முதுகில்,

அழத்தெரியா அழகுப் பாப்பாக்கள்,

சலிக்காமல் பார்த்தோம்!

சன்மம் எடுத்த பயன் பெற்றோம்!!



ஒரு நாள் முன்னிரவு,

முழு நிலா காய்ந்தது வானில்!

வண்ண விளக்குகள் ஓளிர்ந்தன நகரில்!

வான்நிலா அழகா, வண்ண ஊர் அழகா?:

விவாதித்துக் கொண்டிருந்தோம்

சிவா மாப்பிள்ளையும், நானும்.

சட்டென்று மனதில் மின்னலடித்தது,

“பட்” டென்று நண்பன் சொன்னது நினைவிற்கு வந்தது;

சற்றே தயங்கி, பைய, பைய,

மாப்பிள்ளையிடம் கேட்டேன்:

“மாப்பிள்ளை! எனக்கொரு வலைப்பூ வேண்டும்!”

“அதென்ன வலைப்பூ?” என்று அவர் கேட்க,

அதான் “பிளாக்” என்றேன்.

“பூ, இவ்வளவு தானா” வென,

புன்னகை பூத்தபடியே,

மடிக்கணியைத் தட்டினார் மாப்பிள்ளை!

அங்கே,

மலர்ந்ததொரு வலைப்பூ, எனக்கே எனக்காக!!

மாப்பிள்ளை சொன்னார்:

“மாமா! இதோ உங்கள் வலைப்பூ!

உண்மையில் இது பூவல்ல, பூக்கூடை!

உங்கள் எண்ணப் பூக்களை

கொட்டுங்கள் இதில் இனி!!”

மட்டற்ற மகிழ்ச்சியுடன்,

சாவிப் பலகையில் தட்டமுடியா நிறைவுடன்’

நன்றி சொன்னேன் அவருக்கு!



மெது,மெதுவாய் எண்ணங்களை

போட முயன்றேன் “பூக்கூடை” யில்,

போட்டது எதுவும் ஒட்டவில்லை அதில்;

கடைசியில் ஒட்டாய் கவிழ்த்தும் பார்த்தேன்

“கிழே” போன எண்ணங்களெல்லாம்

“மேலே பறந்து வந்து மீண்டும்

மனப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டது!

( நியூட்டனின் நான்காம் விதியோ?)



என்ன பிரச்சனை?

எனக்கும் புரியவில்லை பல நாள்!

அறிவு தெளிந்த நாள் முதல்

ஆத்ம நண்பனாய் பழகியவனை

அழைத்து அழைத்துப் பார்த்தேன்

அவன் வரவேயில்லை!

எங்கிருந்து அழைத்தாலும் வருவேன்,

எப்போது அழைத்தாலும் வருவேன்,

என்றானே,

“ஏனிப்படிச் செய்கிறான்?”

எண்ணி எண்ணி மருகினேன்!

மனம் தளர்ந்தேன்!!



அயலூரானால் விருந்து மூன்று நாள்,

அயல் நாடானால் அதுவே முப்பது நாளன்றோ?

புழுதி இல்லா சாலைகளும்,

சாக்கடை வாசமில்லாக் காற்றும்,

மின்வெட்டில்லா நாட்களும்,

இரைச்சல் இல்லா மனிதர்களும்,

சில நாட்களில் போரடித்துப் போனது!

முப்பதாம் நாள் முன்னிரவில்,

மீண்டும் பெற்ற மண்ணை மிதித்தோம்!





முப்பது நாள் கழித்து,

ஊர்ப்புழுதி உடம்பில் பட்டதும்

சிலிர்த்தது மேனி;

நாற்றம் நுழைந்தது

நாசி விடைத்தது:

இரைச்சல் கேட்டதும்

இரண்டு காதும் குளிர்ந்தன;

கட்டிங் அடித்துவிட்டு,

நடு நிசியில், தெருவில்

கட்டிப் புரண்டு கொண்டிருந்த

“நடுநிசிநாய்“ களைக் கண்டதும்

“பாரு”க்குள்ளே நல்ல நாடொன்றோ

நம் நாடெனெ மனம் கூத்தாடியது!!!



ஊர் வந்து சேர்ந்த உற்சாகம்

மெல்ல மெல்ல வடிந்தது;

நாட்கள் நகர, நகர,

“வலைப்பூ” என்னை வாட்டியது;

இடையிடையே நான் பெற்ற செல்வம்

சிங்கப்பூரிலிருந்து செல்லில் உசாவினாள்:

“அப்பா! வலைப்பூ இன்னும் பூக்கவில்லையா?”

(அமமாவிடம் பேச விஷயம்

ஆயிரம் இருந்தன அவளுக்கு;

ஆனால் என்னிடம் பேச

இதுமட்டுந்தான் விஷயம் அவளுக்கு!)

அருமை மகள் கேட்ட போதெல்லாம் சொன்னேன்:

“வலைப்பூ இன்னும் வாடவில்லை,

பொறுத்தார் வலைப்பூ ப(றி)டிப்பார் மகளே!”

சங்கடத்துடன் கழிந்தன பல நாள்,

சட்டென்று புரிந்தது ஒரு நாள்:

“வலைப்பூ தலைப்பூ வசமாகவில்லை!”

(வலைப்பூ அமைத்தவுடன் மாப்பிள்ளை கேட்டார்:

“மாமா, வலைப்பூ பெயர்?”

ஊரையே வெள்ளையடிக்கும் கித்தாப்பில் சொன்னேன்:

“பசுமை வானம்!”)

“பூ” கேட்டது வேறு,

“கொட்ட” நான் நினைத்து வேறு;

சொல்ல நினைத்த சேதிகளுக்கும்

தட்டி வைத்திருந்த தலைப்புக்கும்,

பொறுத்தமில்லை சற்றும்;

இடுப்பளவு முடியிருக்கும் சாமியாரை,

“இந்தா! மொட்டைச்சாமி!!”என்று அழைப்பது போல்!

கொட்ட வேண்டிய சேதிகள்

‘வேரில் பழுத்த பலா போல்’

கொட்டிக் கிடந்தன மனத்துள்!

வேண்டியது பொறுத்தமான பெயரொன்றே!

சிக்கல் புரிந்ததும் சிந்தையில் உற்சாகம்!

ஆனால்,

அறிவு வலையை,

ஆழ்கடலில் பல முறை வீசியும்

அகப்படவில்லை எந்த மீனும்;

வாரம் பல காத்திருந்தும்

வலைப்பூ தலைப்பூ சிக்கவில்லை!

கடைசியில், ஒரு நாள் பிற்பகல்,

கட்டிலில் பாதிக்கண் மூடிப் படுத்திருந்தேன்,

(தனியாக, அட, தனியாககத்தான், நம்புங்கள்!)

ஏ.சி.யின் சுகமான மென் குளிர் காற்றில்,

இதய ஓசையே இன்னிசையாக,

இன்பமானதொரு மயக்கத்தினிடையே,

இதயத்தின் உள்ளிருந்து ஒரு குரல்:

“முட்டாள்! படுக்கையறையைச் சுற்றிப் பார்,

முகிழ்த்திடும் தலைப்பூ”என்றது.

கண் விழித்தேன்,

கனவா? நனவா? முழித்தேன் சற்று நேரம்;



எதற்கும் முயன்று பார்ப்போமென

என் கண்களைச் சுழல விட்டேன்;

அறையைச் சுற்றிச்சுற்றி வந்தும்

அறிகிலேன் எதையும்!

கனவேதான் என முடிவு செய்து,

கண்களை மீண்டும் மூடினேன்.

“மடையா மீண்டும் பார்”

முழங்கியது அந்தக் குரல்!

“யார் நீ?” என்றேன்

“நண்பா! என்னையும் மறந்தனையோ?”

என்று கேட்டடான்; மறைந்தான்.





வாகான இரை தேடி

வானில் வட்டமிடும்

வல்லூறு போல்

என் கண்களைச் சுழற்றினேன் மீண்டும்

அங்குலம் அங்குலமாக;

எதிரே தெரிந்தது என் கணிணி மேஜை,

தகரமும் மரமும் கலந்து செய்த

வினோதக் கலவை அது!

எதன் மீது வைக்கலாம்

என யோசித்து,

அதன் மீது வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள்

ஐம்பது, அறுபது தேறும்!

சாவிப்பலகையில் சாவியை துழாவுவர் பலர்!

சாவிப்பலகையையே துழாவுபவன் நான்!!



என் கணிணி மேஜை,

எங்கள் வீட்டு அங்காடித் தெரு!!

அன்பு மனையாளின் அளவற்ற கிளிப்புகள்’

ஒட்டும் மற்றும் ஒட்டாத பொட்டுகள்-

இப்படி அவளின் அளவற்ற பொருட்களுக்கு

எப்போதும் இடமுண்டு அதன் மீது!

என் மழிப்பானுக்கும்,

அவர்தம் உற்றார் உறவினர்க்கும்

அவ்வப்போது அதன் மீது இடமுண்டு!!



க. மேஜைக்கு அடுத்தபடி,

கண்ணாடிக் கதவு,

கதவருகே நின்றால்

கண் முன்னே விரியும்

கண்கொள்ளாப் பச்சை வயல் காட்சி!

ஐந்தடி தூரத்தில் இரண்டு தென்னை மரங்கள்

அதில் ஓடி விளையாடும் ஜோடி அணில்கள்!

அவ்வப்போது சிந்து பாடும்

ஐந்தாறு தவிட்டுக் குருவிகள்!

கண்ணாடிக் கதவையொட்டி,

வலப்புறம் நகர்ந்தால்,

மனைவியின் ஒப்பனை“அரங்கம்”,

அப்புறம்,

வான் கடவுளர் வீற்றிருக்கும்

பூஜை அலமாரி

கடவுளர்க்கு கீழ் அடுக்கில்,

காலநேரம் பார்க்காமல் என்னுடன்

கதைத்திருக்கும் கணக்கற்ற புத்தகங்கள்;

அலமாரியை ஒட்டி இடப்புறம்,

கதைகள் பல சொல்லும் கட்டில்கள்;

கட்டிலுக்கு அப்பால்,

கடப்பக்கல் மேஜை!

ஆஹா! என்ன் இல்லை அதன் மீது?

மருந்து டப்பாக்கள்,

மாய்ந்து போன வானொலி,

எலி மருந்து, எறும்பு மருந்து,

சில்லறைப் பெட்டி,

சின்ன கணக்கு நோட்டு,

நாட்டு நடப்புச் சொல்லும்

நாளிதழ் ஒன்றிரண்டு,

நல்ல படம் போட்ட

வார இதழ் ஐந்தாறு,

பல்குச்சி டப்பா,

சொல் வடிக்கும் பேனா,

கைவிரல் பயிற்சிக்கு,

கையளவு கைப்பந்து,

( நன்றி:“சிக்குன் குனியா!”)

கைவிளக்கு, கசங்கிய காகிதங்கள்,

கோடாலித் தைலக்குப்பி,

களிம்புகள் சில,

இந்தக் குப்பைக்கு நடுவே,

குப்பத்து அரசன் போல்

அந்தக் கால “ஓரியண்ட்” மேஜை விசிறி;

இதற்கப்புறம் என் துணி பீரோ,

அதற்கடுத்து கழிவறைக் கதவு,

பின், தென் புறச்சுவரில்,

அலமாரியில்,

அருமை மனைவி

காசு போட்டு வாங்கிய

கணக்கற்ற சேலைகள்!

அப்புறம், வரவேற்பறைக் கதவு,

இவையன்றி, வேறெதையும் கண்டிலேன்!!





மனம் வெறுத்துப் போனேன்:

மனதில் மீண்டும் அந்தக் குரல்:

“நல்லவர் கூட பொய்யுரைப்பர்,

நானென்றும் பொய்யுரைப்பதில்லை!

நண்பா! மீண்டும் பார்!“



கடைசி முறையாக,

கண்களைச் சுழல விட்டேன்;

ஆஹா, தென்புறச் சுவரும்

மனைவியின் ஒப்பனை மேடையும்

கைகுலுக்கும் சந்திப்பில்,

ஒருக்களித்துச் சாய்ந்து

ஒய்யாராமாய் ஒருமாதிரி

நின்றிருந்தது அது

நிறைமாத கர்ப்பிணி போல்!!





(அது சரி,

அவன், எவன்?

என்கிறீர்களா,

கண நேரம்,

கண் மூடிச் சிந்தியுங்கள்,

அவன் எவனென்று புரியும்!)

அன்புடன்,

லினிரா.

1 comment:

  1. kanmudimudi sindithen atthu verondrum illai ..........kattapai....he he he....

    thappuna thitathinga.............


    regards,
    raja,sabari

    ReplyDelete